புத்தக வாசிப்பு என்பது ஒருவரின் இலக்கியம் சார்ந்த சிறப்பான இயக்கங்களுக்கு அடித்தளமாக அமைகிறது. வாசிப்பானது பலரை வாசர்களாகவும், அவரவரது மன உணர்வுகளின் உக்கிரமான உந்துதலால் சிலரை படைப்பாளியாகவும் மாற்றும் வல்லமை வாய்ந்தது. ஒரு படைப்பாளி தனக்குரிய களத்தை தெரிவுசெய்வதில் மிகவும் சிரத்தையுடன் செயலாற்ற வேண்டியுள்ளது. தான் தேர்ந்தெடுக்கும் களம் தனக்குத் தோதாக அமைந்துவிடுகையில் எண்ணற்ற நேர்த்தியான இலக்கியப் படைப்புகளை சமூகத்திற்கு அளிப்பதன் மூலம் தனக்கென ஒரு தனிப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்து வாசகரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது சாத்தியமாகிறது. இலக்கியத் தளங்கள் எண்ணற்று இருப்பினும் சமகாலத்தில் கவிதை, நாடகம்(சிறு அளவு), சிறுகதை, நாவல் சார்ந்தவையே இயக்கத்தில் உள்ளன.

kesam 340சிறுகதை என்பதை பாதை தெளிவான ஒரு நீர்த்தடம் எனலாம். வலுவான பிறப்பிடத்தில் உருப்பெற்று, உவமை கலந்த சுவாரஸ்யமோ, விறுவிறுப்போ அல்லது உரித்தான சிறப்புத்தன்மையுடனோ நீட்சி பெற்று, அதன் முனையை எண்ண விரிவின் அற்புதங்களால் முடிந்துவைப்பது. சிறிது நேரத்திற்குள் தடதடத்து பல ஊர்களைக் கடக்கும் இரயில்வண்டி போலல்லாமல் ஓரிடத்தின் செயல்பாடுகளை நிறுத்தி, சற்று நீட்டிச்சொல்வது சிறுகதைக் கட்டமைப்பிற்கு அவசியம். சிறுகதையானது வாழ்வியல் நிகழ்வாகவோ அல்லது கற்பனையாகவோ அமைகிறது. வாசகர் மனதில் கதாப்பாத்திரம் அழுந்தப் பதிவதோடு நல்லதொரு உணர்வு நிலைப்பாட்டுடன் இறுதிக்கட்டம்வரை நகர்த்திவருவதே சிறுகதையின் வெற்றி. படைப்பாளி கதாப்பாத்திரங்கள் வாயிலாகக் கதை சொல்வதுடன் தனக்கே உரிய புனைவுமொழியினைக் கையாள்வதன் மூலம் அவரது படைப்பு சமூக மத்தியில் தனித்துவம் பெறுகிறது.

எழுத்தென்பது எட்டாக்கனியாக இருந்தகாலம் கழிந்து , இன்றைய களத்தில் அனுதினமும் தங்களது வருகையினை பதிவுசெய்தபடியிருக்கும் எழுத்துப்போராளிகளுக்கு மத்தியில் தனது கவித்திறன் மூலம் வாசகர்களால் பெருமளவு கவனிக்கப்பட்டவர் கவிஞர் நரன். தன்சார்ந்த வெளியை உற்றுநோக்குதல், கூராய்வு செய்தல் மற்றும் மெனக்கெடல்கள் ஆகியன இவரது படைப்புகளின் அப்பட்டமான அடையாளங்களெனக் குறிப்பிடலாம். கவிதைத் தளத்தில் காலடி பதித்தவர் தற்போது அதன் விளிம்பிலிருந்து சிறுகதைத் தளத்திற்குத் தாவியுள்ளார். கதைத்தளத்தில் தனது சிந்தனைகளை தனித்து முன்னிலைப்படுத்த முயன்றுள்ளார் இவர்.

நரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு "கேசம்". ஒரு படைப்பாளியின் தளம் ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கிப் பயணப்படுகையில் எண்ணற்ற இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக கதை சொல்லுகையில் திடும் திடுமென நிகழும் மாற்றமானது தொடர்ச்சியை அறுத்தெரியும் கூர்வாளாகவே செயல்பட்டுள்ளது. சில கதைகளில் பாதிக்குமேல் நம்பகத்தன்மையிலிருந்து விலக்குப் பெற்று கலங்கலான செயற்கைச் சாயத்தினை சிரத்தையுடன் பூசிவிட்டது போலான ஒருவித மனோநிலையினை வாசகர் மனதில் தீட்டிவிடுகிறது . பொதுவாக "ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள். கேசம் பொறுத்தவரை , இங்கு இரு அரிசிகள் மட்டுமே பதம். சில அரைவேக்காடு. ஒருசில அரிசியாகவே இன்னும். கவிஞரின் கவித்துவமான வார்த்தைகள் கதைவரிகளுக்கு மெருகூட்டுவனவாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கதாப்பாத்திரங்கள் மீதான கவனக்குவிப்பு ஒருசில கதைகளில் திறம்படக் கையாளப்பட்டுள்ளது. இவரின் பெரும்பாலான கதைகளில் தனித்த மற்றும் சமூகம் சார்ந்த உளவியல் பிரச்சனைகள் கதாப்பாத்திரங்கள் மூலம் உயிர்ப்பிக்கப்பட்டு சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1. கேசம்
~~~~
இக்கதையில் சொற்கோர்வைகள் சிறப்பாக அமையப்பெற்றுள்ளன. நல்ல சுவாரஸ்யமிக்க ஒரு கதை. ஆத்தியப்பன், ஆவுடைத்தங்கம், கணபதியம்மாள் என சிறப்பான பெயர்த்தேர்வுகள். வயது முதிர்வு காரணமாக ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படும் காம உணர்வுகளை உவமையோடு வர்ணித்திருப்பதை வாசிக்கையில் எறும்பு ஊர்வது போலான ஒரு குறுகுறுப்பு உடலெங்கும் பரவி ஒருவித புளகாங்கிதம் அளிக்கும் உணர்வு நிலைகொள்கிறது. நல்ல காட்சிவிரிவுடன் கதைநகர்வு அமைந்துள்ளது. புண் சொரிதலால் கிடைக்கும் ஆனந்தமும் அதன் பின்விளைவான வலியினையும் கதாப்பாத்திரங்களில் காண முடிகிறது. அருவருப்பென ஒதுக்கும் புண்களை குழந்தையென பாவிக்கும் ஒரு நல்ல கதாப்பாத்திரமும் , சாரமும் இக்கதையின் மிக முக்கிய சிறப்பம்சங்கள். ஆத்தியப்பனின் கால்கட்டுகள் அவிழ்க்கப்படுகையில் குழந்தைகளின் பெருமூச்சுச் சத்தம் ஆவுடைக்குக் கேட்கும் வரியை வாசிக்கையில் எண்ணம் அவ்விடத்தே சிறிதுநேரம் உறைந்துபோய்விடுகிறது. நூலாசிரியரின் மிகச்சிறந்த சிறுகதைகளில் என்றும் "கேசம்" ஒன்றாக இருக்கும்.

குறிப்பு: இறுதியில் ஆவுடைத்தங்கம் தனது கூந்தல் நுனியை நாசியருகே வைத்து அதில் இறந்த குழந்தைகளின் வாசம் வீசுகிறதாவென நுகரும் ஆராய்வில் "உரோமம்" கதைக்கான கருவை ஆசிரியர் தீர்மானம் செய்திருக்கலாம்.

2.உரோமம்
~~~~~~
பெற்றோர் சரியாக வாய்க்கப்பெறாத அல்லது பெற்றோரை இழந்த ஒரு பதின்வயது ஆண் குழந்தையின் உளவியல் சார்ந்த தனித்த பிரச்சினையினை மையமாய்க் கொண்டுள்ளது இக்கதை.

தகப்பனற்ற அக் குழந்தையின் கண்முன் அவனது தாய் நெருப்பில் பொசுங்குகிறாள். கடைசியாகத் தான் நுகர்ந்த அவளின் முடிகருகல் வாசனை மூலம் உளவியல் ரீதியாக அவன் பாதிக்கப்பட்ட ஒரு நிகழ்வை மிகவும் விறுவிறுப்பான ஒரு புனைவாக வாசிக்கத் தந்துள்ளார். சிலருக்கு தார் வாசனை பிடிக்கும் , ஒரு சிலருக்கு சிகரெட் வாசனை பிடிக்கும் . அதுபோல இக்கதையின் பிரதான கதாப்பாத்திரத்திற்கு பொசுங்கும் முடி மீது விடாப்பிடியானதும் அலாதியானதுமான ஒரு பித்துநிலை. இவ்வாசனை நுகர்வின் மூலம் தாயின் இழப்பை ஈடுசெய்வதாக எண்ணி தனித்த அசாத்திய உலகில் சுய இன்பனாக வாழ முற்படுகிறான். தொடர்ந்து நீடிக்கும் இந்நிலை அவன் வாழ்வை சரித்து வீழ்த்துமிடத்தே கதை நிறைவுபெறுகிறது.

