நெய்தல் இலக்கிய கூடுகை ஒருங்கிணைத்திருந்த புத்தக விர்சன கூட்டத்திற்காக “நெய்தல் சொல்லகராதி” என்கிற நூல் என்னிடம் வழங்கப்பட்டது. இந்த நூலைப் பற்றிய அறிவிப்புகளும் வெளியீடுகளும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது. காரணம் நெய்தல் நிலம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு நெய்தல் நில சொற்களுக்குப் பொருள் காண்பது மிகக் கடினமான நிலை. அந்தக் குறையை இந்த நூல் நிவர்த்தி செய்யும் என்கிற எண்ணம் என்னிடம் இருந்தது. இந்த நூலை வாசிக்கிறபோது அந்த எண்ணம் ஈடேறியது. ஆனால், அகராதி பற்றிய அணுகுமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் ஏனோ தானோவென்று தொகுக்கப்பட்டிருப்பது இந்த அகராதி நூலை அகராதியாக ஏற்பதில் தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
குறும்பனை சி. பெர்லினின் முயற்சியும் தொகுப்பும் பராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. பல்கலைக்கழகங்கள், ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய பணியை இவர் செய்துள்ளார். இந்நூலுக்கு முன்னரும் தாமஸ் என்கிறவர் ஐநூறு சொற்கள் அடங்கிய நெய்தல் சொல்லகராதியைத் தயாரித்துள்ளதாகப் பேராசிரியர் இராஜேந்திரன் அவர்கள் இன்று கூடுகைகக்குப் பிறகு கூறினார். நெய்தல் வெளி பதிப்பக உரிமையாளரும் தன்னிடம் அந்த நூல் இருப்பதாகவும் கூறினார். தருவதாகவும் சொன்னார். இருவருக்கும் நன்றிகள். அந்த நூலைப் பார்க்கும் ஆவலில் இருக்கிறேன்.
நெய்தல் சொல்லகராதி நூலைப் படித்தபோது அகராதி பற்றிய ஒரு ஆய்வை மேற்கொள்ள நேர்ந்தது. அதுமட்டுமல்லாமல் பத்து வருடங்களாக இலக்கண ஆய்வில் ஈடுபட்டவன் என்கிற முறையில் சொல் குறித்தும் சொல் வெளிப்படுத்தும் இலக்கணம் குறித்தும் எனக்கு அதிக பரிச்சயமுண்டு. குமரி மண்ணில் இலக்கண அறிவில்லாத பலர் தாங்கள் மிகப்பெரும் இலக்கண அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்டு அலைவதும் எனக்குத் தெரியும்.
அகராதி கலை என்பது இன்று நன்கு வளர்ந்து விட்ட ஒரு கலை. இதனை ஆங்கிலத்தில் லெக்சியோகிரபி (Lexicography) என்பர். அகராதி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசையில் அடுக்கிப்பொருள் கூறுவது.. அகரம் + ஆதி = அகராதி. ஆங்கிலத்தில ஆல்பாபெடிகல் ஆர்டர் (Alphabetical Order) என்பர். இது கிரீக்கிலிருந்து வந்த சொல்.
அகராதியின் வகைகளாக
1. சொல்லுக்குப் பொருள் கூறுவதோடு அச்சொல் ஏந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாயிற்று என்ற விவரமும் ,அது பேச்சு வழக்கிலோ அல்லது செய்யுள் வழக்கிலோ வந்துள்ள தொடரும், அது எடுத்தாளப்பட்டுள்ள நூலின் பெயரும் , நூலில் அதுவந்துள்ள உட்பிரிவின் பெயரும்,, இத்தனையாவது பாடல் எனப் பாடல் எண்ணும், இன்னபிறவும் கொடுக்கப்பட்டிருக்கும் அகராதிகள் ஒரு வகையின.
