விஷாலின் செல்ஃபோன் "அன்பிலார் எல்லாம் தமக்குரியர்" என்ற அழைப்புப்பாட்டை கிணுகிணுத்து. அவன் குளித்துக்கொண்டிருந்ததால் அவன் தகப்பனார் மாசிலாமணிதான் ஃபோனை எடுத்தார். "ஹலோ, நான் தான் ஆர் டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எஸ்.ஐ. பெருமாள் பேசறேன். உங்க மொபைல் நம்பர் 98...........தானே" என்றவுடன் மாசிலாமணி குழப்பத்துடன் "ஆம்" என்றார். "ஒன்னுமில்லே, ரெண்டு வாலிபப்பசங்க போதையிலே வந்து ஒரு ஆட்டோக்காரரை அடிச்சு செமையா காயப்படுத்திட்டானுங்க. அவன்தான் இந்த மொபைல் நம்பரை கொடுத்தான். நீங்க ஒரு தடவை ஸ்டேஷனுக்கு வந்தால் நல்லாயிருக்கும். வெறும் விசாரணைதான்" என்றார் எஸ்.ஐ. பெருமாள். நவம்பர் மாதக்குளிரிலும் மாசிலாமணிக்கு அதிகமாக வியர்த்தது. தலையில் வேகமாக ரத்தம் பாய்ச்சப்படுவதின் அதிர்வு பொட்டில் தெரித்தது. ஒருவாறு தைரியத்தை வரவழைத்து " சனிக்கிழமை வந்திடரேன் " என்று மிகவும் சுருக்கமாக பதிலளித்தார். சனிக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டும்தான் இருந்தது

சிறு பிள்ளையிலிருந்தே மாசிலாமணிக்கு போலீஸ் என்றாலே கொஞ்சம் கூடுதல் பயம். நண்பர்களுடன் போலீஸ் திருடன் விளையாட்டைத்தவிர எல்லா விளையாட்டிலும் பங்குபெறுவார். பிற்காலங்களில் அவரின் பகுத்தறிவு, கல்லூரிப்படிப்பும் கூட இது போன்ற தருணங்களில் அவரின் மூளையை சலவை செய்துவிடும். விதவிதமான கற்பனைகள் அவரின் பயத்தை கூடுதலாக்கும். இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் அவரின் பயத்திற்கு கூடுதல் தீனி போட்டிருக்கிறது. நிலாவைக்காட்டி சோறூட்டும் அம்மாவிற்கு பதிலாக யாரோ அவருக்கு போலீசைக்காட்டி பயமுறுத்தி என்றைக்காவது சோறூட்டியிருக்கவேண்டும். நம் நாட்டில் மட்டும் ஏன் போலீஸ் என்றாலே அதிக பட்சம் கொடூரமாக சித்தரிக்கிறார்கள் என்ற அவரின் சந்தேகம் இதுநாள்வரை பதில் அளிக்கப்படவேயில்லை. ஒரு காவல் அதிகாரி பொதுமக்களைப்பார்க்கும் அலகிற்கும் அதே சமயம் குற்றவாளியைப்பார்க்கும் அலகிற்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அதிகபட்ச திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காவலர்களை குற்றவாளிகளைப் பார்க்கும் பார்வையில் அதிகம் சித்தரிப்பதும் கூட மாசிலாமணியின் பயத்திற்குக் கூடுதல் காரணமாக இருக்கலாம்.

விஷாலின் நண்பர்களில் யாரோ ஒருவர்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று மட்டும் அவருக்கு திடமாகத் தெரிந்தது. இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்துவது என்று போராடிக்கொண்டிருக்கும்போதுதான் அவரின் மனைவி தனக்குத் தெரிந்த குடும்ப நண்பரை நினைவூட்டி உடனே ஃபோனும் செய்தார். குடும்ப நண்பரோ தன் முதல் கட்ட விசாரணையை மாசிலாமணியின் மனைவியிடம் முழுவதும் முடித்து விட்டு அடுத்த கட்ட விசாரணைக்கு அவரின் மகனைப் பேசச்சொன்னார். ஒருவாறு அவரின் மகனை ஃபோனிலேயே குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். "தம்பி, இந்த வயசிலே இதெல்லாம் ரொம்ப சகஜம். அப்படி ஏதாவது செஞ்சிருந்தா மறைக்காம சொல்லிடுப்பா. என்ன ஆனாலும் நான் பாத்துக்கறேன்" என்றவுடன் அவரின் மகன் அவன் அம்மாவைப் பார்த்து முறைத்ததில் "இப்படியெல்லாம் உங்களுக்கு குடும்ப நண்பர்கள் இருகிறார்களா"? என்று கேட்பது போலிருந்தது.

