செழியனுக்குச் சென்னை என்றால் தொலைக்காட்சியில் பார்த்த கடற்கரை, உயரமான கட்டடங்கள், இரவில் மின்னும் விளக்குகள் அவ்வளவுதான்.
அவன் படிக்கும் பள்ளி ஒரு சிறிய கிராமத்தின் நடுவில் இருந்தது. ஆறாம் வகுப்பு ‘ஏ’ பிரிவில் முப்பத்தெட்டு மாணவர்கள். பள்ளியின் பின்புறம் வேப்பமரம். அதன் கீழேதான் மதிய உணவுக்குப் பிறகு எல்லோரும் உட்கார்ந்து பேசுவார்கள்.
காலாண்டுத் தேர்வு முடிந்ததும், மற்ற பிள்ளைகள் தங்களுடைய விடுமுறைத் திட்டங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“நான் மாமா வீட்டுக்குப் போறேன்.”
“நாங்க கொடைக்கானல் போறோம்.”
“எங்க அப்பா என்னை சென்னைக்கு கூட்டிட்டுப் போறாராம்!”
செழியன் மட்டும் அமைதியாக இருந்தான்.
அவனுடைய அப்பா ராமு, சென்னையில் ஒரு அமைச்சரின் வீட்டில் சமையல்காரர்.
“இந்தத் தடவை நீயும் என்னோட சென்னை வா. விடுமுறை முடியற வரைக்கும் அங்கேயே இரு” என்று அப்பா சொன்னபோது செழியனின் கண்கள் பெரிதாகின.
சென்னை போவதை எண்ணி மனதுக்குள் கடற்கரையில் ஓடிக்கொண்டிருந்தான்.
சென்னை வந்த முதல் நாள் அவனுக்குப் புதிதாக இருந்தது.
அமைச்சர் வீடு பெரியதாக இருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள். கையில் துப்பாக்கி. கண்களில் எப்போதும் விழிப்பு.
செழியன் அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
“என்னடா பார்க்கிற?” என்று ஒரு காவலர் கேட்டார்.
“நீங்க எப்பவும் இங்கேயே நிப்பீங்களா?”
“ஆமாம்.”
“சாப்பிடப் போக மாட்டீங்களா?”
அவர் சிரித்தார்.
“மாறி மாறிப் போவோம்.”
செழியனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
அவனுடைய ஊரில் காவல்காரர் என்றால் காவல் நிலையத்தில்தான் இருப்பார். இங்கே வீட்டுக்கே காவலர்கள்!
அடுத்த நாள் அவன் வீட்டுக்குள் இருந்த கம்ப்யூட்டர் அறைக்குச் சென்றான்.
அங்கே அருண் என்ற இளைஞன் நாள் முழுவதும் கணினி முன் உட்கார்ந்திருந்தான்.
திரையில் வேகமாக எழுத்துகள் ஓடிக்கொண்டிருந்தன.
“அண்ணா... இதுல என்ன செய்றீங்க?”
“அமைச்சருக்கு வர்ற கடிதங்கள், தகவல்கள், கூட்டங்களின் விவரங்கள்... எல்லாம் தயாரிக்கணும். எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ அப்புறமாய் வா…”
செழியன் அருணை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“நானும் கத்துக்கலாமா?”
அருண் சிரித்தான்.
“கண்டிப்பா. ஆனா முதல்ல கீபோர்டுல தமிழ் எழுத்து எங்கேன்னு தெரிஞ்சுக்கோ!”
அன்று முதல் செழியன் தினமும் கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் அறைக்குச் சென்றான். ஆனால் அவன் மனம் அங்கேயும் முழுமையாக இருக்கவில்லை.
அவன் கையில் இருந்த செல்போனில் விளையாடினான். கார் ஓட்டுவது. துப்பாக்கியால் சுடுவது. கட்டடம் கட்டுவது. மீண்டும் மீண்டும் அதே விளையாட்டுகள். ஒரே போர்!
சில நேரம் காவலர் இருக்கும் பகுதிக்குச் சென்று விளையாடினான். காவலர்கள் அவனைப் பார்த்துக் சிரித்தார்க்ள்.
“என்ன செழியா, இன்னைக்கு எத்தனை பேரை சுட்ட?”
“எல்லாரையும்!”