2. மின்சாரம் ,பொறிகள் (இயந்திரம்) என்பன போன்ற குறிப்பிட்ட பொருள்களைப் பற்றியும், உழவு, நெசவு போன்ற குறிப்பிட்ட தொழில்களைப் பற்றியுமுள்ள சொற்கள்மட்டும் அவற்றின் தோற்றத்துடன் பொருள் ஙூறப்பட்டிருக்கும் தனித்துறை அகராதிகள்
3. சரியான இலக்கிய வழக்கிலிருந்தும், பொருத்தமான ஒலியிலிருந்தும் (உச்சரிப்பிலிருந்தும்) வேறுபட்டு நாட்டின் பல பகுதிகளிலும் பலவாறு வழங்கப்படும் வட்டார வழக்குச்சொற்கள் மட்டும் அகர வரிசையில் பொருள் கூறப்பட்டிருக்கும் வழக்கு அகராதிகள்
4. ஒரு நூலில் செய்யுட்களின் முதல்சொற்களை எல்லாம் திரட்டி அகரவரிசையில கொடுக்கும் செய்யுள் முதற்குறிப்பகராதி
5. நூலின் உள்தலைப்புகளைக் கூறும் பொருளடக்க அகராதி
6. ஒரு நூலிலுள்ள அருங்சொற்களை மட்டும் அந்த நூலிலிருந்து தந்திருக்கும் அருஞ்சொல் அகராதி
7. ஒரு நூலிலுள்ள சொற்கள் அனைத்தையும்நூனன நூலில் வந்துள்ள இடஞ்சுட்டிக் கொடுக்கும் தனிநூல் அகராதி
7. ஒரு நூலிலுள்ள இன்றியமையா சொற்களை மட்டுமோ அல்லது பொருட்களை (செய்திகளை) மட்டுமோ நூலில் வந்துள்ள அடிகள், - இடங்களைச் சுட்டிக் கொடுத்துள்ள சிறப்பு அகராதி (Concordance). இவ்விரு வகையுள் சொற்களை மட்டும் கொடுத்திருப்பது சொற்கோவை அகராதி (Verbal Concordance) எனவும், பொருட்களை மட்டும் கொடுத்திருப்பது பொருட்கோவை அகராதி (Real Concordance) எனவும் அழைக்கப்படும்.
8. பல்வகை கலைத்துறை, அறிவுத்துறை பற்றிய படங்களுடன் கூடிய அருஞ்சொல் விளக்க அகராதிகள் (Glossary).
9. உலக செய்திகள், போருள்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ள கலைக்களஞ்சியம் Encyclopeadia)
10. ஒரு மொழிச்சொல்லுக்கு வேறான வேறு மொழிச் சொல்லோ அல்லது பலமொழிச் சொற்களோ கொடுக்கப்படும் மொழிஅகராதி வகைகள்
11. ஒரு மொழியிலே வழங்கும் மழமொழிகளை ஏல்லாம் தொகுத்து அகரவரிசையில் கொடுக்கும் பழமொழி அகராதிகள்
12. புலவர் அகராதிகள்
13. இருசுடர், முக்குணம், ஐம்பொறி - எனத் தொகை எண்களால் சுட்டப்படுபவற்றை விளக்கும் தொகை அகராதி
14. செய்யுட்கேற்ற எதுகைத் தொடைசொற்களைத் தரும் தொடை அகராதி (அகம் -மகம்)
15. ஒப்புமையுடைய ஓரெழுத்து வேறுபாட்டு சொற்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ள எழுத்து வேறுபாட்டு அகராதி என அகராதியை வகைப்படுத்தலாம்.
தொல்காப்பியத்தில் சொற்களுக்குப் பொருள்கூறும் தன்மை உள்ளது. சொல்லதிகாரத்திலுள்ள உரியியலில் 120 சொற்களுக்குப் பொருள் கூறியள்ளார் தொல்காப்பியர் உரியியல் (மல்லல் வளனே மழவும் குழவும் இளமைப்பொருளன - தொல். சொல். உரியியல் -788). இடையியல் ,மரபியலிலும் சொற்களுக்குப் பொருள் கூறுகிறார். முதல் அகராதி எனத்தொல்காப்பியத்தைக் கூறலாம். ஆனால், அகரவரிசையில் தோல்காப்பியம் பொருள் கூறவில்லை. அரிய சொற்களுக்கு மட்டுமே பொருள் கூறுகிறது. இதனைத் தொல்காப்பியம்
“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல்மேன ( தொல்.சொல். உரியியல் -785 )
எனும் நூற்பா விவரிக்கிறது.
