kalaivanan 237செரைக்க போக வேண்டியது தானல
ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்
நீ வழிச்சது போதும்
இவன் பெரிய மயிராண்டி
அந்த மயிரெல்லாம் எனக்கு தெரியும்

இப்படி சம்பந்தமே இல்லாம
வாய தொறந்தா
ஏம்புல எல்லாத்துக்கும்
எங்கள இழுக்குறிய
மொட்டைப் பயலுகளா

இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த நூலின் முதல் பக்கம்... ... மீண்டும் அதே வரிகளைப் படித்தேன்... மீண்டும் படித்தேன்... பார்க்க பார்க்க பிடிக்கும் என்பது போல படிக்க படிக்க புரிந்தது...

புரிய என்ன இருக்கு...?- உனக்கு கீழ ஒருத்தன் இருக்கானு நீ நினைக்கறதே உன் மன நிலை தவறுதல் பற்றி சொல்கிறது என்பது புரிகிறது........

இதில் எழுதப் பட்டிருந்த வரிகளில் கவிதை தாண்டிய கோபம் இருப்பதை உணர்கிறேன்...ஆம்.... தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலர்.... இப்படித்தான் பலரை வம்புக்கு இழுக்கிறோம்...இழுத்துக் கொண்டிருக்கிறோம்...

இ எம் எஸ் கலைவாணன்.... இந்த நூலில் ஆசிரியர்...

இந்நூல் அறிமுக விழாவில் மூன்று மணி நேரத்தில் இக் கவிதைகளை எழுதியதாக கூறினார்....மடை திறந்த வெள்ளம் போல வார்த்தைகள் விழுந்திருக்கின்றன... ஒரு 50 வயது வாழ்வின் சுருக்கம்.... இங்கே நிறைந்திருக்கிறது....

படித்தவன் படிக்காதவன், பணம் இருப்பவன் இல்லாதவன், விஷயம் தெரிஞ்சவன் தெரியாதவன்...இப்படி எல்லா இடத்திலேயும் சாதி பார்ப்பவன் இருந்து கொண்டே இருக்க காரணம் என்ன...? இப்படி ஒரு மிகப் பெரிய கேள்வியை நம் முன்னால் வைக்கிறது இந்நூலும்...!

சவரம் செய்வது ஒரு தொழில்... இதில் எங்கிருது வருகிறது தீட்டும்... சாதியும்....கிரிக்கெட் பார்க்கும் போது இருக்கும் சரிசமம் சவரக்காரனிடம் அக்குளை கம்பீரமாக காட்டும் போது ஏன் இருப்பதில்லை..."மயிரு வெட்டிட்டு வந்தா குளி" என்றது, ஒட்டிய மயிருகள் போகத்தானே ஒழிய மயிரு வெட்டியவன் தீட்டு போக அல்ல... எங்கிருந்து வரும் தீட்டு... எப்படி வரும்.... ஒரு நாளைக்கு ஒரு முறை குளிப்பவர்கள்தான் இங்கு அதிகம்.. அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்கிறார்கள்..

இப்போது சொல்லுங்கள்... தீட்டு என்று ஒன்று இருந்தால் இப்போது யாரை யார் தொட்டால் வரும் என்பதை......?

ஆசிரியரின் மிகுந்த வலிகளோடு வரி ஆகி இருக்கிறது அவரின் வாழ்க்கை...அவர்களின் வாழ்க்கை... படிக்க படிக்க வந்தே மாதரம் எல்லாம் அப்புறம் இருக்கட்டும்... முதல்ல இது நியாமா என்று கழுத்தில் கத்தி வைத்துக் கேட்கத் தோன்றுகிறது...

