மறுப்பதற்கில்லை. மிக நிச்சயமாக, இது பெண்களுக்கெதிரான சமூகம்! வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, சீண்டல்கள் என எல்லாவற்றையும் சந்தித்தும், கடந்துமே இங்கு பெண்கள் வாழ வேண்டியிருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு அளவுகோல்களால் பெண் அடக்குமுறைக்கு ஆளாகிறாள். மதமும் அதை சார்ந்த நம்பிக்கைகளும் பண்பாட்டுக் கூறுகளாக அழுத்த, ஒரு நிரந்தர சிறைக்குள் பெண் என்ற இனமே அடைக்கப்பட்டிருக்கிறது. அதன் சாவி இன்றும் ஆண்களின் கைகளில்தான் இருக்கிறது. நான்கு சுவர்களைவிட்டு வெறியேறக்கூடாது, இருட்டியபின் வெளியே போகக்கூடாது, பூமி பார்த்து நடக்காதவள் பெண்ணல்ல என்பன போன்ற கருத்தியல்கள் பெண்களை முடமாக்கி விட்டிருக்கின்றன. எழுதப் படிக்கத் தெரிகிற அளவுக்கு கல்வியறிவு பெற்றால் போதும் என்றுதான் இன்றும் ஆணாதிக்க மனோபாவம் நினைக்கிறது.

தலை நிமிர்ந்து நடக்கும் பெண் குடும்பத்திற்கு அடங்காதவள் என்றும், தன் கருத்தை எடுத்துரைக்கிறவர்கள் அடங்காப்பிடாரிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். வரதட்சணை கொடுக்க வேண்டியது மணமகளின் கடமை என்பதும், மனைவியை அடிப்பது கணவனின் உரிமை என்பதும், சுதந்திரம் என்பதை ஆண்கள் கொடுத்து பெண்கள் பெற வேண்டியது என்பதும் இங்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. சரி, இவ்வளவு பாகுபாட்டையும் அனுபவிக்கின்றனர் என்பதற்காக, பெண்கள் எல்லோரும் சமம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியுமா? பெண்களுக்குள் பாகுபாடே கிடையாதா? மத உணர்வு, ஜாதி வெறி, ஆதிக்க மனோபாவம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களா பெண்கள்? சமத்துவமற்றவர்களாக வாழ்கிறோம் என்பதற்காக, எல்லோரையும் பெண் மனம் சமத்துவமாகக் கருதுகிறதா?

பதின்மூன்று ஆண்டுகால போராட்டங்களுக்குப் பின்னர், ஒருவழியாக மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பெண்கள் சட்ட வரைவு பற்றிய விவாதங்கள் எழும்போதெல்லாம் இந்தக் கேள்விகளும் எழாமல் இல்லை. பெண்களுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரத்தை அளிக்கும் இடஒதுக்கீடு சட்டவரைவை, கண்களை மூடிக்கொண்டு ஆதரித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் தொகையில் அய்ம்பது கோடிக்கும் மேலாக இருக்கும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் 10 சதவிகிதம் கூட இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயம்தான். மிக நிச்சயமாகப் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டே ஆக வேண்டும்.

ஆனால், சாதி ரீதியான ஒடுக்குமுறைகளும் பாகுபாடுகளும் நிறைந்த இந்திய சமூகத்தில், எல்லா சமூகத்தைச் சேர்ந்த பெண்களையும் சமமாகக் கருதி, போட்டிக் களத்திற்கு ஒரேயொரு கதவை மட்டும் திறந்துவிட்டால், கண்டிப்பாக உள்ளே நுழையப் போவது - அதிகாரமும் ஆதிக்கமும் கைவரப் பெற்றவர்கள் மட்டுமே. இடஒதுக்கீடு சட்டவரைவு - பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் என அனைத்துப் பிரிவினரையும் சேர்ந்த பெண்களுக்கும் ஒரேயொரு கதவை மட்டுமே திறந்திருக்கிறது. மிக நிச்சயமாக, இந்தக் கதவின் வழி 33 சதவிகித இடஒதுக்கீட்டை 90 சதவிகிதத்திற்கும் மேல் ஆக்கிரமிக்கப் போகின்றவர்கள் பார்ப்பன மற்றும் முன்னேறிய சாதிப் பெண்களே!

