புத்துயிர்ப்புகளால் தமிழ் படைப்புலகம் பிரகாசிக்கின்றது. தீபச்செல்வன், குணா கவியழகன், சயந்தன்,  பாரதிநாதன், இரா.முருகவேள், சம்சுதீன்  ஹீரா, அகரமுதல்வன், புலியூர் முருகேசன், பால முருகன், … என்று இந்த படைப்பாளிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது மிகவும் ஆரோக்கியமானதொரு சூழலை தமிழ் படைப்புலகம் கண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும். குறிப்பாக நாவல் இலக்கியத்தில்  புத்தொளி தமிழ் இலக்கியத்தில் பிரவாகமெடுக்க தொடக்க உள்ளது.. கடந்த காலத்தில் இப்படியான பல சிறந்த நாவல்கள் வந்தன. இருப்பினும், அவை இன்று புதிய பாய்ச்சலாக புறப்பட்டு பேரருவியாக தாளத்துடன் பெருக்கெடுத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக கால பெருவெள்ளத்தின்  தவிர்க்கவியாலாத ஒரு பகுதியை கவிஞர் தமிழ்நதியின் புதிய நாவலான பார்த்தீனியம் விவரிக்கின்றது..

tamilnathy novelஇந்த நாவலை வாசித்து ஒரு மாதம் மேல் கடந்து விட்டது.. பரப்பரப்பான தேர்தல்காலச் சூழல் அனைத்தையும்  அனைத்தையும்தான்… விழுங்கி விட்டது. ஆனாலும் கேரள சட்ட கல்லூரி தலித் மாணவி ஜீஷா மீதான கொடூரமான பாலியல் வன்முறை….  பட்ட பகலில் பலர் முன்னிலையில் இரத்தவெறியுடன் கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தற்கொலை முயற்சி…. இப்படியான பெண்கள் மீதான வன்முறைகள் ஏவப்படும் பொழுதெல்லாம் தவிர்க்க இயலாமல் பார்த்தீனியம் நாவல் நினைவுக்குள் வந்து ஒயாமல் கூக்குரல் இடுகின்றது.   சாதி, மதம், வர்க்கம், இனம், மொழி…. போர் இவைகளின் பெயரால் நடக்கும் வன்முறைக்கு பெண்கள், குழைந்தைகள், முதியோர்கள், நிலம் பெரும் சிதைவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  இதில் முதன்மையாக பெண்கள்   மிக அதிகமாக பாதிப்புள்ளாகின்றனர்.  அத்துடன் இந்த சமூகம் குழைந்தைகள், முதியோர்கள், நிலத்தை  பராமரிக்கும் பொறுப்பை பெண்களிடம் மட்டும் அதிகமாக்கி சுமையாக்கி  திணித்துள்ளன. இதனால், ஆக்கிரமிப்பிற்கான போரில் அட்டூழியங்கள் பெண் உடல்கள், நினைவுகள், மனங்களின் மீது ஆழமான வலிகளை, வடுகளை, ஆறாத ரணங்களை ஆழமாக கீறி விடுகின்றன.

 ஏகாதிபத்தியம் (கார்ப்பரேட் முதலாளியத்தின் வேறு பெயர்) என்றால் போர்.. போர்வெறி போரழிவின் பொருளாதாரம் என்பார் தோழர் லெனின்.  இந்த ஏகாதிபத்திய கால கட்டத்தில்  நாடுகள் சுதந்திரத்தையும், தேசங்கள் விடுதலையையும், மக்கள் புரட்சியையும் விரும்புகின்றார்கள் என்பார் தோழர் மாவோ. இந்த முரண்பாட்டிற்க்குள் அனைத்து நாடுகளின் சமூக இயக்கங்களும் இயக்குகின்றன. அதன் ஒரு கண்ணிதான் ஈழம். தமிழீழத்தை சிலர் தங்கள் நலன்களில், ஆதாயத்தில் ஆதரித்ததாக நடித்து … , அனைத்து ஏகாதிபத்தியங்களின் உதவியுடன் தமிழீழ படுகொலையை சிங்கள பேரினவாத அரசு வைச்சு செய்ததை இந்த கொள்கை பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பின்னணியில் நட்பு முகாம் நண்பர்கள், பகை முகாம் நண்பர்கள் முரண்களை இயக்கங்கள் புரிந்து, மக்களுக்கு புரிய வைத்து இருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காது.