"இனி மேல் நாங்க மயிரு வெட்ட மாட்டோம்னு சொன்னா என்ன பண்ணுவீங்க.. குடுமி வைச்சுகிட்டு திரிவீங்களா..... இனி மேல் நாங்க மலம் அள்ள மாட்டோம்னு சொன்னா என்ன பண்ணுவீங்க.. காட்டுக்குள போவீங்களா.... ஒன்னு பண்ணலாம்.. இனி எல்லா சாதிலையும் படிக்காதவன் இருப்பான்ல.. அவுங்க சுழற்சி முறையில கடை நிலை வேலைகளை செய்யட்டும்.. அவனுக்கு மட்டும் என்ன பத்திரமா எழுதி குடுத்திருக்கு மலம் அள்ளவும்.. சாக்கடை அள்ளவும்.. மயிரு வெட்டவும்..."-படிக்க படிக்க இப்படி நியாயமான எண்ணங்கள் நமக்குள் விதைவதை உணர முடிகிறது.... உணருதல் தானே மானுட வளர்ச்சி.... பாட்டன் சொன்னான்.. பூட்டன் சொன்னான் என்று இன்றும் கோவணத்தையா கட்டிக் கொண்டு இருக்கிறோம்.... மாற்றங்களின் வழியாக பயணித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.... பிறகு.. சாதியில் மட்டும் என்ன.. எங்கிருந்து வந்து கிரீடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது... "நான் மேலே" என்று சொல்வது கூட மன நோய்... "நான் கீழே" என்று எண்ணுவது போல...

இந்நூல் ஆசிரியரின் உறவுகள் குறித்தும் உண்மைகள் குறித்தும் பேசுகிறது....... இதுவரை நாம் கண்டும் காணாமல் கடந்து போன சலூன் சடைகளின் பெஞ்சுகள் குறித்து பேசுகிறது.. எப்படி கூட்டிப் பெருக்கினாலும் எப்படியோ ஆங்கங்கே சிதறிக் கிடக்கும் சிறு சிறு கத்தரிக்கப்பட்ட மயிருகள் பற்றி பேசுகிறது.... பட்டும் படாமல் வெடிக்கும் அரசியல் பற்றி பேசுகிறது...

வறுமையின் பிடிகள் பற்றி பேசும் கவிதைகளில் ஐந்தாறு முடிகள் சேர்ந்தே கிடப்பதுதான்... தொடர்ச்சியின் தூண்டில்.... அது சிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.. என்ன தான் செய்வது.. பிழைப்பு இதுதான் என்றாகி விட்ட போது.....?

காசுக்கு வேலை.... நீ உட்காருகிறாய்.. அவன் மழித்து விடுகிறான்.. சரியா போச்சு.. அதுல என்ன அதிகாரம்... இது தான் இங்க தொக்கி நிக்கிற கேள்வி...

சக மனுஷன் கிட்ட "இங்க மழி அங்க மழி"னு சொல்றதுதான் ஏதேச்சதிகாரம்.... உன்கிட்ட காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவியா...? சரி நீ குடுக்கற காச விட ஒரு ரூபா அதிகமா நான் தரேன்.. நீ என்கிட்ட மழிச்சு விட சொன்ன இடத்துல நீ மழிச்சு விடேன்.. பார்க்கலாம்....... முடியாதுல்ல.... அப்படித்தான்.. இது பொதுவான வாழ்க்கை.. அவனவன் வாழ்வை அவனவன்தான் தீர்மானிக்கணும்...ஆனா மனுஷன் பண்ணின தவறுகளால் அது பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது...பணம் கொண்டவன் பெரிய மனுஷன் ஆகும் போது தர்க்கங்கள் வீதி சமைத்துக் கொண்டேதான் இருக்கும்....

சுய விமர்சனத்துக்கும் உள்ளாகுக்கிறார் தன் வரிகளைக் கொண்டே...

"என்ன வேணா சொல்லு.... இந்த சாதின்னு மட்டும் வெளிய சொல்லிடாதனு" அக்கா சொல்லும் போது அதை எப்படி உள் வாங்கி இருப்பார்... என்பதை அவரின் மொழியிலேயே புது கவிதை செய்கிறார்.. ஆசிரியர்...அதிகார சமூகத்திடம் அண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்தின் வலி பற்றி பேசும் வரிகளில் பெரிய ஏக்கத்துக்கும் பின்னடைவுக்கும் மனம் செல்லுவதை தடுக்க முடியவில்லை... பெரியாரையும் ஒரு குறிப்பிட்ட சாதியில் சேர்த்து விட்ட அறிவு ஜீவிகள் இருக்கும் நாட்டில் வேறு என்னதான் செய்வது... விட்டு விட்டு அரபுக்காரனிடம் அடிமையாக ஒட்டகம் தான் ஓட்ட முடியும்... அவனாவது... அடிக்கத்தான் செய்வான்.. இவர்களோ.. கொட்டுகிறார்களே... நாவினால் சுட்ட வடுவை தாண்டி திருக்குறள் செய்வது சாத்தியமா......?