நாடாளுமன்றத்தை தொண்ணுறு சதவிகிதம் ஆக்கிரமித்திருக்கும் ஆண் உறுப்பினர்களில், அதிகளவு இடங்களைப் பிடித்திருப்பவர்கள் சாதி இந்துக்கள்தான். மக்கள் தொகையில் நான்கு சதவிகிதமே இருக்கும் பார்ப்பனர்கள், நாடாளுமன்றத்தில் தங்கள் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமான இருக்கைகளைப் பிடித்திருக்கிறார்கள்! 32 சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, ஏறக்குறைய அய்ந்து சதவிகிதம் மட்டுமே. தலித்துகளும், பழங்குடியினரும், சிறுபான்மையினரும் ஏதோவொரு மூலையில் விழுந்து கிடக்கிறார்கள். இந்நிலையில் உள் ஒதுக்கீடின்றி முன்மொழியப்பட்டிருக்கும் பெண்கள் சட்டவரைவு, சாதிய அடுக்கில் மேலே இருக்கும் சாதி இந்து பெண்களுக்கு மட்டுமே முழுமையாகப் பயனளிக்கப் போகிறது.

ஆனால் பெண்ணுரிமையை வலியுறுத்தும் பெண்ணியவாதிகளும், பெண்கள் சட்டவரைவிற்காகப் பரிந்து பேசும் ஆதிக்கசாதி அரசியல்வாதிகளும், கட்சிகளும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி, உள் ஒதுக்கீட்டைப் புறக்கணிக்கிறார்கள். பெண்கள் சட்டவரைவை ஆதரிப்பவர்கள் சொல்லும்தட்டையான காரணம், ‘முதலில் சட்டவரைவு நிறைவேறட்டும், உள்ஒதுக்கீடு என்பதெல்லாம் தானாக வந்து சேரும்' என்பதுதான். இப்போது விட்டால் எங்கிருந்து, எப்போது வந்து சேரும் என்று தெரியவில்லை. தங்களுக்கான அரசியல் உரிமைக்காக தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பெண்கள் - இன்னொரு நூற்றாண்டுக்காலம் இதற்காகப் போராட்டம் நடத்த வேண்டுமா? இந்தியாவில் சாதியின் வேர் எத்தனை ஆழமானது, சாதியப் பாகுபாடுகள் எவ்வளவு வீரியமானவை என்று புரிந்து கொண்டவர்கள் - ஒருபோதும் உள் ஒதுக்கீடு இல்லாத பெண்கள் சட்டவரைவை ஏற்க மாட்டார்கள்.

ஆனால் பெண்கள் அமைப்புகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் என எல்லா பிரிவை சேர்ந்த பெண்களும் இந்த சட்டவரைவுக்கு தங்களுடைய ஒருமித்த ஆதரவை அளித்திருக்கிறார்கள். இந்த சட்டவரைவு முன்மொழியப்பட்டது, ஒரு வரலாற்றுச் சாதனை என்று மகிழ்கிறார்கள். உள்ஒதுக்கீட்டைப் புறக்கணிப்பதன் மூலம் இவர்கள் அனைவரும் - சாதி ஆதிக்கத்திற்கும், மதப் பாகுபாட்டிற்கும் முழு ஆதரவை அளித்திருக்கிறார்கள். ஆணாதிக்கமா, சாதியப் பாகுபாடா எது வீரியமானது என்ற கேள்விக்கு, ஆதிக்க சாதி பெண்களின் பதில் ஆணாதிக்கம் என்றே இருக்கும். உள் ஒதுக்கீடற்ற பெண்கள் சட்டவரைவை ஆதரித்திருக்கும் அத்தனை சாதி இந்து பெண்களின் தலையாயப் பிரச்சினை ஆணாதிக்கம் மட்டுமே.

சாதியால் இழிவுகளை எதிர்கொண்டு, சாதியால் தீண்டத்தகாதவர்களாகி, சாதியால் உரிமைகளை இழந்து, சாதியாலேயே வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் வேதனை - இவர்களுக்கு தூசாகவோ, துரும்பாகவோ தெரிந்ததில் வியப்பொன்றுமில்லை. ஆதிக்க சாதி பெண்களைப் பொருத்தவரை சாதிப் பாகுபாட்டை விட, மத ஆதிக்கத்தைவிட, ஆணாதிக்கமே அழிக்கப்பட வேண்டியது. பெண்ணுரிமையை வலியுறுத்தும் பெண்கள் அமைப்புகள், இதுவரையிலும் சாதியொழிப்பை மய்யப்படுத்தாததன் காரணம் அதுதான். ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என்ற குடையின் கீழ் எல்லா பெண்களையும் ஒன்று திரட்டி விட முடியும் என்று நம்பி, அவை காலங்காலமாக தோல்வியையே சந்தித்து வருகின்றன.