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டது. பேரினவாத சிங்கள ஆட்சிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைதியான வழிகளில், சட்டபூர்வமான வழிகளில் போராட்டங்கள் தொடர்ந்தன. தேர்தல்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்து வாக்களித்தனர். இவை அனைத்தும் எந்த நியாயமான தீர்வையும் ஈழமக்களுக்கு வழங்க வில்லை.  எந்த அரசியல் தீர்வும் ஏற்படவில்லை. மாறாக ஒடுக்குமுறையை வன்முறை வடிவத்திற்கு சிங்கள அரசு நகர்த்தியது.  அந்த வன்முறைகளுக்கு பதிலடி கொடுக்க  கம்யுனிஸ்ட் கட்சி உள்ளீட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தவறுகின்றனர்.  விளைவாக இளஞர்கள் சிறு குழுக்களாக இணைந்து  திருப்பி தாக்க முயன்றனவர்.. விளைவு..1983 ஜீலை படுகொலை..இது ஒரு பண்பு மாற்றத்தை ஈழச் சமூகத்தை உந்தி தள்ளியது. பார்த்தீனியம் நாவலில் தொடக்கம் இங்கிருந்து ஆரம்பித்து 1989 வரை ஈழச்சமூகம் சந்தித்த அனைத்தையும்  படைப்பாக , காட்சி படிமங்களாக, வாழ்வியல் நிகழ்வுகளாக நம்முன் விரிக்கின்றன.

கால இயந்திரம் இன்னும் எட்டப்படாத தொலைவில் உள்ளதொரு அறிவியல் கண்டு பிடிப்பு.. ஓளி வேகத்திற்கு மேல் அதிகமாக செல்ல  கூடிய அறிவியல் கண்டு பிடிப்பு…  அந்த இயந்திரம் சாத்தியமா என்பது தெரியவில்லை.. ஆனால் படைப்பாளிகள், இலக்கியவாதிகள் கால இந்திரத்திற்குள் பயண செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படைப்புகள் கால எல்லைகளை ஊடறுத்து தெறித்து நிகழ்காலத்தினுடன் இணைக்கின்றன. படைப்பாளிகள்  தங்கள் படைப்பாற்றலால் அதை சாத்திய படுத்துகிறார்கள்.. தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் 1983-90 வரையிலான காலத்தை இன்றைய காலத்துடன் இணைத்துள்ளது. பிரதி பலித்துள்ளது..

பிரதிபலித்தல் என்பது கண்ணாடியில் தெரியும் பிம்பங்களை போல் படைப்பில்  இருக்கவியலாது. அப்படி இருந்தால் அது படைப்பு கிடையாது. அவை வரலாற்றை  எழுதுவதாக,  , நிகழ்வுகளின் விவரிப்புகளாக மாறி விடும். இலக்கியம் அந்த காலத்தின் முழுமையாக குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்து வாழ்வின் சகல அம்சங்களையும் இணைத்து இழைத்து கோர்க்கப்பட வேண்டும்… வாழ்வின் பொது நிகழ்வுகளும் குறித்த நிகழ்வுகளும், அதில் வாழ்ந்த மனிதர்களின் மனவெழுச்சிகள், மனவேதனைகள் மைய கதையோட்டதுடன் இணைக்கப்பட வேண்டும். அந்த சமூகத்தின் ஆன்மாவைப் படைப்பாளிகள் பிரதிபலிக்க வேண்டும். இங்கு ஆன்மா என்பதை அறிவார்ந்த மனசாட்சி என்ற பொருளில் விளிக்கிறேன்.. ஈழவிடுதலையின் ஆன்மாவை தரிசிக்க புதியதோர் உலகம், நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, ஆறாத வடு….. அவசியம் படிக்கப்பட்டு விவாதிக்கப் பட வேண்டியவைகளாகும். இந்த வரிசையில் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் முக்கியமானதாகும்.