விளிம்பு நிலை வாழ்வின் நுட்பங்களின் அலட்சியங்கள் பற்றி நிறைய பேசுகிறார்....நாயை விட கேவலமாக பார்க்கும் கண்களுடன்தான் தினமும் வாழ்வை ஓட்டியாக வேண்டிய சூழல் அவரை வெட்டிக் கத்தரிக்கிறது...... அப்பா இரவில் கத்தரியோடு வரும் போது பேய் பூதம் கூட அருகில் வராது என்று கூறும் வரிகளில் பல வாசல்களைக் கடந்து ஒரு திறப்பு நமக்கு சாத்தியமாகிறது.... அதே சமயம்.. அப்பா வடையும் டீயும் வாங்கி கொடுத்து விட்டு எதுவும் பேசாமல் போகும் போது பழைய அப்பா போகிறார்னு ஒரு வார்த்தையோடு அந்த கவிதையை முடிக்கிறார்.. நான் திக் என்று நிமிர்ந்தும் கூனியும் தடுமாறிய இடம் அது.. அது என்ன பழைய அப்பா.. பழைய நண்பன் சரி..பழைய மனைவி கூட சரி.. அது என்ன பழைய அப்பா...யோசித்தலின் உட்புகும் சலம்பல்களின் சப்தம் கொடூரமாக கழுத்தெழும்பை கர கரவென அறுக்கும் நயமிக்க நிஜங்களோடு சொல், ஆளப் பட்டிருப்பதை மூர்க்கமாக கத்தி படிக்கத் தூண்டியது.. "பழைய அப்பா...."

வறுமை.. ஆசை... அன்பு... உரிமை... தேடல்... வாய்ப்பு..... இப்படி எதுவுமே அற்ற ஒரு சிறுவனின் ஊடாக ஒரு வாழ்க்கை வெட்டப் பட்டுக் கொண்டே வந்து இன்று வரை அது வெட்டப் படவே காத்துக் கொண்டிருப்பதை கண் கூட எடுத்து வைக்கிறார்... எப்படி பழகினாலும் கடைசியில் "ஏய் நீ அந்த சாதிதானப்பா" என்று பிரித்து விடும் பெரும்பாலைய இடத்தில் இயலாமையுடன் வந்த கோபத்தையும் காட்ட முடியாமல் துவண்டும் தனித்தும் போகும் காலங்களை அச்சில் வார்த்திருக்கிறார்......பக்கத்துக்கு பக்கம் நிஜங்களின் முகம் கிழிபடுவதை மறுக்கவே முடியாது.. மறுக்கப் பட்ட சமூகத்தின் சன்னல்களில் எப்போதும் ஒரு கல் விழுந்து கொண்டேதானிருக்கிறது..... இது சாபக் கேடு என்று கடந்திடும் மன நிலைக்குள்... இது என் நாடு என்று கூறும் வலிமையை இழக்கத்தான் வேண்டியுள்ளது.......

நாம் சிறுவதில் கண்ட சலூன் கடை அனுபவங்களை இந் நூலில் காண முடிகிறது.... இன்றைய தலைமுறைக்கு கிடைக்காத அந்த சலூன் வாசத்தை நமக்கு ஞாபகமூட்டுகிறார்....வாசங்களில் சிரித்துக் கொண்டிருக்கும் நீரில் ஒட்டிய ஒரு கிராமத்து பெண் சுவற்றில் படமாகி நிற்பதை அவர் நினைவுகளை போலவே என் நினைவும் மங்கிய வெளிச்சத்தில் இனம் புரியாத கிளர்ச்சியை இன்றும் ஏற்படுத்துகிறது....

பண்டிதம், முண்டிதம், இங்கிதம் சங்கீதம் - இப்படி நால் வித்தைகள் அறிந்தவனை இன்று சமூகம் எங்கு வைத்திருக்கிறது என்பதுதான் பொட்டில் அறையும் கேள்வி...அப்படி என்ன உங்களுக்கு கொம்பு முளைத்திருக்கிறது.... அவர்களுக்கு முளைக்கவில்லை... ஒரு காலத்தில் மருத்துவம் பார்த்த சமூகத்தை... இன்று அக்குள் மழிக்க வைத்து வேடிக்கை காட்டும் சமூகத்தில் வளர்ச்சி என்பது... வர வர மாமியா கழுதை போல தேய்வது தானா...? வெறும் கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருந்தால் யார்தான் பதில் கூறுவது.... நல்ல பதிலை தேடித்தானே நாட்கள் நகருகிறது.. இதில் பதிலும் அற்ற கேள்வியும் அற்ற கூமுட்டை வாதங்களைக் கொண்டு "நானெல்லாம்.. வானத்துல இருந்து தொபுக்குனு குதிச்செனு" சொல்வது எல்லாம் படு பயங்கரமான அறிவீனம்...