பெண்கள் சமத்துவ தேவதைகள், வெகுளியான மனோபாவம் கொண்டவர்கள், சூழ்ச்சிக்கும், கொடூரங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள், வன்மத்தை வெறுக்கும் மெல்லிதயம் கொண்டவர்கள், பாகுபாடற்றவர்கள், ஊழல் செய்யத் தெரியாதவர்கள் என்ற கருத்து தற்பொழுது பரப்பப்படுகிறது. ‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி' என்ற கருத்தியல் எப்படி ஒரு கட்டுக்கதையாகிறதோ, அதைப் போலவே ‘பெண்கள் அனைவரும் ஒன்றே' என்ற முழக்கமும் ஒரு கட்டுக்கதையே! பாகுபாடுகள் நிறைந்த இந்திய நாட்டில், சாதி அழியாமல் ஒரு நாளும் பெண்கள் சமமானவர்களாக முடியாது.

ஒரு பார்ப்பனப் பெண்ணையும் தலித் பெண்ணையும் எந்த அளவுகோலில் சமமானவர்களாகக் கருத முடியும்? சாதி இந்து பெண்கள் தலித்துகள் மீது செலுத்தும் ஆதிக்கம், விட்டுக் கொடுக்க முடியாத அவர்களின் உரிமைகளில் ஒன்றாகவே இன்றும் பாதுகாக்கப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக வீட்டுச் சிறைக்குள் அடிமைத்தனத்தை அனுபவித்து வரும் பெண்கள், ஜாதிக் கொடுமைகளில் ஈடுபடுவார்களா என்ற கேள்வியும் சந்தேகமும் துளியும் நேர்மையற்றவை. பெண்ணியவாதிகளின் ‘ஒன்றே குல' முழக்கம், 33 சதவிகித இடஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எழும்போதெல்லாம் மிக அழுத்தமாக வெளிப்படுகிறது.

உண்மையில் ஜாதியற்றவர்களா பெண்கள்? அண்மையில் இந்தியாவையே உலுக்கிய இரண்டு முக்கிய வன்கொடுமைகளுக்கு மூலமாக இருந்தவர்கள் பெண்களே! மனித நேயம் மற்றும் உரிமைகள் மீதான நம்பிக்கைகளை சிதைத்த அந்தக் கொடுமைகளுக்கு மூல காரணமும், துணை போனவர்களும், ரசிகர்களும் பெண்களே! நான்காண்டுகள் கடந்து விட்டன என்றாலும், கயர்லாஞ்சியில் நடந்தேறிய ஜாதிய வெறியாட்டத்தை இப்போது நினைத்தாலும் உள்ளம் பதறுகிறது. பையாலால் போட்மாங்கேவின் மனைவியும் குழந்தைகளும் எப்படி கொலை செய்யப்பட்டனர் என்பதை விவரித்து எழுதும் இந்நொடி, கைகள் நடுங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் தலித்துகளாகப் பிறந்ததும், சொந்தமாக நிலம் வைத்து சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து வாழ விரும்பியதும், கல்வியறிவு பெற முயன்றதும்தான் அவர்கள் செய்த குற்றங்கள். இந்தக் குற்றத்திற்காக அவர்கள் பெற்ற தண்டனை, கடும் துன்புறுத்தல்களுடன் கூடிய மரண தண்டனை!

போட்மாங்கேவின் நல்வாழ்வு, ஆதிக்க சாதியினரின் உறக்கத்தை நாற்தோறும் கெடுத்துக் கொண்டிருந்தது. கல்வி ஒன்றே விடுதலைக்கான திறவுகோல் என்று நம்பிய போட்மாங்கே தன் பிள்ளைகளை குறிப்பாக, தன் மகளைப் படிக்க வைத்தார். இது, ஆதிக்க சாதியினரின் கண்களை உறுத்தியது. போட்மாங்கே வீட்டுப் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்ற புரளி பரப்பப்பட்டது. சாதிய வன்மம் வெறியாக மாறுவதற்கு, இந்தப் புரளிதான் ஒரு புள்ளியாக அமைந்தது. அதைச் செய்தவர்கள் அவ்வூரின் ஆதிக்க சாதி இந்து பெண்கள். பல நாட்கள் புகைந்து கொண்டிருந்த நெருப்பு, கயர்லாஞ்சியில் திடீரென பற்றிக் கொண்டது.

ஒரு தலித் குடும்பம் இத்தனை சுதந்திரமாக வாழ்வதை ஒரு நொடியும் தாங்கிக் கொள்ள முடியாமல், 2006 செப்டம்பர் 29 அன்று போட்மாங்கேவின் குடிசைக்குள் புகுந்தனர் ஆதிக்க சாதியினர். அவர்களின் கைகளில் கூரிய ஆயுதங்கள். உள்ளே புகுந்த வேகத்தில் போட்மாங்கேவின் மனைவி சுரேகா (40), மகன்கள் ரோஷன் (21) மற்றும் சுதிர் (19) மகள் பிரியங்கா (17) ஆகியோரை நிர்வாணப்படுத்தி ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர். பின்னர் நால்வரும் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அப்போது வழியெங்கும் பலரும் அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர். ஊர் பொது இடத்திற்கு இழுத்து வரப்பட்டதும் சுரேகாவும், பிரியங்காவும் ஊரில் உள்ள பல ஆண்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். அப்படியும் வெறி அடங்காத ஆதிக்க சாதியினர், தாயையும் தங்கையையும் புணரும்படி ரோஷனுக்கும் சுதிருக்கும் கட்டளை விதித்தனர். அவர்கள் மறுத்துவிடவே, இருவரது ஆண் உறுப்புகளையும் வெட்டி, உதிரம் கொட்டும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி வீசி விளையாடினர். உயிர் பிரியும் வரை அப்படியே செய்தனர்.

