படிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே தெரிந்து விட்டது. அய்யயோ இந்த நூலை நாமல்லவா எழுதி இருக்க வேண்டும். தோழர் முந்திக் கொண்டாரே என்று. அத்தனை நெருக்கத்தை கடத்தி விட்ட ஒவ்வொரு கவிதையும் காதலால் உருவாகி இருக்கிறது.

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது அல்லது... உறவு என்று வந்த மனைவியே காதலியாக ஆகும் போது... தேவதையின் அட்டூழியங்கள் நிகழும்.

காதல் மனைவியின் குறும்புகள்.. வில்லத்தனங்கள்... காதல்கள்.. குழந்தைத்தனங்கள் என சுழன்றடிக்கும் காதல் காற்றில் பக்கத்துக்கு பக்கம் பரவசம். பார்க்க பார்க்க பற. நிசம். இந்த நூலை திருமணம் ஆன ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டும். காலத்துக்கும் கூட வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆக வேண்டிய ஆட்களும் படிக்க வேண்டும். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவோம். அது தான் செட்டில் என்று புரிய நேரிடும்.prabu sankar bookஎனக்கு தெரிந்து காதல் கவிதைகள் கிளாசிக் ஆன நூல் லிஸ்டில் 'அட்டூழியங்கள்' தேவதையை சுமந்து கொண்டு சேர்ந்து விட்டன.

நான் இதில் இருக்கும் ஒரு கவிதையை கூட இங்கே சொல்ல போவது இல்லை. அது ஒரு ரகசிய சேவை என படிப்போருக்கு கடத்தப்படும் நுட்பம். ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் புன்முறுவல் வருவதை தடுக்கவே முடியாது. நானெல்லாம் காசு குடுத்தாலும் சிரிக்க யோசிப்பவன். தனியே சிவந்து சிலிர்த்த மனதை நான்கைந்து முறை வலப்பக்கம் திரும்பி நிலைக்கண்ணாடியில் கண்டேன். காதலன் ஒருவனை அய்யயோ தொலைக்க பார்த்தோமே என்று மீட்டெடுத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு கவிதையும் தேவதையோடு தொடர்பு படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த தேவதை என்ற வார்த்தையே... தோழருக்கு சொந்தமாகி விட்டதோ என்று கூட தோன்றியது. நாம் எங்காவது எழுத நேரிட்டால் ராயல்டி தர வேண்டுமோ என்று கூட ஓர் எண்ணம். அப்படி... 'தேவதை'யை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி சித்திர தோரணையை அணிவித்து விட்டார். படிக்க படிக்க இனிக்கும் வரிகளில் சிலிர்க்க சிலிர்க்க சிவக்கும் சிந்தனையை.... ஆதலால் காதலாக்குவோம் என்றாகிப் போனது.

'படைப்'பின் ஆக சிறந்த நூலாக "தேவதையின் அட்டூழியங்கள்" இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மிக மெல்லிய உணர்வுகளால் இயல்பின் வழியே கிடைக்கும் வரிகளின் வெளிகளால் உருவான இந்த தொகுப்பில் இருக்கும் எல்லா கவிதைகளுமே ஒரே கவிதை தான் என்று உணர்கிறேன். அல்லது ஒரே கவிதையைத்தான் ஒவ்வொரு கவிதையாக பிரித்திருக்கிறார் என்றும் தான். ஒரே பார்மேட். ஆனால் போர் அடிக்கவில்லை. அது தான் இந்த நூலின் வலிமை. சிம்ப்ளிஸிட்டியே அதன் பெர்சனாலிட்டியாக மாறி விட்டது என்கிறேன்.