3.மூன்று சீலைகள்
~~~~~~~~~~~
தந்தை , தமக்கை , தாய் என குடும்ப நபர்கள் அனைவரையும் ஒருவர்பின் ஒருவராக மிக குறுகிய காலத்தில் இழந்து சமூகத்தில் தனித்து விடப்பட்ட ஒரு மனிதனின் உளவியல் பிரச்சனையானது மூன்று சீலைகள் மூலம் முடிவுக்கு வருவதுதான் கதை. மூன்று சீலைகள் வீதம் ஒவ்வொரு சீலையிலும் அவரவர்க்குரிய வாசம். இக்கதையில் தன் சார்ந்த வெளியினரால் "மனப்பிறழ்வு" அடைந்தவன் என்று புறக்கணிக்கப்பட்ட ஒருவனின் உச்சகட்ட மனநிலைப்பாடானது மிகவும் ரசனையோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

நோய்வீச்சம் நிறைந்த காசியின் தங்கைக்கு நள்ளிரவில் சோறுபோடுகையில் "குட்டிப்பாப்பாவின் முகம் சாவுக்களை கண்டுவிட்டது" என அவனது அம்மா கூறுவதாய்ச் சொல்லும் வரியை அலட்சியமாய்க் கடக்க இயலவில்லை.

மூன்று சீலைகள்~உரோமம்~PURFUME
~~~~~~~~~~~~~~~~~~
"உரோமம்" மற்றும் "மூன்று சீலைகள்" இவ்விரு கதைகளும் நுகர்வு தொடர்பானவை. வேறுபாடு எதுவுமின்றி வாசிக்கையில் ஒரேவித உணர்வினை மனத்திற்கு அளிக்கின்றன. மூன்று சீலைகளின் நாயகன் "காசி" , உரோமத்தின் "கணேசனை" நினைவுபடுத்துகிறான். உரோமத்தில் விதவிதமான முடிகள் மூன்று சீலைகள் கதையில் வித்தியாசமான சீலைகள். அவ்வளவே. இவ்விரு கதைகளும் வெவ்வேறு சூழல்கள் , நிகழ்வுகளை மையமாய்க்கொண்டு பயணப்பட்டாலும் வழித்தடம் மற்றும் சேருமிடம் ஒன்றே. ஒரு படைப்பின் சாயல் முந்தைய படைப்போடு ஒத்துப்போகையில் இரண்டுமே முக்கியத்துவத்தை இழக்க நேரிடுகிறது. அதுமட்டுமன்றி இவ்விரு கதையோட்டத்திலும் "PERFUME" திரைப்பட நெடியை நன்கு உணர இயலுகிறது.