ஈழ இனப்படுகொலைக்கு  காரணங்களை, விடைகளை முள்ளிவாய்க்காலுக்குள் மட்டும் தேடுவது கொல்லன் தெருவில் ஊசியை தொலைந்து விட்டு தேடுவதாகும்.  அல்லது யானையை பார்த்த குருடர்கள் கதையை போன்றதாகும்.  முள்ளிவாய்க்காலில் முடிந்த ஈழ படுகொலைக்கு கடந்த 50 ஆண்டு கால சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையையும், அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஈழவிடுதலை இயக்கங்களின் முழுமையானதொரு வரலாற்று பின்னணியை  தமிழர்கள் விளக்க கொள்ள வேண்டும்.  அதிலும் குறிப்பாக 1983 – 99 கால கட்டம் ஈழ வரலாற்றில்..தமிழக வரலாற்றிலும் மிகவும் முக்கியமானது.

ஒரு தனிமனிதனை, ஒரு குடும்பத்தை, ஒரு ஊரை, ஒரு தேசத்தை அமைதியின் பெயரால், அகிம்சையின் பெயரால், உதவியின் பெயரால் காந்தி என்று பெருமை பீற்றிக்கொள்ளும் இந்திய நாடு தனது இராணுவத்தை அனுப்பி மனித உரிமை மீறல்களை, போர்குற்றங்களை செய்த வரலாற்று சம்பவங்களின் புனைவு இது.  முள்ளவாய்க்கால் பேரவலத்திற்கு தொடக்கமாக பாரபரியமிக்க  ஈழதேசத்தின் விடுதலை இயக்கங்களை ஓடுக்க துணிந்து அடிபட்டு புறமுதுகிட்டு வந்த வரலாறு. வியட்நாமுக்கு பிறகு ஒரு சிறு தேசத்தின் விடுதலை இயக்கத்தின் உலகின் பெரிய இராணுவத்தை எப்படி தோற்கடிக்க முடிந்தது என்ற மக்கள்திரள் வரலாற்றை சொல்லும் புனைவு இது!!

சமீபத்தில் தி இந்து நாளிதழில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் அவர்கள்ளின்ன் மிக நீண்ட போட்டி முக்கியமானது . கொள்கைரீதியானதொரு தலைவராக அவர் உருவாக்கப்பட்டதற்க்கான வரலாறு அதற்குள் பொதிந்துள்ளது.  அதில் “1982-ல் நான் பட்டப் படிப்பை முடித்தபோது என் வயது 20. எங்கள் ஊரில் பதினெட்டைத் தாண்டிவிட்டாலே கல்யாணப் பேச்சு வந்துவிடும். என் அம்மா பெண் பார்க்கிறேன் என்று வந்து நின்றார். நான் ‘இந்தப் படிப்புக்கெல்லாம் வேலை கிடைக்காதம்மா; சட்டம் படிக்கப்போறேன். வேலை கிடைக்காட்டிலும் வக்கீல் வேலை பார்த்தாவது பொழைச்சுக்கலாம்’என்றேன். அப்பா என் பக்கம் நின்றார். மேலே படிக்கப்போனபோது, விடுதலைப் புலிகள் இயக்கம்சார் மாணவர்கள் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. 1983-க்குப் பிந்தைய காலகட்டம் கொந்தளிப்பானது இல்லையா? ‘விடுதலைப்புலி’என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். கண்ணதாசன் பேரவை சார்பில் 1984 மார்ச்சில் ஈழ விடுதலை மாநாடு நடத்தினேன். இப்படிப் போக ஆரம்பித்துவிட்டது.” என்கிறார். 1983 – 99 கால கட்டத்தில் ஈழவிடுதலைக்கு ஆதரவாக தமிழக மாணவர்களும், மக்களும்  பெருந்திரளாக போராடிய ஆதரவளித்த காலம் இது. அந்த மாணவர் போராட்ட களத்தில் உருவானவர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். ( தலைவர் பிறப்பதில்லை..).

இவர் மட்டுமல்ல.. இன்றைய தி.க. தலைவர்களில் ஒருவரான தோழர் அருள்மொழி, ஆனந்தவிகடன் ஆசிரியர் திருமாவேலன், மாவோஸ்ட் கட்சி தலைவர் தோழர் விவேக் ( இன்று மதுரை சிறையில் உள்ளார்..) த..ஒ.வி.இ தலைவர் பொழிலன்...  இன்னும் பலரும் சென்னையில் கல்லூரி மாணவர்களாக, மாணவர் இயக்கங்களின் தலைவர்களாக  இருந்தவர்கள்… 1983 - ஜீலை  வெலிகடை படுகொலை, இந்திய அமைதிப்படைக்கு எதிராக சென்னை அனைத்து கல்லூரி  மாணவர்களின் அலைஅலையாக திரண்டு அணிவகுத்து போராடிய காட்சிகள் கண்முன் விரிகின்றன..  சென்னை அண்ணா சாலை முழுவதும் மாணவர்கள் தலைகளாக இருந்ததை களத்தில்  போராட்டத்தில் கண்டவர்கள் இவர்கள்.

