நூலின் முன்னுரையிலிருந்து...

“என்னிடம் பத்து இளைஞர்களைக் கொடுங்கள்; இந்தத் தேசத்தை மாட்டிக் காட்டுகிறேன்” என்றார் விவேகானந்தர். “தணிக்கைச் செய்யப்படாத மூன்று திரைப்படங்களை எடுக்க என்னை அனுமதித்தால் தனி தமிழ்நாடு பெற்றுத் தருவேன்” என்று சவடால் விட்டார் திராவிட இயக்கத் தளபதி அண்ணாதுரை.

theesmas_450சமூகத்தை மாற்றிக் காட்ட விரும்புபவர்கள் யாரும் எனக்கு ஆளைக் கொடு, அதிகாரத்தைக் கொடு எனக் கேட்பதில்லை. போராடிப் பெறுவதை கேட்டுப் பெற இறைஞ்சுபவர்கள் பிழைப்புவாதிகள்.

விவேகானந்தரின் ‘பத்து இளைஞர்கள்’ பல்லாயிரம் பேராகப் பெருகி இப்போது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறியாதது அல்ல.

அண்ணாவின் ஆசை அவர் தம்பிகளின் காலத்தில் நிறைவேறி விட்டது. தணிக்கை தேவையில்லை, கேப்பார் கேள்வியில்லை. சினிமாவை விடவும் வல்லமை மிக்க மாபெரும் ஊடக வலைப் பின்னலே அவர்களின் கைக்குள்.

தனித்தமிழ் நாடா... மூச்! மானாடவும், மயில் ஓடவும், டீலா - நோ டீலா சொல்லவும் சந்தை பெரிதாக வேண்டும். அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தால் ரொம்ப நல்லது. அதனால் இந்திய இறையாண்மையின் 24 மணி நேரக் காவலர்களாகி விட்டார்கள் திராவிட குலக் கொழுந்துகள்.

பார்ப்பன - பனியா கும்பலின் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்த தமிழ்ச் சினிமா, இரண்டும் கலந்து ஒன்றான ஒரு சூத்திரக் கும்பலிடம் இப்போது நகர்ந்திருக்கிறது.

கொட்டகைக்குள்ளே இயக்குனரும், வெளியே அதன் தயாரிப்பாளரும் பார்வையாளர்களோடு ஓர் உளவியல் யுத்தமே நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

‘இரண்டரை மணி நேர படத்தை வெறும் கேளிக்கையாகக் கருதி வரும் ரசிகர்களுக்கு அதன் நுட்ப அரசியல் ஆய்வு எதற்கு?’ எனும் கேள்விகளை சமூக விழிப்புணர்வில் சினிமா குறித்த ஆய்வுகளை வெளியிடத் தொடங்கியபோது நாங்கள் எதிர்கொண்டோம். ‘எடுக்கிறவன் திருந்தப் போவதில்லை, பார்க்கிறவன் நிறுத்தப் போவதில்லை. எதுக்கு வெட்டி வேலை?’ என்று அக்கறைப் பட்டார்கள். ஆனால், இக்கூற்று நாம் எழுதும், விமர்சிக்கும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்தானே!

தமிழகத்திலும், கேரளத்திலும் தன்னை ஒரு மேதையெனக் கொண்டாடுகிறார்கள் என்ற ‘அதிமேதாவி’ எழுத்தாளர்களை முதல் பார்வையில் பாமரர்களாகவும், நமது விமர்சனங்கள் வெளிவந்தபின் தவறை திருத்திக் கொண்டவர்களாகவும் கண்டோம்.

இவ்விமர்சனங்களுக்கான எதிர்வினைகள் இன்னொரு மூடநம்பிக்கையையும் அம்பலப்படுத்தியது. அது கமலஹாசன் எனும் பகுத்தறிவாதியின் ரசிகர்கள் எந்த அளவுக்கு ‘முற்போக்காக’ இருக்கிறார்கள் என்பதைப் போட்டுடைத்தது.

யோக்கியமான சினிமா எடுக்கும் எவரேனும் உள்ளே இருக்கிறார்களா? என சல்லடை போட்டுச் சலிக்க வேண்டியதில்லை. எல்லா துறைகளையும் போல் வணிக மயம், திரைத் துறையையும் சூறையாடியிருக்கிறது.

வசனம் நேர்மையைச் சொல்கிறது. காட்சிகளோ கள்ளச் சந்தையைக் குறி வைக்கிறது.

தேசிய ஒருமைப்பாடு பதாகையின் கீழ் அப்பட்டமான சிறுபான்மையின எதிர்ப்பு.

இதுதான் இன்றைய தமிழ்ச் சினிமா.

இந்தச் சினிமாவை கலை ரசனையாகக்கூட அல்ல; திறனாய்வு செய்ய, கேள்வி கேட்க, சரியில்லை என்றால் தூக்கிப்போட ஒரு நுகர்வோராக நமக்கு உரிமையிருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வோம்.

இந்நூலில் வந்துள்ள திரைப்பட விமர்சனங்கள் எமது நோக்கத்தை தொடர்ந்து செய்கிறது.

‘சமூக விழிப்புணர்வு’ இதழில் தீசுமாசு டி செல்வா எழுதி வெளிவந்த கட்டுரைகள், அதன் எதிர்வினைகள் (நாகரீகம் கருதி பிரசுரிக்க தகுந்தவை மட்டும்) தொகுக்கப்பட்டு ‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’ எனும் தலைப்பில் இப்போது உங்கள் கையில்.

சமூக விழிப்புணர்வின் பல்வேறு கருத்துக்களை பல்வேறு தளங்களுக்கும் எடுத்துச் சென்றவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஞா. சார்லஸ் ஜெயராஜ், ராசிவ் காந்தி, ‘கீற்று’ ரமேஷ், ஒட்டக்கூத்தன், சூ. செல்வராசு, சூ. செபா, முகிலன், பாலா, சத்யன் ஆகியோரின் பங்களிப்பு இல்லாவிட்டாலும் இந்நூல் வந்திருக்கும்; இந்த அளவுக்கு சிறப்பாக இல்லாமல்.

-      கு. காமராஜ்

திரைப்பட விமர்சனங்கள்

யோக்கியன் வர்றான்... சொம்பெடுத்து உள்ள வை..

தீசுமாசு டிசெல்வா

வெளியீடு

சமூக விழிப்புணர்வு

68, எல்டாம்ஸ் சாலை

தேனாம்பேட்டை

சென்னை - 600 018

தொலைபேசி : 94885 76166

முதல் பதிப்பு : ஜனவரி 2010

விலை : ரூ. 45

Pin It