உங்களுக்கு ராணி அக்காவையோ, அவளைப்போல வலிமிகுந்த பெண்களையோ தெரியுமா? பல ஆண்டுகளாய் மறந்து போயிருந்த அவளை மு.ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்” கவிதைத் தொகுப்பு நினைவூட்டி கலங்கடித்துவிட்டது.
“… கஸ்டமர் கைமாறி விடுவாராக்கா
என்னக்கா
வியாதி வந்து செத்துவிடுவேனா?
பரவாயில்லை
அதற்குள் தொழிலுக்கு வந்துவிடுவாளக்கா
என் மகள் பெரியவளாகி...”
வியாதி வந்து பரிதவித்துக்கொண்டிருந்த சுசீலா அத்தையின் மகள்தான் ராணியக்கா. நான், பாட்டி, சித்தப்பா என எங்கள் குடும்பத்தின் ஒருநாள் செலவே இரண்டு அல்லது மூன்று ரூபாய்கள் என்றிருந்த காலத்தில் எனக்கு ஐந்து ரூபாய் கூலி கொடுத்தவள்.
அந்த கடுங்குளிரில் தூக்கத்தை கெடுப்பவர்களை கொலை கூட செய்யலாம். நடுசாமம் மூன்றுமணிக்கு பாட்டி என்னை எழுப்புவாள். முகம் கழுவியும் தூக்கம் கலையாத எனக்கு ராணியக்கா குட்டிகூரா பவுடரடித்து தெளிய வைப்பாள். நாய்கள் குரைக்க நானும் அவளும் நடந்து போவோம்.
ரோட்டோரத்திலிருக்கும் புளியமரக் கடை ஒரு சிறு வனம் மாதிரியிருக்கும். கடையின் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் என்னை இருத்திவிட்டு அவள் மேலே செல்வாள். அவள் மேலே போனதும் ஒருவன் கீழே இறங்குவான்.
“டீ குடிப்பீயால...” நான் பதிலேதும் சொல்லமாட்டேன். ஒரு அரைமணி நேர இடைவெளியில் சிகரெட் புகையோடு அவன் திரும்புவான். என் மடியில் பன்னோ, மிட்டாயோ விழும்.
அவன் மாடிக்குப் போக இன்னொருவன் கீழிறங்குவான். உறங்கி வழியும் என்னிடம் “அந்த பெஞ்சுல போய் படாம்ல...” என்பான். “ஒறங்கீராத மக்கா... அப்பதான் அக்காவ சீக்கிரம் விடுவான்” ராணியக்காவின் குரல் மனதில் ஒலிக்க மலங்கமலங்க விழித்திருப்பேன்.
“இந்த பச்சமண்ண அந்த குட்டிக்கூட அனுப்புகியே நீ வெளங்குவியா...” பாட்டியை எல்லோரும் திட்டுவார்கள். “இங்கேரு அண்ணன்ட்ட சொன்னா நீ செத்த... ஒனக்கு அப்படி பைசா கேக்குதோ...” துளசியக்கா கும்பலாக வந்து மிரட்டுவாள்.
“பணம் எம்மயித்துக்கு சமம். நாதியத்ததுகோ எதையோ செய்து பொழைக்குது. போற எடத்துல எவனாவது எதையாவது செய்து தொலைச்சா... கூட ஒரு சின்னது இருந்தா அவனுகளுக்கும் மனசுல ஒரு எரக்கம் வரும். குட்டி கொஞ்சம் நல்லபடி வீட்டுக்கு வரும்... அண்ணன்ட்ட சொல்லு, ஆட்டுக்குட்டிட்ட சொல்லு...” பாட்டி ஓலையில் ஈக்கி (ஈர்க்குச்சி) எடுத்தபடி பதிலளிப்பாள்.
ராணியக்காவுக்கு திடீரென கன்னத்திற்கும் கண்களுக்கும் இடையில் ஒரு கட்டி வந்தது. முகம் விகாரமாக தொடங்கியது.
“மேரிக்கும் இப்படித்தான் வந்தது. அவ புளுத்து செத்தா. இந்த குட்டிக்கும் இதான் நடக்கும்...” ஊர் சாபமும் பரிதாபமும் கலந்து பேசியது. வயசு பசங்க இருந்த வீடுகளெல்லாம் சூசகமாகவும், நேரடியாகவும் உபதேசங்கள் செய்தன.
திடீரென ஒருநாள் ராணியக்காவும், சுசீலா அத்தையும் காணாமல் போனார்கள்.
நான் ஊரிலிருந்த நாட்களிலேயே அவர்களை மறந்துவிட்டேன். அவளுக்கு என்ன நடந்ததென்ற விபரம் எனக்கு ஆறு, ஏழு வயதில் தெரிந்திருக்கவில்லை. மு.ஆனந்தன் தன் கவிதையால் கிளறி விட்டுவிட்டார். எண்பது பக்கங்களில் நிறைந்திருக்கிறது அவரது கவிதைகள். நான் இன்னும் “என் மகள் பெரியவளாகி...” என்ற கவிதையிலிருந்து விலக முடியாமல் தவித்துக்கிடக்கிறேன்.
வெளியீடு : அகநி
பக்கங்கள் : 80
விலை : ரூ.70/
தொடர்புக்கு: 94443 60421 / 98426 37637
- திருப்பூர் குணா