தேதி : 07 மே 2011, சனிக்கிழமை                               நேரம்: மாலை 5 மணி
இடம்: கல்வியியல் துறை அரங்கு, லயோலா கல்லூரி| சென்னை.

    பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றப் போர்வையில் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அரசாங்கம் எந்தவிதமான போர் விதிகளையும் பின்பற்றாமல் திட்டமிட்டு பொதுமக்களின் எண்ணிக்கையை குறைத்து கூறி அவர்களுக்கு சென்று சேரும் உணவு, மருந்துகளை தடை செய்தது. பாதுகாப்பு வளையங்கள் என்ற பெயரில் பொதுமக்களை ஒன்று கூட செய்து கொன்று குவித்தது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பொதுமக்களையும் தாக்குதல் நடத்தி கொன்றது.

    இலங்கைக்கான முன்னாள ஐ.நா.-வின் பிரதிநிதி கோர்டன் வைஸ் அவர்கள் கூறுகையில், “மே 2009-ல் முடிந்த இந்தப்போரின் கடைசி நாட்களில் 40,000 அதிகமான பொதுமக்கள் இலங்கை அரசாங்கத்தின் கடுமையான குண்டுவீச்சுகளாலும், ஆட்டிலெரி தாக்குதல்களாலும்  கொல்லப்பட்டனர். 3,00,000 மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர்” என்கிறார்.

    நடந்து முடிந்தப் போரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க வேண்டும் என்று உலகிலுள்ள பல்வேறு பொதுநல மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, ஐ.நா.வின் செயலாளர் பான்கி மூன் அவர்கள் இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட விதம் குறித்து தனக்கு ஆலோசனை கூறுவதற்கு மூன்று பேர் கொண்ட கமிட்டியை நியமித்திருந்தார்.

    இந்த மூன்று பேர் கமிட்டி போரில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போர் குற்றங்கள் புரிந்துள்ளனர். எனவே, “போர் குற்ற விசாரணை” தேவை என்று கூறியுள்ளது. போரைப் பற்றி மட்டுமே அறிக்கை தந்துள்ள இந்தக்குழு போருக்கு காரணமான இலங்கை அரசின் தொடர்ச்சியான தமிழின அடக்குமுறையையும், இனவெறியை  பற்றியும் எதுவும் குறிப்பிடாமல் மேலோட்டமாக போரைப்பற்றி மட்டுமே பேசுகிறது. இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை போர் குற்றம் என்ற அளவில் சுருக்கப் பார்க்கிறது.

    மேலும் போரின் இறுதிக்கட்டத்தில் கெல்லப்பட்ட பெருந்தொகையான மக்களை காக்க தவறிய ஐ,நா ,வின் செயல்பாடு பற்றியோ, ஐ,நா, அதிகாரி விஜயநம்பியாரின் ஒப்புதலுடன் வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பற்றி எதுவுமில்லை.

    போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன பின்பும் ஐ.நா.வின் பிரதிநிதிகளை தாங்காளோ அல்லது சர்வதேச பத்திரிகையாளர்களோ பாதிக்கப்பட்ட மக்களை நேரிடையாக சந்திக்க முடியாமல் இலங்கை அரசு தடுப்பது பற்றியோ, தமிழர் பகுதிகளில் இராணுவ அடக்குமுறையை ஏவிவிட்டிருப்பது தொடர்பாகவோ, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

    இப்பொழுதும் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகள் தமிழர்கள் மீதான படுகொலைகளையும், தொடரும் அடக்குமுறைகளையும் கண்டுகொள்ளாமல் தங்களது   சொந்நத நலன் கருதியும், பூகோள அரசியலில் இலங்கை தீவின் முக்கியத்துவத்தை முன்னிட்டும், இலங்கையை சர்வதேச விசாரணையிலிருந்து காப்பாற்றத் துடிக்கின்றன.

    எனவே,  ஐ.நா. அறிக்கையின் சாதக, பாதகங்களை புரிந்துகொள்ளவும், புவிசார் அரசியலின் போக்கையும், முன்னெடுத்து செல்ல வேண்டிய வழிகளை பேசவும் சேவ் தமிழ் குழுமத்தின் (Save Tamils Movement) சார்பில் பொதுக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் பால்  நேவ்மன், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்ய உள்ளனர்.

    இலங்கை அரசு போரில் புரிந்த இனப்படுகொலையைப் பற்றிப் பேசும் “முல்லைத் தீவு சாகா” ஆவணப்படமும்  திரையிடப்படுகிறது.

    சேவ் தமிழ்(Save Tamils Movement) அமைப்பை சேர்ந்த தகவல் தொழில் நுட்பத்துறையினரும் மாணவர்களும், பல்வேறு துறைசார் இளைஞர்களும் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.

Pin It