தமிழில் உரையாசிரியர்களிடமும் சொல்லுக்குப் பொருள் கூறும் மரபுள்ளது. தமிழில் நிகண்டு என்கிற சொல்லுக்குப் பொருள் கூறும் மரபும்உண்டு. அந்த வகையில் ஆதிதிவாகரம் நிகண்டு ஒன்றிருந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கும்முன்னர், நிகண்டன் கலைக்கோட்டு தண்டனார் என்பவர் ஒரு நிகண்டினை இயற்றியுள்ளதாக நம்பப்படுகிறது. நமக்கு உருப்படியாகக் கிடைத்துள்ளவை சேந்தன் திவகாரமும், பிங்கலமும்தான் (கி.பி. 8). இவை தவிர சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு போன்ற நூற்றுக்கணக்கான நிகண்டுகள் தோன்றியுள்ளன.
நிகண்டு நூற்கள் எல்லாம் சொல்லுக்குப் பொருள்கூறும் அகராதித் துறையைச் சேர்ந்தவனாகும். வடமொழியின் வேதத்திலுள்ள ஆறு அங்கங்களுள் நிருத்தமும் ஒன்று. அதில் நிகண்டு என்கிற பகுதியும்உ உள்ளது. அப்பகுதியில் சொற்பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி சொல்லுக்குப் பொருள்கூறும் தனிநூற்கள் நிகண்டு என வடமொழியில் கூறப்பட்டன. பிரபந்தம், புராணம் போல நிகண்டும் தமிழில் தொற்றிக்கொண்டது.
நிகண்டு எனும் வடசொல்லுக்குத் தொகுதி, கூட்டம் என்று பொருளாம். நிகண்டு எனும் சொல்லுக்கு உண்மை என்ற பொருளும் வழங்கப்படுகிறது, நிகழ்ந்தது எனும் சொல்தான் நிகண்டுவானது என்பாரும் உள்ளனர். நீளம், நீண்டது, சொற்களின் பட்டியல் நிகண்டு என விவரிப்பாரும் உளர்.
நிகண்டுகள் முற்காலத்தில் உரிச்சொல் ஏன்றே அழைக்கப்பட்டன. இதற்குக் காரணம் தொல்காப்பியம் உரியியலில் சொல்லுக்குப் பொருள் கூறுவதால் உரிச்சொல் என அழைத்தனர். நன்னூல் உரியியலில் பவணந்தி முனிவரும் எல்லா சொல்லுக்கும் பொருள் கூறமுடியாது. பிங்கலம் முதலானவற்றில் கண்டுகொள்க என்கிறார். இதனை,
“இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்றிசை நூலுட்குணி குணப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே” (நன்னூல் உரியியல் 465)
என்னும் நூற்பா விவரிக்கிறது. இதற்கு உரை எழுதிய மயிலைநாதர், அவை பிங்கல முதலான புலவர்களால் செய்யப்பட்ட உரிச்சொல் பனுவல்களுள் விரும்பி அறிந்து கொள்க”என்று கூறுகிறார்.
பிங்கலமும் கயாதரமும் உரிச்சொல் என்றே குறிப்பிடுகின்றன. காங்கேயன் என்பவரும் உரிச்சொல் என்றே குறிப்பிடுகிறார். உரிச்சொல் என்பது 17, 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் நிலவிலிருந்ததை அறிய முடிகிறது. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டலபுருடரே முதன்முதலில் நிகண்டு எனக்குறிப்பிடுகிறார்.
நிகண்டுகள் தனித்தனிச் சொல்லாக இல்லாமலும், அகரவரிசைபடி இல்லாமலும் சொற்களுக்குப் பொருள் கூறுகின்றன. செய்யுள் வடிவில்; உள்ளன. பிற்காலத்தில் நிகண்டுகளை அகரவரிசையில் எழுதி வைத்தனர். பின்னர் அதையே புத்தகமாகப் பதிப்பித்தனர். சூடாமணி ஆசிரியர் ஏதுகை அடிப்படையில் அமைத்துள்ளார். கி.பி. 1594ஆம் ஆண்டில் சிதம்பர இரேவணசித்தர் என்னும் புலவர் அகராதி நிகண்டு என்னும் பெயரில் ஓரு நூலை இயற்றினார். இந்நூல் அகரவரிசையில் அமைக்கப்பட்ட முதல் நூலாகும். இதுதான் உலகின் முதல் அகராதி என்றும் வழங்கப்படுகிறது. இதற்கடுத்த அகராதி 1612ல் இத்தாலி மொழியில் தோன்றியது.