4.இதோ என் சரீரம்
~~~~~~~~~~~~
கதை எவ்வித சிக்கலும் , சிரமமுன்றி நகர்கிறது. தான் ஒரு ஓவியம் வரைபவளாக வாழ விருப்பம்கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கும் "எமி" யின் செயல்கள் வியப்பூட்டுவனவாக அமைந்துள்ளன. உதாரணத்திற்கு தான் தேடும் வறுக்கப்படாத காப்பிக்கொட்டைக் கண்களுடைய "சார்லஸ் டி லீவிஸை" பிணக்கிடங்கில் கண்ணுற்ற பிறகு அவன்மீது காதல் வயப்படுவதும், அவனது உடலுக்கு புத்தாடை அணிவிப்பதும், அவ்வுடல்மீது அவளுக்கு காம இச்சை ஏற்படுவதையும் குறிப்பிடலாம். உயிர்கொண்டு நடமாடும் ஒரு ஓவியம் இறந்துபோன ஒருவனது கவிதைகள்மீது அதி தீவிர காதலுடன் இயங்கி வருவதில்தான் இக்கதையின் கவர்ச்சி பொதிந்துள்ளது.

தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்த கூடத்திற்குச் செல்கையில் தான் உடுத்தியிருந்த ஆடைகளின் மேற்புறத்தில் சில குறிப்பிட்ட உடற்பாகங்களில் லீவிஸின் கவிதைகளை கருப்புமையால் எழுதியிருப்பது ஒருவித "கிளாசிக்".

இறுதியில் எமி வரைந்த தனித்தன்மை பொருந்திய இராணுவ ஓவியத்தின் நுட்பத்தை அகதி சூழலில் வாழ்வியல் மேற்கொண்டிருக்கும் அவளொத்த வயதுடைய ஒருவன் வலியுடன் ஆய்ந்து எடுத்துரைப்பதும், அவன் லீவிஸின் தோற்றத்திலிருப்பதும் அப்பட்டமான "கமர்ஷியல்" .

5.லயன் சர்க்கஸ்
~~~~~~~~~~
சர்க்கஸ் பணியாளர்களின் வாழ்வியலை பல்வேறு கோணங்களில் படம்பிடித்துக் காட்டியது போலானதொரு கதை இது. சர்க்கஸ் நடத்துவதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரி ஒருவர் கர்பவதி பணிப்பெண் லீசாவை விலைகேட்பது சமூக அவலம். தனது நண்பர் சர்க்கஸிலிருந்து பிரிந்து தியேட்டரை விலைக்கு வாங்கியபோதும் , துளியும் அசராமல் சொத்துக்களை விற்று சர்க்கஸை மேம்படுத்தத் துணியும்போதும், லீசாவிற்காக போலீசை எதிர்க்கும்போதும் மனத்திண்மை வாய்ந்த உணர்வுள்ள ஒரு கதாப்பாத்திரமாக மனதில் பதிகிறார் ராமன்குட்டி. தனியார் தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளின் தலைதூக்கல்களால் நலிவடைந்து வரும் கலைகள் சில மனதில் வந்துபோகின்றன.

இறுதிக்கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு எப்போதும் நைட்டியுடன் இருக்கும் லீசாவின் கணவன் காளி, திடீரென்று கூண்டினைத் திறந்து சிங்கங்களுக்கு மத்தியில் தன்னை இருத்திக்கொள்வதில் ஒருவித செயற்கைத்தன்மை இழையோடுகிறது. ஒரே சீராக செல்லும் கதையானது இறுதியில் மட்டுமே ஓங்கி ஒலிக்கும் பாணியில் அமையப் பெற்றுள்ளது.

6.பெண்காது
~~~~~~~~
முழுக்க முழுக்க உரையாடல்களால் நெய்யப்பட்ட பிரமாதமான கதையம்சம். கதையமைப்பிற்குத் தகுந்தாற்போல் பாந்தமான பாத்திரங்கள். இக்கதை மூலம் சிறுகதை உலகில் தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் தொகுப்பாசிரியர். பால் வேறுபாடின்றி சமூகத்தின் பொதுவான உளவியல் பிரச்சனையின் நேர்மையான சாரத்தை முன்வைத்த உரையாடல்கள். ஆரம்பம் முதல் முடிவுவரை ஒவ்வொரு வரியிலும் நல்ல காட்சிவிரிவு மனதிற்கு திருப்தியை அளிக்கிறது.நாம் ஒவ்வொருவரும் கனதியான வார்த்தைகளை மலைபோல் குவித்து வைத்தவர்களாய் அவற்றை இரைப்பதற்கு ஒரு செவியேனும் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் அவலநிலையை நேர்த்தியான உரையாடல்கள் மூலம் லாவகமாய் விளக்க முற்பட்டிருக்கிறார். எதார்த்தமான ஒரு தொடர் உரையாடலில் தனித்த சமூகப் பிரச்சினை தீவிரமாக அலசப்பட்டு ஒரு கதை கேட்கும் தொனியில் நம்மை 'ம்' கொட்ட வைக்கிறது.

7.செவ்வக வடிவப் பெண்கள்
~~~~~~~~~~~~~~~~~~
நல்ல கதைத்தேர்வு. பெண்களின் அந்தரங்கம் சார்ந்த பிரச்சினையை அடிப்படையாய்க் கொண்டு கட்டமைக்கப்பட்ட கதை. கதாசிரியர் முற்பாதியில் தனக்குரிய களத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முற்பாதியை வாசிக்கையில் ஒருவித சங்கட நெளிவும், அயர்ச்சியும் ஏற்படுகிறது. இக்கதையைப் பொறுத்தவரை இன்னும் மெனக்கெடல்கள் இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. பொசுக்கென ஆரம்பிக்கும் கதை சுரத்தே இன்றி நகர்வது போலான கதையாக்கம் பெற்றுள்ளது. மாறாக, உச்சகட்ட நிகழ்வில் அனல் தெறிக்கும் உணர்வுகள் மிகவும் சிறப்பான காட்சிகளுடன் எடுத்தியம்பப்பட்டுள்ளது. ஆடம்பர விலைகொடுத்து ஆடை வாங்கி துளியும் பொருத்தமின்றி தொளதொளவென தைத்து உடுத்துக்கொள்வது போலொரு உணர்வை ஏற்படுத்தியது இக்கதை.

