(பள்ளிக்கூடம் சார்ந்து எவருக்குமே சந்தோஷமான எண்ணங்களும், பதிவுகளும் இல்லை வலியும் சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும். அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலங்காலமாக நம்மை தொடர்ந்து வருகின்றன)

செயல்வழி கற்பிக்கும் முறையை கைவிடக்கோரி சில தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகள் சமீபத்தில் போராட்டங்கள் நடத்தின. ஒரு புதிய முறை அமலாகும்போது அனுபவமின்மை, போதுமான தயாரிப் பின்மை, தேவையான கருவிகள், உபகரணங்கள் யின்மை, போன்ற பல்வேறு குறைபாடுகள் வழி மறிக்கும். செக்குமாட்டு தடத்தை விட்டு வேறுபாதையில் பயணிப்பது சிரமமாயிருக்கும், காலிடறும், ஆயினும் இந்த இடையூறுகளை எதிர் கொள்ளாமல் புதுமையாக்கங்கள் ஒருபோதும் இல் லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போராடுவது முற்போக்கானது தேவையானது. பிரச்சனைகளிலிருந்து தப்பியோட போராடுவது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.

தொடக்கப்பள்ளி தொடங்கி கல்வித்துறையில் தேக்கத்தை உடைக்க, படைப்பாற்றலை கிளறிவிட பெரும் `பகீரத முயற்சி' தேவைப்படுகிறது. அதை ஆசிரியர்களிடமே தொடங்க வேண்டியிருப்பது வேதனையானது. ஆயி னும் தேவையானது. சமீப காலங்களில் இந்த திசையில் பல்வேறு நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. பாரதி புத்தகாலயமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து கல்விச் சிந்தனைகள் குறித்து 25 நூல்கள் வெளியிட்டிருப்பது வித்தியாசமான ஆனால் பாராட்டத்தக்க பெரும் முயற்சி எனில் மிகையல்ல.

முன்பு ஆயிஷா என்று ஒரு குறுநாவல் கணையாழி யில் வெளிவந்தது. உடனே வண்ணக்கதிரில் முதன்முத லாக நான் பாராட்டி வர வேற்று எழுதினேன். பின்பு பல லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டதை அறிந்து மகிழ்ந்தேன். ஆயினும் ஆசிரியர் சமூகத்தின் பெரும் பகுதியினரை அது இன்னும் தொடவில்லையே என்கிற உறுத்தல்இருக்கிறது. இப்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் இதுபோன்ற பல்வேறு சிந்த னைகளை மேலும் கிளறுகிறது. இப்பின்னணியில் பாரதி புத்தகாலயத்தின் 25 புத்தங்க ளுள் ஒன்றான ஓய்ந்திருக் கலாகாது என்கிற கல்விச் சிறுகதைகளை படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

"பள்ளிக்கூடம் சார்ந்து எவருக்குமே சந்தோஷமான எண்ணங்களும், பதிவுகளும் இல்லை" எனவும், பள்ளி குறித்து பதிந்து போயுள்ள நினைவுகள் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளது. வலி யும் சொல்ல முடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும். அவமானப் படுத்தப்ப டும் வகுப்பறைகளும் காலங் காலமாக நம்மை தொடர்ந்து வருகின்றன எனவும் முன்னுரையில் என்.ராமகிருஷ்ணன் கூறுவது நியாயம் தான் என்பதை இந்நூலைப் படித்து முடித்ததும் உணரலாம்.

மொத்தம் 13 கதைகள் பதிமூன்று தளங்களில் கருத் துப்போர் நடத்துகின்றன. ச.பாலமுருகனின் `பள்ளித் தளம்' பழங்குடி மக்கள் கல்வி பெற உள்ள தடைகளை சேவை மனப்பான்மையை இழந்து விட்ட ஆசிரிய பணியை பதிவு செய்கிறது. பூமணியின் `பொறுப்பு' கதை அலுப்பூட்டும் பள்ளிக் கொண் டாட்டங்களையும், கிருஷ் ணன் நம்பியின் `சுதந்திர தினம்' எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் ஒருங்கே திணிக்கும் அதிகார வர்க்க சுதந்திர கொண்டாட்ட நடைமுறையை கேள்விக் குள்ளாக்குகிறது. இக்கதை 1951ஆகஸ்ட்டில் எழுதப்பட்ட குறிப்பு புரிதலுக்கு துணை சேர்க்கிறது. பிறகதைகளுக்கும் எழுதப்பட்ட காலம் குறிப்பிடுவது அவசியம். அடுத்த பதிப்பில் சேர்த்திடுக!

சு.வேணுகோபாலின் `மெய்பொருள் காண்பத றிவு' எனும் சிறுகதை தான் படிப்பைத் தொடர முடியா மல் இழந்த பெற்றோர் பிள் ளைகளை படிக்க வைக்கப டுகிற வலியும் பிற்பட்டோர் விடுதிகளின் அவலமும் நெஞ்சை தைக்கிறது. தோப் பில் முகமது மீரானின் `தங்கராசு' கதையும் பிள்ளை களை படிக்க வைக்க அலை யும் பெற்றோர்களின் மன உளைச்சலையும் அலைக் கழிக்கும் கல்விவியாபார கடைகளையும் படம்பிடிக் கிறது.ஏழைக்கு கல்வி எட் டாக்கனி தா னோ? கல்விக் கூடங்களில் சாதிபடுத்தும் பாட்டை பாமாவின் `எளக் காரமும்' லட்சுமணப் பெரு மாளின் ஆதாரமும் நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

ச.தமிழ்ச் செல்வனின் `பதிமூன்றில் ஒண்ணு' ஆங்கிலமும், கணிதமும் படுத் தும்பாட்டை வித்தியாசமான கடவுள் நம்பிக்கை யோடு இணைந்து ஊசியாய் நெஞ்சில் சொருகுகிறது.

பாவண்ணனின் `சம்ம தங்கள் ஏன்?' கதையின் ராமதாஸ் வாத்தியார் மேலாண் மை பொன்னுச்சாமியின் `பிரம்புபதேசம்' கதையின் பிரம்புவாத்தியார் புதுமைப் பித்தனின் `மோட்சம்' கதை யின் பூகோள வாத்தியார் என் ஒவ்வொரு வாத்தியாரும் சும்மா கற்பனையல்ல; நடப்பின் எதிரொலி.

சுந்தரம் ராமசாமியின் `எங்கள் டீச்சர்' எலிசபெத் நம்ம டீசச்சராக மாட்டரா என்கிற எதிர்பார்ப்பு உண்டாகிறது தி.ஜானகிராமனின் `முள்முடி' தரித்த அனு கூலசாமி வாத்தியாரின் வார்த்தையின் வலுவும் வீச் சும் நம்மைத் திண்ற வைக்கின்றன.

வகுப்பறைப் பயம்..? என்று விலகும் என்ற கேள்வியுடன் அரசி ஆதிவள்ளியப்பன் தொகுத்துள்ள இச் சிறுகதைத் தொகுப்பை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது.

ஓய்ந்திருக்கலாகாது.... கல்விச் சிறுகதைகள்
தொகுப்பு: அரசி ஆதிவள்ளியப்பன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ தெரு,
சென்னை, -600018
பக்கங்கள்: 144
விலை ரூ. 70

- சு.பொ.அகத்தியலிங்கம்

Pin It