"ஆயிரம் தலயப் பாத்து 
அண்ணாக்கயிறு அறுத்தவன்டா
செவத்தப் பயலப் பாத்து 
சிரிச்சுகிட்டே அழுதவன்டா"

இதோ... நான்காவது முறையாக இந்தப் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.... பார்க்க பார்க்க.. கேட்க கேட்க...பிசைகிறது.... விசை என்கிறது.... கசை எதிர்க்கிறது....மிகப் பெரிய துக்கத்தின் மிச்சத் துளிகளை திடுமென கொட்டி விட்ட வாழ்வின் திசைகளை மீண்டும் உணர வைக்கிறது..... ஒரு துளி கண்ணீரை எனக்கே தெரியாமல் மறைக்கிறது....மறைக்க என்ன இருக்கு... இங்கே... மறைவதிலும்... தெரிவது தானே வாழ்க்கை....

"ஏன்டா நம்ம பொழப்பு

எட்டிக் காயா கசந்திருக்கு
நான் தொட்டா கைய கழுவுறான்
ஏன் செத்தா தூக்கச் சொல்லுறான்

அட செய்யும் தொழில் தெய்வமின்னு
என்னக் கேட்டா சொல்ல மாட்டேன்டா"

ஓர் ஆதி இசையின் அர்த்தத்தை மாற்றிய மானுடத்தின் முன் வலியோடும்.. வழி மறந்த கண்ணீர் துளியோடும்.. கேள்வி கேட்கும்.. அதிர்வின் உன்னதத்தை உணர்கிறேன்...கேள்விகளின் ஊடாகவே உயிர் வந்த பூமி இது... கேட்காமலும் கேள்வி இருக்கிறது என்பதை... உணரும் நொடிக்குள்.. யுத்தம் செய்தே தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மனிதன்... ஆரம்பத்தின் விழுதை.. ஆன்மாவின் சுய பரிசுத்தத்தோடு முன் வைக்கிறான்... 

"நான் தொட்டா கைய கழுவுறான்
ஏன் செத்தா தூக்கச் சொல்லுறான்"

இதில் கேட்கும் நியாயத்தை மறுக்க முடியாது தானே... உணர்வுகளாலும்.. உள்ளத்தாலும்.. அதே சதையாலும்.. அதே ரத்தத்தாலும்.. பிண்ணப்பட்ட மானுடத்தை வதை செய்தல் தகுமோ... சொல்லடி..... அறிவுடன் படித்து விட்டாய்... பிரபஞ்சமே.. என்று கர்ஜிக்கும் நொடி முழுக்க.. அழுகையும் பீறிட்டுக் கிளம்புவதை எதை கொண்டு மறைக்க.. அல்லது எதைக் கொண்டு திறக்க...அழுகை கோழையின் வடிகால் அல்ல.. அது கோபத்தின் திறவுகோல்.. அழுத பின் ஆத்திரம் போய் விடும்.. பின் அற்புதமான புரட்சி மேல் எழும்... அது இந்தப்பாடலில்.. எழுந்திருக்கிறது..... 

"நெருப்பக் கொழுத்து -என்
நெஞ்சுக்குழி நடுங்கிது
பொளப்ப நெனச்சா - என்
ஈரக்கொல தவிக்கிது

தினமும் விடிஞ்சா -ஒரு
துக்கம் வந்து நிக்கிது
வரவும் உறவும் - என்
கண்ணில் தீய வைக்கிது"

இக் கதை நாயகனின் வாழ்வு துக்கத்தால் நிரம்பப் பட்ட ஒன்று.. அவன் வாழ்வின் முடிவின் ஓரத்திலேதான் தன் சூரியனை எழுப்புகிறான்.. நெருப்பின் வாசத்தில் கருகும்.. தோலின் கனவுக்குள் அவன் தினமும்.. தன்னை மீட்டெடுக்கிறான்.. அவன் தீண்ட... திணறி... காற்றும் நகரும் அவலத்தில்.. அணத்தித் தவிக்கிறான்... வார்த்தை விரட்டுகிறான்...அவன் விடியலில் துக்கமே வாசல் திறக்கிறது.... துக்கத்தால் உருவான கதையை பாட்டாக்கி வீசுகிறான்.. அது அவனின் இருத்தலின் விளிம்பை பறை சாற்றுகிறது..... 