“அப்போ நாட்டைக் காப்பாத்திட்டியா?”
செழியனும் சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஒரு சிறிய ஏக்கம் இருந்தது.
“சென்னையைப் பார்க்க வேண்டும்” — அதுதான் அவனுடைய ஆசை.
ஒரு மாலை வேளை. அவன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா... நாளைக்கு என்னை வெளியே கூட்டிட்டுப் போவியா?”
ராமு காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தார். “எங்கே?”
“சென்னையைப் பார்க்க.”
அப்பா ஒரு கணம் அமைதியாக இருந்தார்.
“நாளைக்கு அமைச்சர் வீட்டுல முக்கியமான நிகழ்ச்சி. எனக்கு வேலை அதிகம் இருக்குமே…”
செழியனின் முகம் சுருங்கியது.
“அப்போ... அடுத்த நாள்?”
“பார்க்கலாம்.”
அந்தப் ‘பார்க்கலாம்’ என்ற வார்த்தையின் அர்த்தம் செழியனுக்கு நன்றாகவே தெரியும். அது பல நேரங்களில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கும்.
அடுத்த நாள் அமைச்சர் வீட்டில் ஒரே பரபரப்பு.
நிறைய கார்கள் வந்து கொண்டிருந்தன. சிலர் விருந்தாளிகள். சிலர் அதிகாரிகள். காவலர்கள் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தனர்.
கம்ப்யூட்டர் அறையில் அருண் இடைவிடாமல் வேலை செய்து கொண்டிருந்தான்.
செழியன் அந்த நீண்ட நெடிய கருப்புக் கதவின் வாசலில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு பெரிய கருப்புக் கார் வாசலைத் தாண்டி வெளியே சென்றது.
காரின் கண்ணாடி வழியாக வெளியுலகம் ஒரு கணம் அவனுக்குத் தெரிந்தது.
பெரிய சாலை. வேகமாகச் செல்லும் பேருந்து. பைக்குகள். வண்ண விளம்பரப் பலகைகள்.
அந்தக் காட்சி மறைந்ததும் செழியன் மீண்டும் அமைதியானான். அவன் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
“எவ்வளவு பெரிய நகரம்... நான் மட்டும் ஏன் இன்னும் பார்க்காமல் இருக்கிறேன்?”
அன்று இரவு, அந்த சிறிய அறை வழியாக மொட்டைமாடிக்குச் சென்றான்.
சென்னையின் இரவு அவன் ஊரின் இரவைப் போல இல்லை. அங்கே வானத்தில் நட்சத்திரங்கள் தெரியும். இங்கே நட்சத்திரங்களைவிட விளக்குகள்தான் அதிகம்.
செழியன் வானத்தைப் பார்த்தான். அவனுடைய செல்போனை எடுத்தான். விளையாட்டைத் திறந்தான். சில விநாடிகள் பார்த்தான். பிறகு அதை அணைத்துவிட்டான்.
“இதைப் பார்த்துப் பார்த்து என்ன பயன்?” அவன் தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.
அவன் மனதில் கடல் அலைமோதியது. இதுவரை கடலை நேரில் பார்த்ததே இல்லை.
அடுத்த நாள் காலை. அமைச்சர் வீட்டின் முன் காவலராக நின்றிருந்த முருகன், செழியனை அழைத்தார்.
“ஏண்டா, முகம் ஒரு மாதிரி இருக்கு?”
செழியன் எதுவும் சொல்லவில்லை.
“ஊருக்குப் போகணுமா?”
செழியன் தலையசைத்தான்.
“ஊருக்குப் போகணும்னு இல்லே... சென்னையைப் பார்க்கணும்.”
முருகன் சிரித்தார்.
“அதுக்குத்தான் இவ்வளவு சோகம்?”
“நான் சென்னைக்கு வந்திருக்கேன். ஆனால் இதுவரை சென்னையைப் பார்க்கவே இல்லையே!”
முருகன் சில நொடிகள் அவனைப் பார்த்தார்.
“நீ ஒரு வேலை செய். இன்னைக்கு மாலை எனக்கு ஷிப்ட் முடிஞ்சதும் உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்.”
செழியனின் கண்கள் மின்னின.
“எங்கே?”
“சொல்ல மாட்டேன்.”
