முல்லைப் பெரியாற்று நீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மறுத்து கேரளம் செய்யும் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பாதைகளை மறிக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் தலைமையில் 28.05.2010 அன்று காலை பொள்ளாச்சி நடுப்புணி சாலையில் மறியல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது, முதற்கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் சில பணிகள் செய்தபின் 152 அடி தேக்கலாம் என்று 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பைக் கிழித்தெறிவதற்குச் சமமாக அதை எதிர்த்து ஒரு சட்டத்தைக் கேரளம் 15.3.2006 அன்று நிறைவேற்றியது.

கேரளச்சட்டத்தை எதிர்த்துத் தமிழகம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இதுவரை தீர்ப்புச் சொல்லாமல், அணை வலுவாக இருக்கிறதா என்று ஆராய புதிய குழுவை அமைத்துள்ளது. அக்குழுவில் இடம் பெற முதலில்மறுத்த தி.மு.க ஆட்சி, பின்னர் தமிழகம் சார்பில் ஒருவரை இணைத்துள்ளது. அக்குழுவில் ஆள் போடுங்கள் என்று இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் இரு கடிதங்கள் எழுதி விட்டது என்கிறார் முதல்வர்கருணாநிதி. உச்சநீதி மன்றத்தீர்ப்பை நிறை வேற்றுமாறு இதுவரை ஒரு கடிதம் கூட இந்திய அரசு கேரள முதல்வருக்கு எழுத வில்லை.

வலுவாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டுப் புதிய அணை கட்டும் பணிகளை நடுவண் அரசின் ஒப்புதலுடன் கேரளம் தொடங்கி விட்டது.

இந்திய அரசின் முழு ஆதரவும் கேரளத்திற்கு இருப்பதால் மலையாளிகளின் இனவெறிச் செயல் மேலும் மேலும் தீவிரமடைகிறது. தமிழர்களைப் பகை இனமாகக் கருதி முல்லைப்பெரியாறு அணை உரிமை மட்டு மன்றி மற்ற நீர்வரத்துகளையும் தடுக்கிறார்கள். அமராவதி ஆற்றிற்கு வரும் பாம்பாற்றில் அணைகட்டுகிறார்கள். பாம் பாற்றில் அணைக்கட்டுவதால் தமிழகத்திற்குப் பாதகமில்லை என்று முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் கூறினார்.; நெய்யாற்றங்கரை இடது கரைக் கால்வாயில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். செண்பகவல்லி அணை நீர்வரத்தை அதிகரிக்க தமிழகம் சிறிய தடுப்பணைக் கட்ட அனுமதி மறுக்கிறார்கள்.

அரிசி, பருப்பு, பால், முட்டை, காய்கறி இறைச்சி, மணல் முதலிய பல்வேறு பொருட்களை அன்றாடத் தேவைகளுக்கு கேரளம் தமிழ் நாட்டை சார்ந்துள்ளது என்ற உண்மையை மலையாளிகளுக்கு உரைக்கும் வகையில் உணர்த்த வேண்டும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் 12 சாலைகளில் பொருள் போக்குவரத்தைத் தடுக்க மறியல் நடத்துகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் அப்போராட்டத்தில் கலந்து கொள்கிறது.

உலகின் முதன் மொழியைப் பேசும் தமிழினமே வையகம் வியக்க வாழ்ந்து வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டு கிடக்கும் தமிழினமே!

கெஞ்சிக்கேட்டால் கிடைக்காது கிளர்ச்சி செய்யாவிட்டால் நடக்காது நெஞ்சை நிமிர்த்தி வாருங்கள் நேருக்கு நேர் நின்று பார்த்திடுவோம்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.