கல்வியாளர்கள் ச.சீ. இராஜகோபால், வசந்தி தேவி, விஜய் அசோகன் (சுவீடன்), மருத்துவர் முத்துச்சாமி, சுப்ரபாரதிமணியன், வெ.குமணன், சு.மூர்த்தி உட்பட பலரின் கல்வி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகளின் படைப்புகளுக்கான தனிப்பகுதி என சிறப்பம்சங்கள் கொண்ட மலர் இது.

இந்த மலரின் குறிப்பிடத்தக்க அம்சம் பல கல்வியாளர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரைகள். தமிழ்க் கல்வி பற்றியும், தமிழ்க் கல்வியின் இன்றைய நிலை எழுப்பும் கேள்விகள் பற்றியும் அந்தக் கட்டுரைகள் பேசுகின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில் திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளரும், மருத்துவருமான சு.முத்துசாமி அவர்களின் முதல் கட்டுரை கவனத்திற்குரியது. "மருத்துவர் ஆக இருப்பதால் பலதரப்பட்ட மக்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது. மக்கள் தங்கள் சக்திக்கு மீறி இரவு பகலாக உழைத்து தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கும் சூழல் இருப்பதையும், ஆனால் அதில் கல்வித் தரம் இல்லை என்றும் அறிந்து கொண்டேன்" என்கிறார். தமிழ் வழியில் படித்த கல்வியும், தமிழ்ப் பற்றும், ஆர்வமும் ஏன் தமிழ் வழியில் கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தை அவரிடம் தோற்றுவித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுக்க வெவ்வேறு ஊர்களில் அந்தந்த ஊர்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் சுமார் 50 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலையில் அதில் பாதிக்கு மேலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதார சிக்கல்களும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அழுத்தங்களும் காரணம். அந்த அனுபவங்களை மருத்துவர் முத்துசாமி கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருக்கும் சூழலையும், சிக்கல்களையும் அவர் கோடிட்டு இருக்கிறார்

'தமிழ்ப் பள்ளிகளில் வருங்கால தமிழகத்தின் நாற்றங்கால்கள்' என்று கோபி குமணன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். உலகம் முழுக்க தாய் மொழியில் கல்வி கற்று, அறிவார்ந்த சமூகமாக உயர்ந்து நிற்கும் போது இங்கு மட்டும் அந்நிய மொழியில் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுவது மிகப்பெரிய கொடுமை. இயல்பாக தன் சொந்தக் காலில் நடை பழக வேண்டிய குழந்தை அந்தப் பருவத்திலேயே ஊன்றுகோலுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலத்தை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவரின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

அதற்கு அடுத்த கட்டுரை சுப்ரபாரதிமணியன் எழுதி உள்ளது ஆகும். ஒருபுறம் ஆங்கிலக் கல்வியின் வன்முறை சாதாரண மக்களை கல்வியிடமிருந்து அன்னியமாக்கி விட்டது. இன்னொரு புறம் தமிழ்ப் பள்ளிகள் பலவீனமாகி விட்ட சூழ்நிலை. இந்தச் சூழலில் இடம்பெயர்ந்த வந்து இங்கு இருக்கும் மக்களின் குழந்தைகள் தாங்கள் ஏன் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அப்படித்தான். பிழைக்க வந்த இடத்தில் அந்த மாநில மொழியை கற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் புறக்கணிப்பைக் குறிப்பிடுகிறது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகும் அபாயத்தை இந்தக் கட்டுரை சொல்கிறது.

கல்வியாளர் வசந்தி தேவி அவர்கள் அரசுப் பள்ளிகள் அவசியம் ஏன் வேண்டும் என்பதை விளக்குகிறார். இன்றைக்கு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் 15 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கு கல்வியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் கல்வி. அதே போன்ற நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடும் அபாயம் இருப்பதை வசந்திதேவி அவர்களின் கட்டுரை கூறுகிறது.

உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி எப்படி இருக்கிறது என்பதை ஸ்வீடன் நாட்டில் உள்ள முனைவர் விஜய் அசோகன் அவர்கள் சரியாக எடுத்துக் காட்டுகிறார். நோர்வே நாட்டில் தமிழ் மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண் நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவும் அதிசயத்தை சொல்கிறார். ஸ்விடனில் பிறந்து வளரும் பிறமொழிக் குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழியில் பேசி கற்று தாய்மொழியில் அறிவு பெற்று குழந்தைகள் சிறக்க ஸ்வீடன் கல்வித்துறை செயலாற்றி வருவதை வழக்கமாகக் கூறுகிறார்.

