ஆர்.கே.எஸ். சம்சுகனி, டி.மாரியூர்

காசு கொடுத்து கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் காசு கொடுத்து வாக்குகள் வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்?

காசு கொடுத்தால் பொருட்களை வாங்கிவிடலாம், ஆனால் வாக்குகளை வாங்குவது நிச்சயமில்லை என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்துவிட்டார்கள் தமிழக மக்கள். திமுகவுக்கு காசும் போச்சு, ஓட்டும் போச்சு. நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் கமிசன் முன்வந்தால் உற்சாகமாக வாக்களிக்கத் தாங்கள் தயார் என்பதையும் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தங்களுக்குள்ள நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். "நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" எனும் நக்சலைட்டுகள் - மாவோயிஸ்டுகள் வாதம் எல்லாம் வெகுமக்களை இழிவுபடுத்துவதாகும்.

 

எஸ்.முகம்மத் ஷுஜப், காயல்பட்டினம் - 4

மே மாத "தீராநதி" இதழில் தமிழவனின் "கம்யூனிஸ்டும் தமிழும்" கட்டுரை படித்தீர்களா? உங்கள் பதிலென்ன?

பதில் தனிக்கட்டுரையாகத் தரப்பட்டுள்ளது. படித்துக்கொள்க.

 

கே.உதயகுமார், தஞ்சாவூர்

63 நாயன்மார்கள் பஞ்சபூதங்களாகிவிட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காமெடி பண்ணியிருப்பது பற்றி...?

திமுகவை மிரட்டி 63 இடங்களை வாங்கி முடிவில் 5 இடங்களில் மட்டும் ஜெயித்திருக்கிறது காங்கிரஸ். அந்த 5 இடங்களில்கூட பி.ஜே.பி. சற்று கணிசமான வாக்குகள் பெற்று ஓட்டைப்பிரித்ததால்தான் வெற்றி. காங்கிரசைத் தமிழக மக்கள் குறிவைத்துத் தாக்கி வீழ்த்தியிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் மத்திய காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றத் தவறியதற்கு அவர்கள் கொடுத்துள்ள கும்மாங்குத்து இது! காங்கிரஸ் தலைவர்கள் வடிவேலுவோடு சேர்ந்து இனி காமெடி பண்ணவேண்டியதுதான்! "ஸ்டார்ட்டிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையப்பா" என்று அவர் ஒரு படத்தில் காமெடிசெய்வார். அது அவருக்கும் பொருந்தியது, காங்கிரஸ் தலைவர்களுக்கும் பொருந்தியது!

 

ரெ.மருதசாமி, மயிலாடுதுறை

"உலகிலேயே மிகப்பெரிய போதை கோட்பாடு, கொள்கை, நம்பிக்கைதான். இவற்றின் அடிப்படையில் எழுதப்படுவது இலக்கியமல்ல; அது தலித் இலக்கியமாக இருந்தாலும் "(அம்ருதா ஏப்ரல் 2011) என்று திமுக கரைவேட்டி கட்டிய எழுத்தாளர் இமையம் எழுதுகிறாரே?

அந்தக் கட்டுரையின் படி மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றைத்தான் அவர் "போதை" என்கிறார். அவற்றால் ஈர்க்கப்பட்டு எழுதப்படும் படைப்புகள் இலக்கியங்கள் ஆகாது என்கிறார். அவர் ஒன்றை மறந்துவிட்டார் - இந்தக் கோட்பாடுகளினால் கவரப்படாத எழுத்தாளர்களுக்கும் கோட்பாடு உண்டு என்பதை. அவர்கள் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ கோட்பாட்டின்படி எழுதுகிறார்கள். கோட்பாடு இல்லாத எழுத்தாளரே இருக்க முடியாது. வாழ்வின் உள்ளார்ந்த முடிச்சுகளைத் தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்துவது என்றாலே அதிலொரு கோட்பாடு வந்து உட்கார்ந்துவிடும் - அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதில். மனிதன் எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறான் என்பது ஒரு சமூகவியல் கோட்பாடு என்றால், அவன் மாறிக் கொண்டேயிருக்கிறான் என்பது அதற்கு நேர்மாறான சமூகவியல் கோட்பாடு. கூர்ந்து நோக்கினால் இந்த இரண்டில் ஒன்றை அல்லது அதன் சாயலைக்கொண்டே எழுதுகிறார்கள் என்பது புலப்படும்.

இமையம்கூட இப்படிப் புலம்பியிருக்கிறார் - "தாராளமயக் கொள்கையால் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் அசுரத்தனமான வளர்ச்சி, நவீன மயமாக்கல், உலகமயமாக்கல், தொழில்நுட்பப் புரட்சி போன்றவற்றால் தமிழ் சமூகத்தில், மக்களின் மனோபாவத்தில், சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, இதில் தலித் மக்கள் அடைந்த பாதிப்புகள் என்ன என்பது குறித்த பதிவுகள் போதிய அளவுக்கு இல்லை. எலிக்கறியைத் தின்றவர்கள் யார்? கால்காணி, அரைக்காணி என்று வைத்திருந்த நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு பெரு நகரத்துசேரிவாழ் மக்களாக மாறிக் கொண்டிருப்பவர்கள் தலித் மக்கள்தானே. இது தலித்களின் பிரச்சனை இல்லையா?" இது கோட்பாடு, கொள்கை, நம்பிக்கை இல்லையா? இந்த "போதை" இல்லாவிடில் நல்ல இலக்கியம் எப்படிப் பிறக்கும்?