17ஆம் நைற்றாண்டுகளில் அகரவரிசையிலான அகராதிகள் தோன்றின. பர்தோல் மாஸ்சியஜ ன்பல்க் ன்பவர் எழுதிய “திக்சியனரிசம் தமுலிசம்”என்னும் அகராதி பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. வீரமா முனிவரின் சதுரகராதி (பெஸ்கி) - 1732 ல் தோன்றியது.- அகராதிகளுக்கெல்லாம் முன்மாதிரியான அகராதி இதுவே. கடைசி சொல்வரை விளக்கம் சொல்கிறது. இதனால் அகராதிக் கலையின் தந்தையாக பெஸ்கி அழைக்கப்படுகிறாரர்.;.
பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி ஆகியவைகளுக்குப் பொருள் கூறுவதால் இது சதுரகராதி என அழைக்கப்படுகிறது. பெயரகராதியில் 1200 வார்த்தைகளுக்குமேல்; பொருள் கூறப்பட்டுள்ளது. பொருளகராதியில் திருமால், சிவன், நிலம் போன்ற ஒவ்வொரு பொருளுக்கும் பலப்பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. தொகையகராதியில் இருசுடர், முக்குணம் போன்ற தொகைச்சொற்களுக்கும் பொருள் கூறப்பட்டுள்ளது. தொடையகராதி அகம், இகம், உகம் என எதுகை தொடைச்சொற்களுக்குப் பொருள் கூறும் வண்ணம் அமைந்துள்ளன. ஒருபொருள் பலபெயர்கள், ஒருசொல் பலபொருள் என்கிற தன்மையிலும் பொருள் கூறும் வழக்கம் உள்ளது. இது அல்லாமல் அகராதி கலை குறித்து ஏராளமான புத்தகங்களும் அகராதி நூல்களும் கூட தமிழில் வந்துள்ளன.
குறும்பனை சி. பெர்லினின் அரிய முயற்சியால் நெய்தல் சொல்லகராதி நூல் உருவாகியுள்ளது. இந். நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 2020 ல் வெளியிட்டுள்ளது. இதுவொரு நெய்தல் அதாவது கன்னியாகுமரி மாவட்ட நெய்தல் சொல்வழக்கினைத் தொகுத்துத் தரும் அகராதி என்கிற புரிதலை இதன் தலைப்பு ஏற்படுத்துகிறது. 3000 அதிகமான சொற்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி நெய்தல் நிலம் சார்ந்த பல அரிய சொற்கள் இதில் தொகுத்துப் பொருள் கூறப்பட்டுள்ளன. அந்தவகையில் இவ்வகராதி மிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது எனலாம். இவ்வகராதியில் கட்டுமரம் சார்ந்த பல அரிய சொற்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (அட - கட்டுமரத்திற்கு அடியில் போடும் மரத்துண்டு. அசவு - பெரிய கண்ணி, அடக்க வலை - சிறிய கண்ணியுள்ள மீன்படி வலை, அடஞ்ச - கரை சேர்ந்த, அடஞ்ச நேரம் - தொழிலுக்குச் சென்றவர் கரை வந்து சேர்ந்த நேரம், அடியம்பு - பெரிய மீனை அடிக்கப் பயன்படும் தடி, அடையமுன்ன - கடலிலிருந்து கரையை வந்து சேருவதற்கு முன், அணியம் - படகு மற்றும் கட்டுமரத்தின் முன் பகுதி) இச்சொற்கள் ஆய்வாளர்களுக்கு மிக்க பயன் தரும்.
மீன்களின் பெயர்களைப் பட்டியிலிட்டுக் கொடுத்துள்ளார் (1073). இதோடு அந்த மீன்களின் படங்களைக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அது போல் மீன் இனங்கள், பாறைக் கூட்டங்கள் (181), கடலின் பெயர்கள் 185), நெய்தல் சமூகம் (20), நட்சத்திரங்களின் பெயர்கள் (18), கடல் காற்றின் பெயர்கள் (26) கரமடி உபகரணங்கள் (29), கட்டு மரமும் கருவிகளும் (24), வலைகளின் பெயர்கள் (65), விசைப்படகு சார்ந்தவை (58), மடி (13), தட்டு மடியும் தளவாடங்களும் (48(, தூண்டில் எண்ணும் அதில் மாட்டும் மீன்களும் (14), வசவு சொற்கள் தொகுத்தக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொருள் கொடுக்கப்படவில்லை. அகராதி வரிசையில் இவை கூறப்பட்டுள்ளன. அடுக்கு மொழி (99), தமிழ்நாடு, பாண்டிச் சேரி கடலோர மவாட்டங்களும் ஊர்ப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சமூகம் அறியாத தகவல்கள். இதற்காக இவ்வகராதியைக் கொண்டாடலாம்.