இதுபோல் பல்வேறு உலக நாடுகள் தாய்மொழிக் கல்வியில் அக்கறை கொண்டிருப்பதை சொல்கிறது. சீனா, இந்தியா போன்று பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு மொழிகளுக்கும் உத்தரவாதமும் பகிர்வும் தரும் நாடாகும். ஆனால் அனைத்து மொழிகளும் ஒரே குடும்பத்தையும் எழுத்து நடையும் கொண்டவை. இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழியில் பள்ளியில் 5 ஆண்டுகள் கல்வி பயில வாய்ப்பு உள்ளது. மாற்றுமொழிக் கல்வியும் நடைமுறையில் உள்ளது.

தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை முன்வைத்து கல்வி மேம்பாட்டு அமைப்பின் முக்கிய நிர்வாகியான சு. மூர்த்தி எழுப்பும் சில கேள்விகள் மிக முக்கியமானவை. இன்றைய அறிவியல் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகங்கள் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அதன் செல்வாக்கு சரியாக முறைப்படுத்த வேண்டும். அறிவின் காட்சிகளாகப் பயன்படுத்த வேண்டிய கல்லூரிகள் பல வழிகளில் கழிசடைக் கூடங்களாக உருமாறி காட்டப்படுகின்றன. இன்றைக்கு ஊடகங்களைத் தவிர வேறு எந்த சக்திக்கும் நமது சிந்தனைகளை கட்டமைப்பதில் பெரும் பங்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே ஊடகங்களில் உண்மையும், அன்பும், அகிம்சையும் பருப்பொருளாக மாற வேண்டும். எதிர்கால சமூகம் பண்பாடுடைய ஆரோக்கியமான சமூகமாக உருவாவதில் ஊடகங்களின் பங்கும் எழுத்தாளர்களின் பங்கும் மிக முக்கியம் என்பதை அவரின் கட்டுரை சொல்கிறது.

இந்த மலரில் முக்கிய அம்சங்களாக குழந்தைகளின் ஓவியங்களும், சிறு சிறுகதைகளும், அவர்களின் படைப்புகளும் அமைந்திருப்பதும். அவை நேர்த்தியாக கலைப் பண்புடன் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் முக்கியமாகும். அதேபோல் தாய்த்தமிழ்ப் பள்ளியில் இருக்கும் மாணவர்களுடன் இணைந்து பணிபுரிந்த நான்கு ஆசிரியைகள் எழுதிய கட்டுரைகள். எல்லாம் சிறு சிறு அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எல்லாம் வெகு யதார்த்தமாக இருக்கின்றன. மாணவர்களின் உலகை வெளிப்படுத்தும் விதமாக அந்த படைப்புகள் ஆசிரியர்கள் ஆசிரியரிடம் இருந்து வந்திருக்கின்றன.

நமது தமிழக கல்வியாளர்களின் மிக முக்கியமான ஒரு அரிய மனிதர் ச.சீ.ராஜகோபால் அவர்களின் கட்டுரையில் பிப்ரவரி 21ஆம் நாள் எவ்வாறு உலக தாய்மொழி நாடாக அறிவிக்கப்பட்டது, அதன் பின்னணியிலான தாக்கத்தை, தாய்மொழி எழுச்சி பற்றி விரிவாகச் சொல்கிறார். தாய்மொழியே பயிற்று மொழி என்பது உலகம் தழுவிய நடைமுறை. மொழிவழி மாநிலமாக அமைந்த தமிழ் நாட்டில் தமிழ் ஒன்றே பயிற்றுமொழி ஆக வேண்டும், பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

அதே சமயம் ஆங்கில மொழி மீதான மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கங்களில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் பங்கு என்பது பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. தாய் மொழிக் கல்வி பற்றி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் முதல் மகாத்மா ஜோதிராவ் பூலே போன்றோரின் கருத்துகளும் இங்கு தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் தாய்மொழிக் கல்வி பற்றிய பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக இந்த மலர் இருக்கிறது. பள்ளி மலர் என்ற அளவில் அதனின் பலவீனங்களைக் கொள்ளாமல் தாய்மொழிக் கல்விக்கான இன்றைய சூழலின் தேவையை இந்தப் படைப்புகள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. இந்த விலை 200 ரூபாய். பாண்டியன் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் உடையவர்கள் இந்த மலரை வாங்கிப் பயன்பெறலாம்

திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்

நன்கொடை : ரூ 200 . திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் கல்விப் பணிக்கு உதவ மலரின் பிரதிகளை வாங்குங்கள்: 9443702444, 9442531032, 98946 44366

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

முகவரி: மருத்துவர் முத்துசாமி, கண்ணன் மருத்துவமனை, சக்தி நகைக்கடை எதிரில், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், பெருமாநல்லூர் சாலை, திருப்பூர்.

- சுப்ரபாரதிமணியன்

Pin It