நீ அவனை வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்று கூறினால் அவனும் நீ வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்பான்...இனி எல்லாம் அப்படிதான்.... எத்தனை நாள் தான் நீயே முகம் சுழிப்பது.. கொஞ்ச நாள் அவனும் சுழிக்கட்டும்... என்ன உன்கிட்ட பணம் இருக்கு... அது தானே..." இருப்பவன் தர மாட்டான்... இல்லாதவன் விடமாட்டான்...."- இன்னொரு புரட்சிக்கு அவன் எப்போதோ தயார்... ஞாபகம் இருக்கட்டும்.... இது பொதுவான பூமி... இங்கு இருப்பவை எல்லாம் இங்கு இருந்து எடுக்கப்பட்டவையே... அதில் அவனுக்கும் பங்கிருக்கிறது.. சுரண்டல் தொடரும் பட்சத்தில் சுரண்டியவன் சுரண்டப்படுவான் என்பது நியதி...

சக மனிதனை மதியுங்கள்.. தீட்டு.. கோட்டு எல்லாம்... ஒரு புண்ணாக்கும் இல்லை.. காலையில் எல்லாருக்கும் மலம்தான் வருகிறது... எவனுக்கும் பிரியாணி வருவது இல்லை....அப்படி எவனுக்காவது பிடியாணி வந்தால் அப்போது கூறுங்கள் அவன் உயர்ந்த சாதி என்று...

உலகமயமாக்கல் வந்து சிலரை பியூட்டி பார்லர்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டதை தவிர வேற எதுவும் நடந்து விடவில்லை..பெரிய மாற்றத்திற்கான சிறிய வேலைபாடுகள் கூட நடப்பதாக தெரியவில்லை.... இங்கு, எப்படியெல்லாம் பணம் சேர்க்கலாம், எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்று யோசிக்கவே நம் அரசியலும் ஆட்சியும் இருப்பதால் எந்த மாற்றத்திற்கும் நேரமும் இல்லை... நேர்மையும் இல்லை... இன்னும் அழுக்கு முடியோடு ஆழ்மனதில் பைத்தியம் பிடித்து கிடக்கும் நிறைய மாமனிதர்களுடன் தான் ஜீவிக்க வேண்டியுள்ளது என்பதை ஆங்காகே எச்சில் தெறிக்கும் வார்த்தைகளுடன் கடந்து செல்கிறார்... படிக்க படிக்க வெவ்வேறு தீண்டாமை நினைவுகளுக்கு செல்வதை தவிர்க்க முடியவில்லை... 21ம் நூற்றாண்டிலும் அதே தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று கேட்டு விட்டு பள்ளியில் சேரும் குழந்தைக்கு முன் நீங்கள் என்ன சாதி என்று கேட்கும் சூழலில்தான் நம் கல்வி அமைப்பும் வாழ்வின் ஆதாரமும் இருப்பது மிகவும் வருந்ததக்கது.... கண்டிக்கத்தக்கது.....அருவருக்கத்தக்கது....

மெல்லிசான வரிகளால் ஆன மனதை சாதி சாதின்னு சொல்லி... கீறி ரத்தம் பார்க்க வைத்து, பிசைந்து ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டு, மனப் பிறழ்வை நோக்கி தள்ளி விடுகிற சில வெட்டேத்தியான சமூகம் சிந்திக்க வேண்டும்...

களை கட்டியிருந்தது
பிச்சாண்டி ஆசாரியின்
கல்யாண வீடு
முதல் பந்தியில
பக்கத்துக்கு கோவிந்தன் நாயர்
இலைக்கு பருப்பு வந்தது

இப்பவே யாம்புல இருந்தியன்னு
சோறு விளம்புன ஞானபிறகாசம்
ஓடுங்கள நாசுவ தாயளின்னு
எழுப்பி விட்டான்
என்னையும் என் அம்மையையும்

எல்லா விஷேச வீட்டுலயும்
ஒரு ஞானபிறகாசம் இருப்பான்
எங்களை விரட்டி விடுகதுக்கு.