மனைவி என்பவள் ஒரு கட்டத்தில் முதல் குழந்தையாக மாறி விடுவது தான் இந்த நூலில் இருக்கும் எல்லா கவிதையும் சொல்லும் வித்தை. அதை மனம் நிறைய ரசிக்கும் ராஜகுமாரன்கள் தான் வாழ்வில் பெருவாழ்வு வாழ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

அடங்குவது போலவே ஓர் அதிகாரத்தை செதுக்கி கொள்ளும் பக்கத்தில் மனைவி சொல்லே மந்திரம். வேறு என்ன இருக்கிறது தனக்காகவே வாழும் ஒருத்திக்கு கணவன் செய்யும் கைம்மாறு. பேரன்பின் வழியே உருவான நூல் இது. ரசனையும் ரவுசும் ரவுண்ட் கட்டி அடித்தாடுவது 20/20 மேட்ச் போல. பாலுக்கு பால் சிக்ஸர். பக்கத்துக்கு பக்கம் காதல் மிக்ஸர்.

சிறப்புகள் முழுக்க இருந்தாலும்.. ஒரு கட்டத்தில் தேவதை சற்று திகட்டவும் செய்தது... என்பதும் உண்மை. கண்டிப்பாக இரண்டாவது பார்ட் வந்து விட கூடாது என்பது முதல் தொகுப்பின் நிஜ விசிறிகளுள் எழும் எண்ணமாக இருக்கும். சில கிளாஸிக்குகளை மீண்டும் தொட்டு அதன் உயரத்தை இறக்கி விட எக்காரணம் கொண்டும் அதை உருவாக்கியவரே காரணமாக இருந்து விடக்கூடாது. ஏனெனில் இந்த நூல் அத்தனை உயரத்தில் போய் நின்று விட்டது. பிறகு அட்டைப் படம்... கண்டிப்பாக வேறு இருந்திருக்கலாம். மறுபதிப்புக்கு மாற்ற வேண்டும் என்பது கோரிக்கை. மற்றபடி.. மனதால் படி என்று தான் முணுமுணுக்கிறது ஒவ்வொரு பக்கமும். வெகு சில மட்டும் கவிதைக்கு அருகே வந்து விட்டு வெட்கம் தாளாமல் விலகியே நின்று கொண்டன போலவும். ஆனால்.. மற்றவை எல்லாமே மத்தளம் அடித்து மௌனம் பூக்கும் காதலையே சூடி கொண்டிருக்கின்றன. வாழ்த்துகள். காதலில் ஏது லாஜிக். காதல் கவிதைகளில் எல்லாமே மேஜிக்.

அணிந்துரை எழுதி இருந்த நடிகர்... ஒளிப்பதிவாளர் "திரு இளவரசு" அவர்களின் வரிகளின்படி புன்சிரிப்போடு தான் நூலை திறக்கையிலும்... நூலால் தகிக்கையிலும்.

இந்த நூலின் தாக்கத்தில் நான் எழுதிய கவிதையை இந்த நூலுக்கே சமர்ப்பித்து முடித்துக் கொள்கிறேன்.

"பழைய சோறு கேட்ட
பிச்சைக்காரியிடம்
கொஞ்ச நேரம் பொறுங்க
பழைய சோறு இப்பாகிடும் என
வேகமாய் குக்கரில் சோறு வைக்கிறவள்

காய்ச்சலுக்கு ரெண்டு கவிதை போதும்
என என் கவிதை பேடை
கன்னத்தில் ஒட்டி சிரிக்கிறவள்

காட்டு மரத்தோடு பேசியதை
ஊர் திரும்பிய பிறகு
மணிக்கணக்காய்
வீட்டு மரத்தோடு பேசுகிறவள்

தூர தேசத்திலிருந்தே
நிலா வர வேண்டும் என்பதை
மாற்றி காட்டி
பக்கத்து தெருவிலிருந்தே வந்தேன்
என்கிறவள்

பூக்களுடன் மட்டுமல்ல
பூந்தொட்டிகளுடனுமே
உரையாடுகிறவள்

கார தோசைக்கும் இனிப்பு தூவுகிறவள்
சிரிப்புக்கும் மருதாணி பூசுகிறவள்
செங்காந்தள் மலர் என
தன்னையே பூக்கிறவள்

வேறு எப்படி இருப்பாள்

வெட்டி முறித்தது போல
எழுதி முடித்தவன் முன்
தேவதையாகத்தானே நிற்பாள்"

நூல் : தேவதையின் அட்டூழியங்கள்
ஆசிரியர் : பிரபுசங்கர் க
விலை : Rs.120/-

- கவிஜி

Pin It