கீற்றில் தேட...

யாரோ விரித்த வலையில்
நான் விழுந்து
மாட்டிக் கொண்டதாய்
நினைக்கவில்லை.
வலைகளுக்கு உள்ளே தான்
எங்கள் வாழ்க்கை.

நான் நேற்றைய பிணங்களுக்கும்
நாளைய பிணங்களுக்கும்
நடுவே.

இறைச்சிக்கான வில‌ங்குகள்
நாங்கள்.

வெடித்துப் பயணித்த
குண்டுகளுக்கு அடைக்கலம் தந்தது
என் உடம்பு.
அது சுமந்த மருந்துகள்
என் துயரங்களுக்கு
நிரந்தர நிவாரணம் தருகிறது.

உடம்புக்குள் அடைத்து வைத்த
இரத்தங்களுக்கு
உன் துப்பாக்கிக் குண்டுகளால்
விடுதலை.

சுழன்று வந்த சுவாசம்
மூச்சுப் பையை தகர்த்து
அது பிறந்த
காற்று மண்டலத்தில்
கலக்கிறது.
வாங்கிய கடன்
முழுவதுமாய்
கொடுக்கப்படுகிறது.
நான் கடனுடன் மரணிக்க மாட்டேன்.

உன் இராணுவ பூட்சால்
என் முகம் மண்ணுக்குள்
புதையும் வரை மிதிக்கிறாய்...

வியர்வையின் உப்பை மட்டும்
சுவைத்த என் தோல்களில்
சிறுநீர் கழிக்கின்றாய்...

தன்மானம்
என பெயரிடப்பட்டதை
எல்லாம் அழித்துப் பொசுக்குகிறாய்.

என்னை அவமானப்படுத்தியதாய்
மகிழ்ந்து கொள்!.

எழும்புகளால் சதைகளையும்,
இரத்ததிற்கு உள்ளே உடம்பையும்
உருமாற்றம் செய்கிறாய்.

என்னைக் கிழித்து துண்டாட்டும்
உன் ஆயுதங்கள்!.

தாங்க முடியாத வலிகளின்
கடைசி விளிம்பையும்
கடந்து விட்டேன்,
இனி வலிகள் இல்லா
முடிவற்ற பயணம்.

உடம்பின் ஒவ்வொரு
தசைகளும் துடித்து
இறக்கட்டும்!.

என் கடைசி அணுக்கள்
சாகும் வரை வேதனை கொடு!.

எனக்கு கல்லறை தோண்டும்முன்
நீ சாட்சிகளை உருவாக்கு!!
நீ உருவாக்கிய
அடையாளத்திற்குள்
என்னைத் திணித்து விடு!!

சட்டங்கள் காத்திருக்கின்றது
எனக்கு பயங்கரவாதி எனப் பெயரிட..

என்னைக் கொன்று நீ சாந்தி அடைந்து கொள்!.
பதக்கங்களைப் பத்திரப்படுத்திக் கொள்!

கடைசியாய் சில வேண்டுகோள்,
எனக்கு உருவம்
தந்தவளிடம் மட்டும்
இந்த சிதைந்த பிண்டம்
நீ தந்தது
என அறிமுகம் செய்யாதே.

என் உயிர் விட்ட இந்த மண்ணிடம்
நான் ஒரு தேசத்துரோகி
என விளம்பரம் செய்யாதே...

-  மால்கம் X இராசகம்பீரத்தான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)