ஆக இவ்வகராதியைக் கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன. அதே வேளை சொற்களுக்குப் பொருள் கூறும் இடம் மிகப்பெரிய நெருடலாக உள்ளது என்பதைக் கூறத்தான் வேண்டும். பக்கம் 23 ல் அயித்துப் போச்சி என்னும் சொல் இரண்டு முறை வந்துள்ளது. இதே பக்கத்தில் சில சொற்கள் அகர வரிசை மாறியும் வந்துள்ளன.
நெய்தல் நிலம் சார்ந்த வட்டார வழக்குச் சொற்களை அதிகமாகத் தொகுத்துள்ளார். ஆனால் சமவெளிப் பகுதி சார்ந்த சொற்களும் இத்தொகுப்பில் கலந்துள்ளன. இதனால் இதில் எது நெய்தல் வட்டார வழக்கு என்பதை ஒரு வாசகனோ, ஆய்வாளனோ தனியாக ஆய்ந்தறிய வேண்டிய சூழல்.
வட்டார வழக்கு என்பதற்கு, ஒலிப்புமுறை, சொல் அமைப்பு, இலக்கண அமைப்பு ஆகிய கூறுகளின் டிப்படையில் பொதுமொழியிலிருந்து சற்றே வேறுபடுவதும், ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டுமே பேசப்படுவதுமான மொழிவழக்கு என்று ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ விளக்கம்த தருகின்றது (ப. 1194). இவற்றைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட மக்களால் பேசப்பட்டு, புரிந்து கொள்ளப்படும் மொழிவகையை வட்டார மொழி என வரையறுத்துக் கொள்ளலாம். இவ்வகை மொழியில் வழங்கும் சொற்களையே வட்டார வழக்குச் சொற்களாக அடையாளப்படுத்துகின்றனர். வட்டாரச் சொல் பற்றி “பொதுவழக்கில் இருக்கும் ஒருசொல், பொதுப் பொருளிலிருந்து வேறுபட்டு வழங்குதல், ஒரு சொல் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே வழங்க / புரிந்து கொள்ளப்படுதல், பொதுவழக்குச் சொல்லாக இருப்பினும் திரிந்து, உச்சரிப்பில் வேறுசொல் போலத் தோற்றம் தருதல் என மூன்று நிலைகளில் இருப்பது வட்டாரச்சொல்லாகும்” என்கிற குறிப்பு அதிக புரிதலைத் தரும் (பெருமாள் முருகன், அகராதி, ப. 15).