 

எஸ்.ஞானசேகரன், சேலம்

ஒருவழியாகக் கனிமொழியையும் திகார் சிறையில் அடைத்துவிட்டார்களே...?

"வர வர எல்லோரும் நம்மை 'திகார் முன்னேற்றக்கழகம்'னு கூப்பிட ஆரம்பிச்சாங்க" என்று "தினமணி" கேலி செய்கிற நிலைமை வந்துவிட்டது. திமுகவுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தீர்களா? "அவர் செய்யாத குற்றத்திற்காக" தண்டனை பெற்றிருப்பதாகக் கலைஞர் கூறியிருக்கிறார். இந்தக் குற்றத்தைச் சுமத்தியிருப்பது இவரது சொந்தக் கூட்டணி ஆட்சி அல்லவா? இவரது மகனும், பேரனும் பங்கு கொண்டிருக்கும் மன்மோகன் அரசு அல்லவா குற்றம் சுமத்தியிருக்கிறது? ப.சிதம்பரத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ அல்லவா கனிமொழியை "மிகப்பெரிய ஊழலின் கூட்டுச்சதியாளர்" என்று குற்றம் சுமத்தியிருக்கிறது? "செய்யாத குற்றம்" என்றால் ஏன் திமுக அந்த ஆட்சியில் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறது?

ஆ.ராசா கைது செய்யப்பட்டபோதும் இப்படித்தான் கூறினார். அப்படியென்றால் அப்போதே அந்த அரசிலிருந்து விலகியிருக்க வேண்டாமா? இல்லை... இல்லை... ஆட்சியில் தொடருவோம் என்றால் "செய்யாத குற்றம்" என்று தீர்ப்புச் சொல்லக்கூடாது கலைஞர். இவர் என்ன உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியா? விஷயத்தை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட்டு கட்சி வேலையில் இறங்கவேண்டும். ஆனால், பாவம் அவரால் அதுதான் முடியவில்லை தடுமாறுகிறார். கட்சிதான் தனது குடும்பம் என்றார் அண்ணா. இவரோ தனது குடும்பத்தையே கட்சி ஆக்கிவிட்டார். அங்கே ஆரம்பித்தது வினை!

 

வி.கே.ராதாமணாளன், தென்காசி

"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளர்கள் இல்லை" என்று இலக்கிய விமர்சகர் ந.முருகேச பாண்டியன் (இனிய உதயம் மே 2011) கூறியிருப்பதைப் பார்த்தீர்களா?

இவர் எதைச் "சாதனை" என்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். "இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளர்கள் பின் நவீனத்துவப் பார்வையை உள்ளடக்கிய படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்" என்று மகிழ்ந்துபோகிறார். இப்படிப்பட்டவர் யதார்த்தவாதப் பார்வையில் படைப்புகளை உருவாக்கும் இடதுசாரி எழுத்தாளர்களைப் புறந்தள்ளுவதில் ஆச்சரியம் என்ன? அப்புறம் ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்" நாவலை சிலாகிக்கிறார். இப்படிப்பட்டவர் தேனி சீருடையான், ம.காமுத்துரை, சு.வெங்கடேசன், கு.சி.பா,பொன்னீலன், சோலைசுந்தர பெருமாள், டி.செல்வராஜ் போன்றோரின் அண்மைக்கால நாவல்களைக் கண்டுகொள்ளாததில் வியப்பென்ன? மக்களிடமிருந்து விலகிச் செல்லும் அதிநவீன எழுத்து வரும்போது கூடவே இத்தகைய அதிநவீன விமர்சகர்களையும் அது தயாரித்துக் கொள்கிறது. இத்தகைய அதிமேதாவித்தன விமர்சகர்கள் பாராட்டவில்லையே என்று இடதுசாரி எழுத்தாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்கள் பாராட்டினால்தான் யோசிக்க வேண்டும்!

 

எஸ்.பி.கல்யாணசுந்தரம், மதுரை

அண்மையில் நீங்கள் படித்த நூலைப் பற்றிச் சொல்லுங்களேன்?

இந்திராகாந்தியின் நம்பிக்கைக்குரிய செயலாளராக இருந்தவர் பி.என். தார். அவர் எழுதியது "இந்திராகாந்தி, அவசரநிலை மற்றும் இந்திய ஜனநாயகம்" என்பது. சஞ்சய் காந்தி பற்றி இந்திரா பயந்தார் என்று பராபரியாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை என்கிறார் தார். இது பற்றி பல ஆதாரப்பூர்வமான தகவல்களைத் தந்துள்ளார். அதில் நம்மை அதிர வைப்பது சஞ்சய்காந்தி அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் ரகசிய உறவு வைத்திருந்தது. அமெரிக்கர்கள் உதவியுடன் ஆட்சி அதிகாரத்தைத் தானே கையில் எடுப்பது அவரின் இலக்காக இருந்தது என்று பச்சையாகக் கூறியுள்ளார் தார். பல புனைவுகளையும்விட வரலாறு பரபரப்பானது!

Pin It