அதோடு..

1983 – 99 கால கட்டத்தில் ஈழவிடுதலைக்கு ஆதரவாக தமிழக களத்தில் நட்பு முகாம், பகை முகாம் என்ற இரண்டு அணிகள் இருந்தன. பகை முகாமில் இந்திய விரிவாதிக்கத்திற்கும் ஆதரவான காங்கிரஸ், பாரதீய சனதா, சிபிஜ, சிபிஎம்..இந்திய அதிகார வர்க்கமும், பெருமுதலாளிகளும் இருந்தனர். நட்பு முகாமில் இரண்டு அணிகள் இருந்தன. திமுக, திக, அய்யா நெடுமாறன் இன்னும் சிலரின் தமிழ் இயக்கங்கள், இவர்க ஆதரவான இதர சமூக இயக்கங்கள் ஒரு அணியாகவும், மா-லெ இயக்கங்கள், இடது சாரி ஆதரவு தமிழ் தேசிய இயக்கங்கள்,, அய்யா பெருஞ்சித்திரனார், சாலையார், ஆனைமுத்து அமைப்புகள், இதர சமூக இயக்கங்கள் மற்றொரு அணியாகவும் இருந்தன. இந்த இரண்டு அணிகளின் மாணவர் இயக்கங்கள் தனித்தனி கூட்டணியாகவும், சில சமயங்களில் ஒர் அணியாகவும் ஈழவிடுதலைக்கு ஆதரவாக மாணவர்களை அணியமாக்கி பெருந்திரள் போராட்டங்களை இக்காலகட்டத்தில் நடத்தினர்.

இந்திய இராணுவத்தை ஈழத்திற்கு அனுப்பு என்பது முதல் அணியினர் கோரிக்கையாக இருந்தது. இதை கடுமையாக விமர்சனம் செய்தனர் இரண்டாவது அணியினர். ஈழவிடுதலைக்கு உண்மையான ஆதரவு தமிழக மக்கள் விடுதலையே என்று மாநாட்டை 1987யில் இரண்டாம் அணியினர் நடத்தினர். அதில் மா-லெ இயக்கங்கள், பொழிலன் மற்றும் பலர் இருந்தனர். மக்கள் பாவலர் இன்குலாப் அவர்களின் கவிதைகள் இந்திய இராணுவம் காஷ்மீர், தெலுங்கானா, நாகா, மணிப்பூரில் செய்த கொடூரங்களை விவரித்து இந்திய இராணுவத்தை ஈழத்திற்கு அனுப்பினால் ஆக்கிரமிப்பு இராணுவமாக,  இந்திய விரிவாதிக்கத்திற்க்கானதாகத்தான் செயல்படும் என்றார்

இந்த நிலையில் திம்பு பேச்சுவார்த்தை நடந்து முறிவடைகிறது. இந்திய அமைதி படை ஈழத்திற்கு செல்கிறது.  சிலநாட்களில் அதன் கோர முகம் வெளிபடுகிறது. திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்து தியாகியாகி காந்தி தேசத்தின் அகிம்சை முகத்தை கிழித்தெறிகிறார்.  சிங்கள இராணுவத்தை விட மிக கொடூரங்களை இந்திய இராணுவம் ஈழத்தில் செய்கின்றது.

தமிழகம் கொந்தளிக்கின்றது. இரண்டு அணிகளாக இருந்த ஈழ ஆதரவு தமிழ்க களம் ஒரு அணியாக கருத்தியல் தளத்தில் மாறுகிறது. சிபிஎம் கட்சியில் இருந்து தியாகு, நீதியரசர்கள் சந்துரு, அரிபரந்தாமன், வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் பலர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர். இந்த நிகழ்வு போக்கில் திராவிடர் கழகம் இரண்டாக பிளவு படுகிறது. பெரியார் திராவிடர் கழகம் விடுதலை இராஜேந்திரன், இராமகிருட்டினன், கொளத்தூர் மணி, ஆனூர் ஜெகதீசன் தலைமையின் தனியாக களம் காண்கின்றனர்.. இன்னும் பல ..பல..