அந்த நிகழ்சி நடந்த இடத்தில் வசிக்கும், வண்டியில் போகும் அவர் மகனின் நண்பர்களின் பட்டியலைத் தயாரித்தார். அதில் இரு சக்கர வண்டிகளில் வரும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களை சுருக்கினார். ஐந்தாறு பெயர்கள் அவருக்குக் கிடைத்தது. அவரின் மகனோ "யாரைப்பா நான் சந்தேகிக்கமுடியும்" என்று உதட்டைப் பிதுக்கினான். இந்த ஆராய்ச்சியிலேயே இரண்டு நாள் கழிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் சனிக்கிழமை வந்து விடும். அலுவலகத்திலும் வீட்டிலும் அவருக்கு எந்த காரியமும் ஓடவில்லை. அடிபட்ட ஆட்டோக்காரர் அதிகமான காயத்தால் ஒருவேளை ஊனமாகி விட்டாலோ, அவன் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டலோ என்ன ஆகும் என்ற கவலையில் அவரின் பதட்டம் மேலும் கூடிக்கொண்டே இருந்தது. வேண்டாத எதையோ விழுங்கிவிட்டு உள்ளும் போகாமல், உமிழவும் முடியாமல் மூச்சடைத்தது போலிருந்தது மாசிலாமணிக்கு.

அவர் அதிகம் படுத்துக்கொண்டு உத்திரத்தை வெறித்துப்பார்த்தது அந்த நான்கு நாட்களில்தான். இதற்கிடையில் நண்பர்களின் விதவிதமான ஆலோசனைகள் வேறு. "வெறும் நம்பரை வெச்சு ஒன்னும் பண்ணிடமுடியாது. ஃபோனை கண்டுக்காதீங்க" என்று சிலர் கூறினாலும் . வேறு சிலர் "சார், எதுக்கும் ஒரு நடை ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்திடுங்க. பின்னடி கோர்ட்டு கேசுன்னு அலையவேண்டியிருக்கும்" என்றார்கள். ஆகக்கூடி அவர் துளியும் சிந்திக்கத் தெரியாத கூடைப்பந்தாகிப்போனார் என்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிந்தது. இரண்டு நாளும் அவரின் பதட்டம் கூடிக்கொண்டே வந்தது. மாசிலாமணியின் மனைவியும் ஒரு ரோபோவாக மாறிக்கொண்டிருந்தாள். ஏதாவது கேட்டால் சுருக்கமாகப் பதில் அளிப்பது. மற்ற நேரங்களில் அடுக்களையே கதியென்று இருக்க ஆரம்பித்துவிட்டாள். அவரின் மகனோ பாதி பதட்டத்துடன், பாதி தைரியத்துடன் அலுவலகம் சென்று கொண்டிருந்தான்.

விடிந்தால் சனிக்கிழமை. படுக்கையில் புரண்டுகொண்டேயிருந்தார் மாசிலாமணி. காலை மூன்று மணிக்கே அவருக்கு விழிப்பு வந்து விட்டது. விடிந்தவுடன் அவரின் தோழர் ஒருவருக்கு தன் நிலைமையை விளக்கி ஃபோன் செய்தார். மிகப்பொறுமையாகக் கேட்ட தோழர் " இதிலே பயப்படுவதற்கு ஒன்னுமேயில்லை சார். எங்கேயோ ஒரு தவறு நடந்திருக்கு. அவ்வளவுதான். 10 மணிக்கு நான் நேரா ஸ்டேஷனுக்கு வந்துடரேன். தம்பியைக் கூட்டிகிட்டு நீங்களும் அங்கேயே வந்திடுங்க" என்றார். மாசிலாமணிக்கு கொஞ்சம் தைரியம் வந்தது போலிருந்தது. ஆட்டோ பிடித்து ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியெல்லாம் அவர் உணர்வற்று புவியீர்ப்பு இல்லாமல் மிதந்து கொண்டு போவதாகவே உணர்ந்தார்.

காவல் நிலையத்தில் அறிமுக விசாரிப்புக்குப்பிறகு எஸ்.ஐ. பெருமாள் வந்தார். சுமாரான உயரம். லேசான தொந்தி இருந்தது. அடர்த்தியான அவரின் மீசையில் ஆங்காங்கே வெள்ளை முடிகள் தெரிந்தது. சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கலாம். காவலரின் தோற்றம், அவர் வரவேற்ற விதம் மாசிலாமணியின் கலவரத்தைக்கொஞ்சம் குறைத்தது. தோழர் ஏற்கனவே கூறியிருந்தது போல மாசிலாமணியும் அவர் மகனும் மௌனமாக இருந்தார்கள். ஆட்டோக்காரர் கொடுத்த புகாரை அவர்களிடம் காட்டி படிக்கச் சொன்னார் அந்தக்காவலர். அரைப்பக்கதிற்கு தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. தோழர்தான் அந்தப்புகாரில் விஷாலின் மொபைல் எண் குறிப்பிடப்படாததால் "உங்களுக்கு எப்படி இந்த எண் கிடைத்தது" என்று கேட்டார். தன் சட்டைப்பையிலிருந்து கத்தை கத்தையாக மடித்து வைத்திருந்த பேப்பரை மேஜையில் பரப்பி அதில் ஒரு சிறிய தாளின் ஓரத்தில் எழுதி வைத்த எண்ணைக் காண்பித்தார் காவலர்.