சத்தியமாக இவ்வரிகளில் கண்கள் கலங்காமல் என்னால் கடந்து போகவே முடியவில்லை..

"என்னத்த மயிரு சாதி... சக மனுசன் இலைல உக்காந்த பின்னால எழுப்பி விடறியே, மிருக சாதி கூட இந்த வேலைய பண்ணாது..."

தோழர்களே.... மிகப் பெரிய மனச் சிக்கலை இந்த சமூகம் கண்டு கொண்டிருக்கிறது... எங்கு எவன் விதைத்ததோ..... கள்ளி செடிகள் கையையும் காலையும் கிழிக்கிறது... வெட்டி எறியுங்கள்.... அப்படி என்ன ஒரு சந்தோசம்.. ஒருவனை குத்தி பேசுவதில்... ஒதுக்கி வைப்பதில்...?... நடந்தால் மனிதன்.. கிடந்தால் பிணம்.. இதைத்தாண்டி... ஒன்றுமேயில்லை... ஒன்றுமேயில்லை... புரிந்தவனே உயர்ந்தவன்.. மற்றவன்தான் தாழ்ந்தவன்.... பெயருக்கு பின்னால் பட்டம் பட்டுக் கொள்ளுங்கள்... நீங்கள் சாதி என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றை தயவு செய்து போட்டுக் கொள்ளாதீர்கள்.... அது நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று எல்லாருக்கும் சுலபமாக காட்டிக் கொடுத்து விடும்...

சாதி என்று சொல்லி ஒரு மிகப் பெரிய துரோகத்தை செய்து வரும் செயலில் இருந்தே வெடித்து கிளம்புகிறது இம்மாதிரியான வரிகள்.... நாம் என்ன ஆய்தம் எடுக்க வேண்டும் என்றே நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்பது போல.... சாடவேண்டும் என்பதல்ல விதி.. சாட சொல்லுதல்தானே செய்திட்ட பதி.. பதியலும் விடியலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைவை என்பது போன்ற நகரும் தீட்சண்யத்தில், வரிகள் மூழ்கி மூழ்கி சொற்றொடராகி அக்கவிதைக்குள் திரண்டு காணக் கிடப்பதில் கோபமும்.. கொக்கரிப்பும் ஆத்திரமும்.. ஆத்ம திருப்தியும்... ஒரு சேர வந்ததில் ஒன்றுமில்லை.... ஒன்றுமேயில்லை என்பது தான் நன்று ..... நன்று என்பது மதி... நன்றல்லது என்பது மிதி.. மிதிக்கவா மதிக்கவா என்பதில்தான் மானுடம் கண்ட பேரின்பம் இருக்கிறது... இருப்பது போல இல்லாதவையும், மாயம் சொல்லும் மாற்றுக் காட்சிக்குள் பிழையாகி போகாதே மனிதா.. நீ விலையாகியும் போகாதே ...விளைதலில் தான் வாழ்க்கை....... அழிதலில் இல்லை...

ஒரு கூடை மயிரோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்......எப்பொதும்... வெட்ட வெட்ட வளரும் மயிறு போல யாரை நீ வெட்டுகிறாயோ அவன் வளர்ந்தே தீருவான்... இது நியதிக்குள் நீதி....

நிறைய கிளறி விட்ட புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்கிறேன்... ஏதோ ஒன்று எனக்குள் தொலைந்து கொண்டே இருப்பது போலவும்.. ஏதோ ஒன்று என்னுள் கிடைத்துக் கொண்டே இருப்பது போலவும்.. மாயங்களை கடந்த யதார்த்த வீதிகள் எனக்குள் சப்பனமிட்டு அமர்வதை நான் கண்கள் மூடி தியானிக்கவில்லை... கண்கள் திறந்து வாசிக்கிறேன்.... வீதி முழுக்க குப்பைகள்... யாரும் எடுக்கவில்லை என்றால் நானே எடுத்து விடுகிறேன் என்பது போல... மீண்டும் ஒரு கண் திறக்கிறது எனக்குள்....

சுருங்கிய தோல்
ஒட்டிய கன்னம்
சவர கத்திக்கு
வரைந்த கண்ணாய்
நரை முடியோடு
அம்மா அழகு.

- கவிஜி

Pin It