இதையெல்லாம் நினைவூட்டுவதற்கு காரணம்…. பார்த்தீனியம் நாவல் காலத்தை ஈழத்தில் நடந்ததை தமிழக களம் எப்படி அக்காலத்தில் எதிர்கொண்டது ..அதன் முக்கிய அரசியல் பின்னணியை புரிந்து கொள்வதற்குதான்….

போர் எதிர்ப்பு இலக்கியத்தில் முக்கியமானதொரு தடம் பதிக்கும் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல்…

இந்த நாவல் போர்கால படைப்பா,  அரசியல் நாவலா, விடுதலை புலிகள் இயக்கத்தினை பற்றியதா, இயக்கங்களின் உள்முரண்களை விமர்சிக்கின்றதா, காதல் இலக்கியமா..., ஈழ சமூகத்தின் சாதிய – வர்க்க – பிரதேச முரண்களை முன்நிறுத்துகிறதா, கொரில்லா போர் முறைமை பற்றியதா,  1983-90 காலத்தின் ஈழ சமூகத்தை  பிரதிபடுத்துகின்றதா, மலம் கழிக்கும் இன்பத்தினை வழங்காத சொந்த நாட்டில் அகதியாய் நாடற்று அலைந்த பெருங்மக்கள் கூட்டத்தை பற்றியதா, இந்திய அமைதி படை அட்டூழியங்களை பறைசாற்ற வந்த படைப்பா…., ஈழத்தில்  தோற்கடிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கதையா என்ற பல கேள்விகள்  வாசிக்கையில் மனதில் எழுந்து கொண்டிருக்கின்றன. அனைத்தையும் அவரவர் பார்வைக்கு ஏற்ப வரித்துக்கொள்ள முடியும்.  அனைத்தையும் தாண்டி போருக்கு எதிரான இலக்கியது இது என்பதே அடிப்படை உண்மை.

முதல் அத்தியாயம் பரணி-வானதி காதலில் தொடங்குகிறது….. இந்த காதலின் அனைத்து பரிமாணங்களையும்..மயக்கம் … ஊடல்..பிரிவு..கூடல்..என்று தமிழ்நதி  விவரிக்கிறார்..கூடுதலாக ஒரு பெண்ணின் பார்வையில் காதல் காவியமாக நாவலை நம் முன் படைக்கிறார்… இந்த நாவல் எடுத்த கொண்ட  கருப்பொருள்களுக்கு இந்த காதல் வாழ்வின் விவரிப்பு இவ்வளவு தேவையா என்று தோன்றியது.

இதற்கான விடையாக காதல் வாழ்விற்கு எதிர்முரணான ஒன்றை வாசகர் மனங்களில் ஆழமாக ஊடுருவி பதிக்க முனைகிறார்  ..” விரும்பித் தொடப்படுற தொடுதல்களைக்கூட ஒரு பெண் மறந்து போகக் கூடும்.. ஆனால், தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப்போலக் கையாளப்பட்ட அவமானத்தையும்  அருவருப்பையும் அவளால் ஒருபோதும் மறக்க முடியாது. முதுமை கூடி நினைவு தடம்மாறிப் பிறழும்வரை மனதில் ஊர்ந்து திரியும் புழு அது..”

இந்திய அமைதிபடையின்..ஆக்கிரமிப்பு போர்களின் மீதான கடும் விமர்சனமாக அவர் “…. ஒருவேளை ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் கொலையும் இவர்களைப் பொறுத்து கடமையென்றாகிறதா ? எனில், வன்புணர்வுகள் எந்த வகைகள்?” காத்திரமாக முன் வைக்கிறார். அனைவரையும் நோக்கி வைக்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு யாராலும் பதிலை தர இயலாது.. எந்தவித நியாயத்தையும் கற்பிக்க முடியாது என்ற உண்மை 500 பக்கங்களில் விரியும் இந்த நாவலின் சித்திரங்களும், விவரிப்புகளும் நம்முகத்தில் அறைந்து  உணர்த்துகிறன