இந்நூலில், சொற்ககளை அகர வரிசைப் படுத்துவதற்கு முன்னர் தலைப்பாக கலைச் சொற்கள் என்கிற தலைப்பையும் நூலாசியரியர் கொடுத்துள்ளார். கலைச் சொல், பொதுச் சொல், வட்டார வழக்குச் சொல் குறித்து புரிதல் நூலாசியருக்கு இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. கலைச்சொல்லை ஒலிப்பெயர்ப்பு (Translileration),ஸமொழிபெயர்ப்பு (Translation), புதுச்சொல்லாக்கம் ( Coining new words) ஆகிய ஏதேனும் ஓருமுறையில் உண்டாக்கலாம். வழக்குச் சொற்களையும் வட்டார மொழிகளையும் பொதுமக்களிடமிருந்து ஏதேனும் ஒரு மக்கள் தொடர்பு அமைப்பின் மூலம் பெறலாம். தொழில் தொடர்பான சொற்களுக்கு ஏற்ற கலைச்சொற்களை உருவாக்கும்போது அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து தொகுத்தல் சிறப்பு, எ-டு: Computer என்னும் சொல்லிற்குக் கணினி என்னும் சொல்லைப் பெற்றதைக் கூறலாம். ஆக இந்நூலில் இதுவொரு பெரும் பிழையாக இருக்கிறது. கலைச்சொல் என்பது, ஏதாவது ஓர் அறிவுத்துறையில் பயன்படக்கூடிய சிறப்புச் சொற்றொகுதியைக் குறிக்கும். ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு கலைச்சொல்லுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பான பொருள்கள் இருக்கக்கூடும். இவைபொது வழக்கிலுள்ள பொருள்களோடு ஒத்திருக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட துறை, குறிப்பிடத்தக்க காலம் பயிலப்பட்டு வரும்போது அத்துறையில் காணப்படும் இத்தைகைய சிறப்புச்சொற்கள் செறிவான பொருளை உணர்த்துவனவாக வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான சிறப்புச் சொற்றொகுதியின் பெறுமதி ஒவ்வொரு சொல்லிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தகவலைப் பொதிந்து வைத்திருப்பதில் தங்கியுள்ளது. கலைச்சொல்எ ன்பது சொற் சிக்கனத்தோடு, பொருளின் ஆழத்தையும், துல்லியத் தன்மையையும் பெறுவதற்கான ஒருவழி முறையுமாகும். இதனால், ஒரு துறை சார்ந்த வல்லுனர்கள் தங்களிடையே அத்துறைசார் விடயங்களைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக்கொள்வதற்குக் கலைச்சொற்கள் பயனுள்ளவையாக அமைகின்றன. மறுபதிப்பில் நுலாசிரியர் இதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
நெய்தல் சொல்லகராதி, சொற்களுக்குப் பொருள் கூறுவதற்குப் பதில் பல இடங்களில் சொற்றொடர்களுக்கும், தொகைச் சொற்களுக்கும் பொருள் கூறிச் செல்கிறது. இத்தன்மை, இது என்னவகையான அகராதி என்கிற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அங்குன இங்கன வெலவாது - (19) அங்கோட்டியான் பாச்ச (19), அசச்சாம கொள்ளாம (19) அதுக்குப் பகரம் (21), அவன் போவாட்டானா (25) தொண்டி காட்டாம (92), மாத்தி மறிச்சி எடுக்க (127) போன்ற தொடர்களைக் கூறலாம். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வார்த்தைகளைத் தனித்தனியாகக் (அங்குன, இங்குன, வெலவாது,) கொடுத்துப் பொருள் கூறியிருக்கலாம். அது இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழில் மரபுதம்தொடர் அகராதி என்கிற ஒரு முறையுண்டு. ஆனால் இந்நூல் மரபுத் தொடர்களுக்கான அகராதியல்ல.
பொது மொழியை வட்டார மொழியென வகைப்படுத்தியுள்ளார். இந்த வகையில் பார்க்கப் போனால், பெரும்பாலாக இவர் பொது மொழி சொற்களையே நெய்தல் வட்டார மொழியாகக் கொடுத்துள்ளார். இது இவர் பொது மொழி, வட்டார மொழி குறித்துக் குழம்பியள்ளதையே காட்டுகிறது. நெய்தல் வட்டார வழக்குச் சொற்களைப் பட்டியலிடப் போனால் 500 வார்த்தைகளாவது தேருமா என்பதே ஐயமாக உள்ளது.
சொல்லுக்குப் பொருள் கூறுவதோடு அச்சொல் எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாயிற்று என்ற விவரமும், அது பேச்சு வழக்கிலோ அல்லதுஸசெய்யுள்வ வக்கிலோ வந்துள்ள தொடரும், அது எடுத்தாளப்பட்டுள்ள நூலின் பெயரும்,, நூலில் அது வந்துள்ள உட்பிரிவின்பெயரும், இத்தனையாவது பாடல் எனப் பாடல் எண்ணும், இன்னபிறவும் கொடுக்கப்பட்டிருக்குமானால் இவ்வகராதி சிறப்பான அகராதியாக வந்திருக்கும். சங்க இலக்கியத்தில் 300 க்கும் அதிகமான நெய்தல் பாடல்கள் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அப்பாடல்களில் இசசொற்கள் உள்ளனவா என்கிற தகவலையும் இவ்வகராதி பதிவு செய்திருக்கலாம். அப்படி பதிவு செய்திருந்தால் நெய்தல் நில மக்களின் தொடர்ச்சியை அறிந்து கொள்ள இவ்வகராதி பயன்பட்டிருக்கும்.