"ஒரு சின்னக் குழந்த கையில் இருக்கும்

முட்ட போல வாழ்க்க
அது எப்பத் தவறும் எப்ப உடயும்
எந்தச் சாமியக் கேக்க

இந்த கெட்ட உலகம் சுத்தும் வரைக்கும்
சிக்கல் மனுசன் வாழ்க்க
ஒரு மூக்குப் பொடிக்கும் 

முட்டி மொனங்கும் கதய எதில சேக்க

அட ஒத்த ரூபா பாத்தா
மனம் செத்திருதே தாத்தா
ஒரு தப்பெடுத்து தோளில் வச்சா
துக்கம் ஆடும் எக்குத் தப்பாடா -நான் மிகவும் துக்கப்பட்டு விசனப்பட்டு... நின்று நிதானித்து.. சிலாகித்து.. உள் வாங்கி உணர்ந்த வரிகள் இங்கே போகிற போக்கில் தூவப் பட்டிருப்பது.. எழுதிய கவிஞரின் ஆழ்ந்த உள்வாங்கலை உணர்கிறேன்...இந்த சமூகத்தின் கடைக்கோடி மனிதன் பற்றிய சிந்தனையை மதிக்கிறேன்.... அவனின் தொழில் சார்ந்த அடக்குமுறையில் இருந்து பீறிட்டு எழும்பிய வாழ்வியல் தத்துவமெனதான் காண்கிறேன்.. வாழ்வின்.. தீர்க்கத்தை கவ்விய மூச்சுக்கள் ஒரு நிமிடத்தில் காணாமல் போகும் சூத்திரம் வாய்த்தவை என்பதை...'ஒரு சின்னக் குழந்த கையில் இருக்கும் முட்ட போல வாழ்க்க..... அது எப்பத் தவறும் எப்ப உடயும் எந்தச் சாமியக் கேக்க..." என்று மிகப் பெரிய ஓர் ஆன்ம தத்துவத்தின் வசீகரத்தை.. வாக்கியத்தின் கோடாக்கி மெட்டுக்குள் முட்டையாக்கி உடைத்துப் போடும் எழுத்துக்களின் ஆளுமையைக் கொண்டாடாமல் இருக்க முடியாது.....

அசுரன் ஒருத்தன் -ஏம்
பரம்பரைக்கு மூத்தவன்
அவன நெனச்சா - நான்
பறையடிச்சு ஆடுவேன்

தன்  கோபத்தை.... தாபத்தை.. இயலாமையை.. அல்லது.. கொண்டாட்டத்தை அவன் அடிக்கும் பறையில் இசையாக்கி... இந்த வெளியில்.. தானும் ஒரு மனிதன் என்பதை உரக்க கத்தி சொல்கிறான்..... சாவுக்கு அடிக்கவா பறை.. அது... ஆதி இசையின் மூலம்.. அத்துவானக் காட்டில் வேட்டைக்குப் போன சமூகத்தின் இரவு நேரத்தை கொண்டாட்டத்துக்குள் கொண்டு வந்த ஆனந்தம்... சோர்ந்து போன மனதுக்கும்.. உடலுக்கும் புத்துணர்வு கொடுத்தவனை இன்று காலம் எங்கு வைத்திருகிறது......என்று தன் உரிமைக்கான கேள்வியை கேட்கிறான்... 