"இதோ நிக்கிறானே இவன்தான் அந்த அடிபட்ட ஆட்டோக்காரப் பையன்" என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவனின் உதடுகள் இரண்டும் மிகவும் வீங்கி இருந்தது. கீழுதட்டின் குறுக்காக ப்ளாஸ்திரி போட்டிருந்தான். இடது கண் பட்டையில் ரத்தம் கன்றிப்போயிருந்தது. வலது உதட்டின் ஓரத்தில் வழிந்த உமிழ்நீர் காய்ந்து போய் வெள்ளையாய் தடம் தெரிந்தது. . அவர்களைப் பார்த்து மெலிதாகச் சிரிக்க முயன்று வலியில் முகம் சுளித்தான். தன் இரண்டு கைகளாலும் கும்பிட்டான். ஆறடிக்குக்கொஞ்சம் குறைவாக இருந்தாலும் கூனிக்குறுகி அடக்கமாக இரண்டு கைகளை மீண்டும் கட்டிக்கொண்டான். அவன் நிலைமையைப் பார்த்தவுடன் அவன் மேலிருந்த கோபம் மாசிலாமணிக்கு சட்டெனக் குறைந்தது. முகம் தெரியாத அவரின் மகன் விஷாலின் நண்பர்கள் மேல் முழுக்கோபமும் திரும்பியது.

"மேல் தாடையில் மூன்று பல்லை உடைச்சிருக்காங்க. போன வாரம்தான் கலியாணம் நிச்சயம் ஆச்சாம். இலவசமா பல்லை கட்ட முடியாம திண்டாடுரான் பாவம்" என்று எஸ்.ஐ. பெருமாள் உச்சுக்கொட்டினார். விஷாலைப் பார்த்து அந்த வாலிபன் எஸ்.ஐயிடம் இவர் இல்லை என்று தலையாட்டினான். பிறகு மாசிலாமணியிடம் நடந்ததை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி அவரின் மகனிடம் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டார். "நீங்க இன்னைக்கு வந்தது நல்லதாபோச்சு. இல்லாட்டி மறுபடியும் அலைய வேண்டியிருந்திருக்கும். தம்பியும் மறுபடியும் லீவு போட்டு வந்திருக்க வேண்டியிருக்கும். உங்களுக்கும் இந்த வயதில் அலைச்சல் வேறே. என்ன சார் செய்ய?" என்று தன் இயலாமையை மாசிலாமணியிடம் பணிவாகத் தெரிவித்து இருக்கையிலிருந்து எழுந்தார். அவர்கள் காத்திருப்பதைப் பார்த்து "அவ்வளவுதான் நீங்க போகலாம்" என்றார் காவலர். மூவரும் ஸ்டேஷனிலிருந்த வெளியேறினார்கள். மாசிலாமணிக்கு எல்லாமே மிகவும் புதிதாகத்தெரிந்தது. இறக்கை கட்டி பறப்பது போலிருந்தது. அந்த வாலிபனும் அவர்களுக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். நடக்கும்போது பாதத்தின் அதிர்வு, அவனின் உதட்டின் வலியை கூடுதலாக்கியிருக்கவேண்டும். வலது கையால் வாயைப் பொத்திக்கொண்டான். மாசிலாமணியும் தோழரும் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

மீண்டும் வணக்கம் போட்டு அவர்களைக் கடந்து போகும்முன் சைகையால் அவனை நிற்கச்சொன்னார் மாசிலாமணி. எதற்காகவாவது அவசியம் தேவைப்படும் என்று அவர் வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை அவன் கைகளில் அழுத்தமாகத் திணித்தார். முதலில் வேகமாக மறுத்தவன் பிறகு வாங்கிக்கொண்டான். தோழரும் தனக்குத்தெரிந்த பல் மருத்துவர் தொடர்பு எண்ணை அவரின் அழைப்பு அட்டையில் எழுதிக்கொடுத்து அவனை அன்று மாலையே சந்திக்கச் சொன்னார். இதையெல்லாம் ஜன்னல் திரையை விலக்கிப்பார்த்துக் கொண்டிருந்த எஸ்.ஐ. பெருமாளின் புன்னகை அவரின் மீசையை மீறியபடிக்கு மினுமினுத்தது.

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It