ராஜனி, சுபத்திரா, ஜெனிபர் முதல் வானதி..என்று  பாலியல் வன்பகடி, பாலியல் வன்புணர்ச்சி, குழந்தைகள் மீதான் வன்புணர்வு,  குரூரமான கும்பல் வன்புணர்வு ..என்று இந்திய அமைதி படையின் ஆணாதிக்க வன்முறைகளை வலியும், சீழுமாய் கண்முன் இரணங்களாய் நம்முன் வீசப்படும் பொழுது சில நிமிடங்கள் மனித பிறவியா எழும் அவமானங்களால் குமைந்து போகின்றொம். அமைதி படையால் வன்புணர்வுக்கும், வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்ட பெண் பாத்திரங்களின் மன உணர்வுகள், உறவுகள்,  வேதனைகள், மனபிறழ்வுகள், நிகழ்வுகள், தனிமைகள், புலம்பல்கள்  போர் சூழல் எப்படி பெண்களுக்கு எதிரானது, அநீதியானது என்பதை ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கும்படி இந்த நாவலில் முன்வைக்கப்படுகின்றது.

மானுட விழுமியங்கள் பற்றிய  தமிழ்நிதியின் அவதானிப்புகளாக, சித்திரங்களாக, மதிப்பீடுகளாக, வீழ்ச்சிகளாக, கேள்விகளாக விரியும் கடைசி சில அத்தியாயங்கள்..

காதல், வீரம், நட்பு, தோழமை, தேசபக்தி, நாட்டு பற்று, சுயநலம், தியாகம், சுயவிமர்சனம், துரோகம், அதிகார திமிர், ஆணவம், அன்பு, , பாசம், தாய்மை … .. .. இப்படியான குணநலன்களும், மற்றும் குடும்ப – சமூக – தனி மனித உறவுகளின் அக-புற முரண்கள், அவைகளின் வளர்ச்சி – வீழ்ச்சிகளை  பற்றிய சித்தரிப்புகளும், மன உணர்வுகளின், காட்சி படிமங்களாக விரியும் பக்கங்ளால் முழுமையடைகின்றன.

இந்த நாவலுக்குள் வரும் நூற்றுக்கும் மேலான பாத்திரங்கள் மூலம் தமிழ்நதி இந்த மன உணர்வுகளை, உறவுகளை சிறப்பாக புரிய வைக்கின்றார். ஜீவானந்தம் மார்க்சிய பார்வையிலான அரசியல் கருத்துக்கள், இயக்கங்கள் மீதான விமர்சனங்கள், புலிகள் ஆதரவு கால பெருமதிமிக்கைவைகளாகும்.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஈழ மண்ணின் அனைத்து நிகழ்வுகளையும் தனது கடின உழைப்பின் மூலம் நாவலாய் படைத்துள்ளார். வரலாற்று விடுபடல்கள் எதும் இல்லை. ஆனால் தமிழ்நதி தனது கண்ணோட்டத்தை நாவல் மாந்தர்கள் வாழ்வியலை விவரிப்பதில் நுட்பமாக பதிவேற்றி உள்ளார்.

எழுதும்பொழுதே வாழ்கிறேன் என்ற இந்த நாவல் எழுதிய அனுபவத்தை பகிர்கிறார் தோழர் தமிழ்நதி.. இந்த கூற்றின் உண்மையை வாசிக்கும் பொழுது அந்த காலத்திற்குள்  வரலாற்றினுள் வாழ்ந்த அனுபவத்தை  பார்த்தீனியம் நாவல் தருகின்றது  என்றால் அது மிகை அல்ல..!

பரணிகள், வானதிகள் இன்று உலகின் எல்லா ஒடுக்கப்படும் தேசங்களிலும், விடுதலைக்காக போராடும் நாடுகளுலும், புரட்சியை நேசிக்கும் மக்களிடம் இரத்தமும் சதையுமாய் உலாவி கொண்டிருக்கிறார்கள்..

ஒரே ஒருநாளாவது அவர்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள, அனுசரனையாக இருந்திருக்கிறோமா..? அதன் தொடக்கமாக இத்தகைய நாவல்கள் இருக்கட்டும்.. குணா கவியழகன், சயந்தன், தமிழ்நதியின் படைப்புகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்குள் விரிவாக கொண்டு செல்ல அனைவரும் முயற்சி அல்ல..உழைக்கவும் வேண்டும்!!

- கி.நடராசன்

Pin It