மாலை ஆறு மணிக்கு முருகன் தனது சீருடையை மாற்றிக்கொண்டு வந்தார்.
“வா.”
செழியன் அப்பாவிடம் அனுமதி வாங்கினான்.
இருவரும் பேருந்தில் ஏறினார்கள். செழியனுக்கு ஜன்னல் இருக்கை கிடைத்தது. அவன் கண்கள் வெளியேயே மேய்ந்தன.
அவன் முதன்முறையாகச் சென்னையைப் பார்க்கிறான். பெரிய கட்டடங்கள். பழைய கட்டடங்கள். சாலையோரக் கடைகள். பழக்கடைகள். புத்தகக் கடைகள். பூ விற்கும் பெண்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் மக்கள். ஒவ்வொரு காட்சியும் அவனுக்குப் புதிது.
“முருகன் அண்ணா... சென்னை இவ்வளவு பெரியதா?”
“இன்னும் நீ சென்னையைப் பார்க்கவே இல்லையே!”
சிறிது நேரத்தில் பேருந்து கடற்கரை அருகே சென்றது.
காற்றில் உப்பு மணம்.
செழியன் எழுந்து நின்று பார்த்தான்.
பேருந்து நின்றதும் தடதடவென ஓடினான்.
அவனுக்கு முன்னால்... கடல்.
அவன் வாழ்நாளில் முதன்முறையாகக் கடலைப் பார்க்கிறான்.
அவன் சில நொடிகள் பேசவே இல்லை.
அலைகள் வந்து கரையைத் தொட்டுத் திரும்பின.
மீண்டும் வந்தன. மீண்டும் சென்றன.
செழியன் மெதுவாகச் சொன்னான்: “அண்ணா... இது இவ்வளவு பெரியதா?”
முருகன் சிரித்தார்.
“இது கடல். செல்போன் ஸ்கிரீன் இல்ல.”
செழியன் சிரித்தான்.
அந்த நாள் அவன் செல்போனைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.
திரும்பி வந்தபோது இரவு ஆகிவிட்டது.
அமைச்சர் வீட்டின் வாசலில் வேறு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அதே வாசல். அதே சுவர். அதே பெரிய வீடு. ஆனால் செழியனுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.
அவன் அந்த வாசலைப் பார்த்தான். “இது சிறை இல்லை. அதற்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகத்தைப் பார்க்க வேண்டும் என்றால், ஒருநாள் வெளியே நடக்க வேண்டும்” என்பதை எண்ணிக் கொண்டான்.
அடுத்த நாள் காலை. செழியன் கம்ப்யூட்டர் அறைக்குச் சென்றான்.
“அருண் அண்ணா...”
“என்ன?”
“எனக்கும் கம்ப்யூட்டர் கத்துக்கணும்.”
“நேத்து கடற்கரை போனதால உனக்கு ஞானம் வந்துடுச்சா?”
செழியன் சிரித்தான்.
“கடலைப் பார்த்தப்புறம்... நிறைய விஷயம் பார்க்கணும்னு தோணுது.”
அருண் அவனை அருகில் உட்கார வைத்தான்.
“சரி. முதல்ல இதைத் திற.”
கம்ப்யூட்டர் திரையில் ஒரு வெள்ளைப் பக்கம் திறந்தது.
“என்ன எழுதணும்?”
செழியன் சிறிது யோசித்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்:
“நான் பார்க்காத உலகம்.”
அருண் அந்த வார்த்தைகளைத் தட்டச்சு செய்தான்.
செழியன் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் மனதில் ஒரு புதிய கனவு பிறந்து கொண்டிருந்தது.
“ஒருநாள் இந்தப் பெரிய நகரத்தை மட்டும் அல்ல... உலகத்தையே நான் பார்ப்பேன்” என முனுமுனுத்துக் கொண்டான்.
அதன் பின்னர், அமைச்சர் வீட்டின் வாசலில் காவலர்களைப் பார்த்தாலும், கம்ப்யூட்டர் அறையில் ஆபரேட்டரைப் பார்த்தாலும், இடையே இடையே செல்போனில் விளையாடினாலும் செழியனின் பார்வை எப்போதும் வாசலுக்கு அப்பால்தான் இருந்தது.
- த.செல்வகுமார், M.A., B.Ed., தமிழாசிரியர்