"பணிஞ்சா உலகம் என்ன
கோழையினு சோல்லுது
துணிஞ்சா உடனே என்ன
தூக்கச் சொல்லி தவ்வுது

இந்தக் காக்கிச் சட்டையும்
கட்டப் பீடியும் கண்ணீரோடும் ஒருநாள்
நான் பாடம்படிக்க சொல்லிக் குடுத்த
வாத்தியாரப் பாத்தேன்"

குனிஞ்சா குட்டும் இந்த உலகம்.. நிமிர்ந்தா கொன்று விடத் துடிக்கிறது... இந்த உலகை வெல்ல வரவில்லை நாங்கள்... வாழ வந்திருக்கிறோம் என்று ஆழ் மன போராட்டமவனை சூழ்ந்து கொண்டு... அலைக்கழிக்கிறது.  ஏதோ கனவோடு படிக்கத் தொடங்கியவன் அதன் பிறகு வாழ்வின் வழியில்... தடம் மாறி சமூக கைகளுக்கு முதுகு காட்டி வளைந்தே.... பசி கொண்ட கண்களோடு..... அவன் காக்கி சட்டையும் கட்டை பீடியும்.. கூட கண்ணீருடன் அவன் வாத்தியாரைக் கண்டேன் என்று கூறுகிறான்.. 

இந்த வரிகளுக்குள் பொதிந்து கடைக்கும் வலியின் வேகத்தை எந்தப் புயலோடு ஒப்பிட......அது.. தவம் கலைந்த ஆன்மாவின் அலறலைப் போலானது... 

"ஒரு காக்கா தின்னு எச்சம் போட்ட

வேப்பமுத்தப் போல 
என்ன எங்கோ தூக்கி வச்சிருச்சே
காலம் கழிவப் போல

நம்ம வந்த வழி ஒன்னு
நம்ம போற வழி நூறு
அட முதலு முடிவு ரெண்டுக்குள்ள
மிச்சம் பாத்தா ஒன்னுமில்லடா" 

இந்தக் காலம் அவனை எங்கோ ஒரு தூரத்தில் அவனே திரும்பி வர முடியாத மறதியின் ஞாபகத்தில்..ஒரு காக்கையின் எச்சம் போல... மறக்கடித்து விட்டது... என்பதை கதை நாயகன் அழுது கொண்டும் சிரித்துக் கொண்டும்... ஒரு ஞானத்தின் திறவுகளை கொள்வதாய் பாடுகையில்... நெஞ்சை பிசைகிறது...சமூகத்தின் சுவர் தாண்ட நினைக்கும் ஏக்கம்...

முதலும் தெரியா...முடிவும் தெரியா புள்ளிக்குள் வருவதும் போவதும் ஒரு நிகழ்வென கூட இல்லாமல் இருக்கும்.. ஒரு தோற்றத்தின் மயக்கங்களே... இந்த பிறவி. ஒருவன் செய்யும் தொழிலாலும்... பொருளாதார நிலையாலும் அவனை.. அடிமைப் படுத்தி.. தனக்கு கீழ் வைத்துக் கொள்ள நினைக்கும் மனோபாவம்.. மனோதத்துவ ரீதியில்.. பிறழ்ந்த பாவம்..அது பாவத்தின் சம்பளத்தை அறுவடை செய்தே தீரும்..

மிச்சம் பார்.. ஒன்றுமில்லை... என்பது தான்.. மானுட தத்துவம்... அதை.... பறை அடித்து.. பாட்டெடுத்து... பிறழ்ந்த காதுக்குள்.. ஊற்றி விட்ட கவிஞர்  தேன்மொழி அவர்களை வாழ்த்துவோம்..... இன்னும் இது போல சமூக அவலங்களை தோல் உரித்துக் காட்டும் வரிகளை... அவரின் முனை படைக்கட்டும்... படைக்க படைக்க.. அடிக்க.. அடிக்க.. நொறுங்கட்டும்.. கட்டுக்கள்.  விலகட்டும்.. பிற்போக்கு.. கட்டமைப்புகள். 

நீங்கள் தீண்டாதவைகளை உங்களுக்காக அவன் தீண்டுவதால் அவனை தீண்ட தகாதவன் என்று கூறுகிறார்களா......?- மானுடம் இனி செத்துதான் போகும்.. 

- கவிஜி

Pin It