8. வண்டு
~~~~
இக்கதை வண்டைக் கருவாகக்கொண்டு சில உவமைகள் மூலம் நான்கு தனித்தனி காட்சிகளாக புனைவு பெற்றுள்ளது . இவற்றுள் புத்த பௌர்ணமியன்று நிகழும் "சம்போகம்" பற்றிய காட்சி எண் 2 குறிப்பிடத்தக்கது. மூன்றாம் காட்சி மேசை மற்றும் வண்டு இவ்விரண்டிற்குமான ஒற்றுமையினை ஒப்புமைப்படுத்தியிருப்பது. இக்காட்சியில் ஆசிரியரின் படைப்பாற்றல் வெளிப்பாட்டினைக் காண இயலுகிறது. ஒரு நிறைவான நீள்கவிதை வாசித்ததைப்போலொரு ததும்பும் உணர்வு இவ்விடத்தே நிலைகொண்டது.

9.பரிராஜா
~~~~~~
மிகவும் வித்தியாசமான ஒரு களம் இக்கதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிவரை எந்த ஒரு சுவாரஸ்யமோ விறுவிறுப்போ இல்லாத மிகவும் சோபையான ஒரு கதை. எண்ணிக்கைக்காகவே இக்கதை நுழைக்கப்பட்டுள்ளது போலான எண்ணம் மனதில் உதிக்கின்றது. கூடுமான அளவில் முயன்று இக்கதையினைத் தவிர்த்திருக்கலாம். கதைகளின் எண்ணிக்கை வாசகருக்கு அவசியமல்ல. தரம் போதுமானது.

10.மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~
கதைமுழுக்க மெலடியின் ஈரம் படர்ந்துள்ளது. இச்சிறுகதையினை வாசிக்கையில் சற்றேறக்குறைய திரைப்படக் காட்சிகளைப் பார்ப்பதுபோல் எண்ண அலைகள் விரிகின்றன. அடுத்தடுத்த பத்திகளில் பள்ளி, கல்லூரி, திருமணம் நடப்பது பின் விதவையாவது என மரியத்தின் வாழ்வியலில் மாபெரும் திடீர்த் திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழில் "சூரிய வம்சம்" படத்தில் ஒரே பாடலில் ஏற்படும் அதிரடியான வாழ்வியல் மாற்றம்போல் வேகவேகமான காட்சிநகர்வுகள். ஒட்டியும் ஒட்டாமலும் செல்லும்படியான ஒரு கதையோட்டம். எந்த ஒரு நிலைப்பாடும் மனதில் சரியாகத் தடம் பதிக்கவில்லை. இக்கதையினை மனம் போன போக்கில் சற்றுப் பொறுமையாக நகர்த்திச் சென்றிருந்தால் மிகச்சிறப்பான கோணத்தில் அமையப்பெற்றிருக்கும்.