பழமொழிகளும் பொதுச் சமூகம் சார்ந்த பழமொழிகளாக இருக்கின்றன (அவன் நடந்து வருவான் அவனுக பொய் பறந்து வரும், அன்னா போறான் கண்ணா பரவன், ஆயிரம் கடல் அளந்தும் அரக்காசு மிச்சமில்ல, ஆயிரம்தான் தொளவக்காரன் அரைச்சா கச்சாக்காரன், ஆயிரம் தொளவ தொளந்தும் அரையணா மிச்சமில்ல. மொத்தமுள்ள கொடுக்கப்பட்டுள்ள 187 பழமொழிகளில் 47 பழமொழிகள் மட்டுமே நெய்தல் நிலம் சார்ந்த பழமொழிகளாக உள்ளன. விளையாட்டு பாடல்களும் பொது மற்றும் நெய்தல் நிலம் என கலந்துள்ளன. கடலோர பெண்களின் விளையாட்டுப் பாடல்கள், விடுகதை பாடல்கள், போட்டிப் பாடல்கள், தொழில் பாடல்கள், உறவுமுறை பாடல்கள் எனப் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்ட தகவல்களில் இருக்கும் பல பாடல்களின் மொழி பொதுமொழியாக இருக்க, நூலாசிரியர் அவற்றை நெய்தல் பாடல்கள் எனத் தொகுத்திருப்பதும் ஐயத்திற்கிடம் அளிக்கின்றன.யாரிடமிருந்து தொகுக்கப்பட்டது என்கிற தகவல்களைக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பான, நம்பகத்தன்மை மிக்க அகராதியாக இவ்வகராதி அமைந்திருக்கும்.
வட்டார வழக்கு மொழிகளில் பொது மொழியின் செல்வாக்கும், பிற வட்டார மொழிகளின் செல்வாக்கும் கலந்திருப்பது இயல்பு. அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால், வட்டார வழக்கு அகராதியைத் தொகுக்கும் ஆசிரியர் பொது மொழி, தான் தொகுக்கும் வட்டார மொழி, பிற வட்டார மொழி குறித்து அறிவுள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பன்னிரண்டு கிலோ மீட்டருக்கும் (கடற்கரை உட்பட) வட்டார மொழியின் தன்மை மாறுபடுவதைக் காண முடியம். அப்படியிருக்க இந்த அகராதியை நெய்தல் முழுமைக்குமான ஒரு அகராதியாக ஏற்றுக் கொள்ள இயலுமா என்பதும் சந்தேகமே.
சொற்களுக்கு பொருள் எழுதகிறபோது, வழக்கில் அந்தச் சொற்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன எனக் கொடுக்கலாம். அச்சொற்களின் இலக்கணக் குறிப்புகளை வழங்கியிருக்கலாம். ஆனால், வழங்கப்படவில்லை. ஆக இதனை நெய்தல் சொல்கராதி என்பதா? நெய்தல் வட்டார வழக்குச் சொல்லகராதி என்பதா? எப்படி அழைப்பது என்பதில் பெரும் குழப்பமே நிலவுகிறது. இது இந்நூலாசிரியரது முதல் முயற்சி என்பதால் பொறுத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே வந்துள்ள அகராதிகளைப் படித்திருக்கலாம், ஏற்கெனவே, பிற வட்டார வழக்குச் சொல் அகராதிகள், தமிழ் ஆசிரியர் தாமஸ் என்பவர் வெளியிட்ட நெ்யதல் அகராதி போன்றவற்றை நூலாசிரியர் பார்த்திருக்கலாம், அல்லது சிறந்த இலக்கண, மொழி மற்றும் அகராதி அறிவுடைய ஆளுமைகளைச் சந்தித்திருக்கலாம். இப்படிச் செய்திருந்தால் இந்தத் தவறுகளை நிவர்த்தி செய்திருக்கலாம். ஆனால் அது நிகழவில்லை. இதன் அடுத்த பதிப்பு வருகிறபோது இக்குறைகளை நிவர்த்தி செய்து இவ்வகராதி வருமானால், அந்த அகராதி சிறப்பான அகராதியாக இருக்கும்.
- இராஜேஷ் பெ.செ.