paakkalaththamma 500தோழர் புலியூர் முருகேசன் அவர்கள் டயஸ்போரா லிட்ரேச்சர் எழுத்தாளர். சொந்த மண்ணிலிருந்து ஆதிக்க சாதியினரின் கொலைவெறி தொல்லையால் புலம்பெயர்ந்து எழுதிவரும் தமிழ் எழுத்தாளர்.

பாக்களத்தம்மாள் இவர்களது நான்காவது நாவலாகும். கதையின் நாயகன் உறவுகள் பின்னி வைக்கும் சிலந்தி வலையில் பெருந் தீணியாய் மாட்டிக்கொள்கிறார் நாகையா.

தஞ்சாவூர் வட்டார இயலில் நடந்து கொண்டிருக்கும் நாவலின் கதைப் போக்கு நாவலை உயிரோட்டமாக மாற்றுகிறது. பாக்களத்தம்மாவான் செல்லச் சிருரு தான் நாகையா. ( பேரன்) காமாட்சியின் - பழனியப்பன் மகன்.

நாகையா உடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா ஒருத்தி பெயர் மருதாம்பா இன்னொருவர் தங்கம்மா. மருதாம்பாவின் கணவர் கிருஷ்ணன் காமாட்சியின் தம்பி. மிச்சர் கடை வைத்து தொழில் செய்து வந்தார்.

தங்கம்மாவின் கணவர் சின்னக்காளை (அசல் உறவு) சைக்கிள் கடை வைத்து தொழில் செய்து வந்தார். நாகையாவின் இந்த இரண்டு பெரிய உறவுகள்தான் நாகையாவின் வாழ்க்கையில் பேரிடியாய் இடித்து உலைத்துப் போட்டுக் கொண்டிருந்தது.

இதுவரையிலும் தமிழ்நாட்டில் நான் கேள்விப் படாத ஒரு புதுவகையான இறந்தோர் சடங்கு முறையின் தொடக்கமாக நாவல் தொடங்குகிறது.

அதன் ஊடாக நகர்ந்து கொண்டிருக்கும் நாவல் தம்பியிடம் பூர்வீக சொத்திலிருந்து கிடைக்கும் பணத்தை வம்படியாக இரண்டு அக்காக்களும் வழிப்பறி கொள்ளையன் போல நடந்து கொண்டு. அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டு போவதாக நாவல் நகர்கிறது.

நாகையா அவன் தந்தை பழனியப்பன் காமாட்சியும் சொந்த ஊரில் இருக்கும் சொத்துக்களைச் சொந்த மகளிடமே இழந்து புலம்பெயர்ந்து பிழைப்புக்காக மனவாசி என்னும் வேறு ஊருக்குச் செல்கிறார்கள்.

நாகையாவின் குழந்தை கால வாழ்க்கையில் பெரும் தீனிக்காக அலைவதும். மாமாவின் கடலை "மூட்டையிலிருந்து எண்ணி பதினெட்டு கடலை தானே எடுத்தோம். அதற்கு, ஒரு மூட்டை குறைவதாகக் கணக்கு சொல்கிறார்கள்." எனத் திகைத்து நிற்கிறார் நாகையா.

வறுமையில் இருக்கும் எல்லா குடும்பங்களிலும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வார்கள் என்பது இந்த நாவலின் ஊடாக மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. காமாட்சி தன் மகனைப் பள்ளிக்கூட வாசலில் மிட்டாய் விற்பதற்காக அனுப்பி வைக்கிறாள்.

அப்பன் தொழில் செய்யும் சந்தைக்குச் செல்வது, கறிவிருந்துக்கு சில நல்ல உறவுகள் கூடுதலாகக் கவனிப்பது, சொந்தத் தாய் மாமன் கிருஷ்ணன் கண்டுகொள்ளாமல் இருப்பது என நாவல் விரிகிறது.