11.மானேந்தி
~~~~~~~
சிலைகளைப் பற்றி தனக்குத் தெரிந்த அத்தனை ரசனைகளையும் இக்கதையில் பொதிந்துள்ளார் கதாசிரியர். சிவன்கோவில் வெளிப்பிரகாரத்தில் புணர்வுகொண்டபடியிருக்கும் ஆண்சிலையின் குறியை வெளியெடுத்த மானேந்தி தனது குறியை உள்நுழைப்பதன் மூலம் பெண்சிலையின் கல்வயிற்றை உப்பச் செய்திருப்பது போலொரு கற்பனையினை இடைவிதைத்துள்ளார். இந்நிகழ்வினை வாசிக்கையில் மானேந்தி கதாப்பாத்திரம் ஒரு அமானுஷ்ய படைப்பு எனும்படியான எண்ணத்தினை வாசகரிடத்தே துளிர்க்கச் செய்கிறது. அவனது துறை சார்ந்த அறிவு கதைமுழுக்க விஸ்தாரமாக விரிந்திருக்கையில் இக்கற்பனை நிகழ்வு மட்டும் கதைக்கு பொருத்தமற்றதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிலையின் அறிமுகம் துளியுமற்ற "நாச்சி"க்கு மானேந்தியின் செய்கைகளைக் கண்ணுற்றபோது எத்தகைய பிரம்மிப்பு உருவானதோ அதுபோல சிலைவாசனை நுகர்ந்திடாத வாசகர்களுக்கு இக்கதை பிரமிப்பாக இருக்கலாம்.

எத்தளம் சார்ந்ததாக இருப்பினும் ஒரு படைப்பாளி எவ்வித சமரசத்திற்கும் உடன்படாமல் தனது படைப்புகளைத் தருவித்தல் மிக அவசியம். சமரசத்திற்கு உட்பட்ட படைப்பென்பது , சலசலத்து ஓடும் நதிநீரை வழியில் தடுத்து சிறு தொட்டியில் சேகரம் செய்வதைப் போன்றது. இத்தன்மை வாய்ந்த படைப்புகளை வாசிக்கையில் மனநிறைவற்ற வாசிப்பினையும், சில சமயங்களில் ஒவ்வாமையையும் , வலிந்து முயற்சித்துத் திணிக்கும் கருத்துகளை வாசகர் மனத்திற்கு அடையாளப்படுத்தும் உத்தியையும் தெள்ளத்தெளிவாக வெளிக்காட்டிவிடும். எண்ண அலைகளை அதன்போக்கில் ஓடவிட்டு தனது படைப்புகளை நகர்த்திச் செல்வதன் மூலம் தனக்கென தரமான வாசகர்களை உருவாக்குவதோடு தக்கவைப்பதென்பதும் சாத்தியமாகிறது.

வெறும் சமதளப்பரப்பில் மட்டும்தான் நமது பயணம் என்பது நம்மால் நிர்ணயிக்க இயலாத ஒன்று. மேடுகளும், பள்ளங்களுமே வாழ்வினை சுவாரஸ்யமாக்குபவை. மேடுகளை சமப்படுத்துவதிலும் , பள்ளங்களை நிரப்புவதிலும்தான் நமது வாழ்வு முழுக்க கரைந்துகொண்டுள்ளது. "கேசம்" மற்றும் "பெண்காது" எனும் இரு கதைகளையும் நீரோட்டம் மிகுந்த செழிப்பான வழித்தடங்களாகவும் , பாதியளவு மட்டுமே நனைத்த நீரொழுக்கின் ஈரத்தடமாக சில கதைகளையும் , இன்னும் சிலவற்றினை மேடுகளும் சறுக்கல்களும் நிறைந்த வறள்போக்குத் தடங்களாகவும் உணர்கிறது மனம்.

தேநீரை வடிகட்டாமல் அருந்துவதற்கும் , வடிகட்டி அருந்துவதற்கும் வித்தியாசமுண்டு. படைப்பாளி தனது எழுத்துக் குறைகளை ஆராய்ந்து வடிகட்டுவதன் மூலம் வாசிப்புத்தடத்தில் துருத்திக்கொண்டு இடறிவிடும்படியான படைப்புகளையும் நீர்த்தல் தன்மையுடைய படைப்புகளையும் தவிர்த்து செம்மையான உருவாக்கங்களை வாசகர்களுக்கு அளிப்பதோடு புதிய வாசகர்களையும் தன்பால் ஈர்க்க இயலும். படைப்பாளிக்கு வாசகர்கள் மிக மிக அவசியம். ஏனெனில் ஒவ்வொரு தரமான வாசகரும் படைப்பாளிக்கு ஒரு தரமான விருது. செம்மையான படைப்புகளை அளிப்பதன் மூலம் எண்ணற்ற விருதுகள் தாமாகவே படைப்பாளியைச் சென்றடையும் என்பதில் துளியும் ஐயமில்லை.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It