உறவுகளில் சிலரும் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதற்கு பள்ளிக்கூடத்தய்யாவும், மிக்சர்கார மாமனும் சாட்சியாக நாவலில் வந்து நிற்கிறார்கள்.

பழனியப்பனின் மச்சானும் மருமகனுமான கிருஷ்ணன் தன்னுடைய மனைவியின் தங்கையை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு திருமணம் செய்து கொடுப்பதாக வாக்கும் தந்து. அதற்கு, பதிலாக தன் மகளுக்கு நகை போட வேண்டும் என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். அந்த சத்தியத்தை நாகையா தன் அப்பாவின் மறைவுக்குப் பிறகு நிறைவேற்றம் செய்கிறார்.

"மனிதர்கள் உறவுகளின் எந்திரம்" என்று வங்கக் கவிஞர் சங்கர் கோஷ் சொல்லுகிறார். அதற்காகவே, பிறந்த எந்திரம் போல உழைத்த நாகையா. தாய்மாமன் முறைக்காகச் செய்யும் சீரில் குற்றம் குறை கண்டுபிடிக்கும் உறவுகள் தான் சபையில் அதிகமாக நிற்கிறார்கள்.

மச்சக்காளை மாமன் வீட்டில் சம்பளமில்லாத தொழிலாளியாகப் பல ஆண்டுகள் வேலை செய்வதும் நாகைய்யா அவருக்குத் தொழிற்கல்வியில் கிடைக்க வேண்டிய வாய்ப்பை இழக்கச் செய்வதுமாக மச்சக்காளை நடந்து கொள்கிறார்.

இந்த நாவலில் காதலே இருக்காதா? என்று என்னும் போது கடைசி சில பக்கங்களில் சண்முகராஜா மச்சக்கன்னியும் வருகிறார்கள். சில சாதிய பிரச்சனையோடு சண்முகராஜா மச்சக்கன்னி கரம்பிடிக்கிறார். இது சில ஆண்டுகள் கழித்தே நாகையா அவருக்குத் தெரிய வருகிறது.

உறவுகளால் நசுக்கப்படுபவர்களுக்கு தெளிவாக மது மருந்தாக அமைகிறது. என்பது போல நாகையா குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.

உறவுகளால் ஏற்படும் ஆழிப்பேரலையால் நாகையா மீண்டும் மீண்டும் அடித்துச் செல்லப்படுகிறார். தன் குடும்பத்திற்கு என்று எந்த பெரிய சுகத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் அக்காக்களுக்கே அனைத்தையும் இழந்து விடுகிறார். இந்த ஒட்டு மொத்த நாவலும் ஒரு தனிமனித வாழ்க்கையில் நிச்சயம் ஒரு நிகழ்வாகச் சாட்சியமாய் அமைந்து விடுகிறது.

தோழர் புலியூர் முருகேசன் அவர்களை இந்த நாவலில் வரும் நாகையா தான் என்பதனை அவர்களை அறிந்தவர்கள் திகைப்பில்லாமல் தெரிந்து கொள்ளும் ஒரு விஷயம் தான். அப்படி ஆகவே நானும் உணர்கிறேன். தன் சமையல் கலையை முகநூலில் மட்டுமல்லாது தாளிப்பு, கொதிப்பு, தலைக்கறி குழம்பு என நாவலிலும் பின்னியிருக்கிறார்.

சின்னசாமி நாடார் அவர்களின் சமாதிகள் தொடங்கும் நாவல் பாக்களத்தம்மாளின் சமாதிக்கு முடிகிறது. பாக்காளத்தம்மாளின் சமாதிக்கு வந்த நாகையா உறவுகளில் ஏற்பட்டக் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொள்கிறார்.

உறவுகளால் சிதையூண்டு மீண்டும், மீண்டும் உறவுப் பாலம் அமைப்போர் நாவலின் முழு அடர்த்தியை உணர்ந்து கொள்ள நிச்சயம் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் இது.

- மு.தனஞ்செழியன்

Pin It