தரையில் விழுந்து துடித்துக் கிடந்த பெண்களின் பிறப்புறுப்புகளில் கூரிய மரக்கழிகளைச் செருகினர். நன்கு சீவப்பட்ட மூங்கில் கம்புகள் பிறப்புறுப்பில் அடித்து இறக்கப்பட்டன. அதற்கு மேல் தாங்க முடியாமல் துடிதுடித்துச் செத்தனர் நால்வரும். எல்லோரின் உடல்களையும் ஊருக்கு வெளியே வீசிவிட்டு, சாதிச் செருக்கோடு வீடுகளுக்கு திரும்பினர் சாதி இந்துக்கள். இத்தனை கொடுமைகளும் ஆதிக்க சாதி இந்து பெண்களின் முன்னிலையில்தான் நடந்தேறின. நினைத்துப் பார்க்கவே சகியாத இந்த சாதி வெறியாட்டத்தின் பங்கேற்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் இருந்தவர்கள் ஆதிக்க சாதி இந்து பெண்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகே உள்ளது திண்ணியம். இதன் முன்னாள் பஞ்சாயத்து தலைவி ராஜலட்சுமி, தலித் தொழிலாளர்கள் மூன்று பேரை தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்தார். இம்மூவரும் வேறொரு இடத்தில் வேலைக்குச் சென்றனர். இதனை தனக்கான அவமானமாக நினைத்த ராஜலட்சுமி, தன் கணவர் சுப்பிரமணியத்திடம் முறையிட, மூவரும் இழுத்து வரப்பட்டனர். சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டியபின் ரத்தம் வரும் வரை மூவரையும் அடித்துத் துவைத்தனர். அதன் பின்னர்தான் மனித நாகரிகத்தைத் துடைத்தெறிந்த அந்த வன்கொடுமை நடந்தேறியது. ஒரு முறத்தில் மனித மலம் எடுத்து வரப்பட்டது. அடி வாங்கிய மூவரும் அதனை ஒருவருக்கொருவர் ஊட்டிவிடப் பணிக்கப்பட்டனர். இதை மறுத்து, தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினர் அந்தத் தொழிலாளர்கள். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போடப்பட்டது. அதற்கு மேல் வலியைத் தாங்க முடியாத மூவரும் உயிருக்கு அஞ்சி, ஒருவருக்கொருவர் மலத்தை வாயில் வைத்துக் கொண்டனர். தன் கட்டளைக்குப் பணியாத தலித்துகளின் வாயில் மலத்தை திணித்த பின்னரே, தனக்கு நிகழ்ந்த அவமானம் துடைக்கப்பட்டதாக பெருமிதம் கொண்டார், ஆதிக்க சாதி இந்து பெண்ணான ராஜலட்சுமி.

மனித உரிமைகளை மொத்தமாக சிதைத்த இந்த சாதிய அத்துமீறல்களில், பெண்களின் பங்கு சரிசமமானது. இவை எடுத்துக்காட்டுகள்தான். இதுபோல ஆதிக்க சாதி பெண்களிடம் தலித்துகள் படும் கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிப் போயிருக்கின்றன. பண்பாட்டைக் கட்டிக் காக்கும் பொறுப்பு எப்படி பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே சாதி அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பையும் இங்கு பெண்களே சுமக்கிறார்கள். எத்தனைதான் சமத்துவத்தைப் பேசினாலும், பெண்ணியம் பெண்ணுரிமை என்று முழங்கினாலும் - ஓர் ஆதிக்க சாதிப் பெண்ணால் ஆணாதிக்கத்திற்கு எதிராக மட்டுமே போராட முடியுமே தவிர, சாதிக்கு எதிராக அல்ல. ஏனென்றால், பெண் என்பதால் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பது ‘உயர்சாதி' என்பதால் அளிக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சுதந்திரம்தான். அதனால் ஒவ்வொரு ஆதிக்கசாதிப் பெண்ணும் வாய்க்கும் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தன் சாதி ஆதிக்கத்தை ஒருவித மூர்க்கத்தோடு செயல்படுத்தவும் நிறுவவும் துடிக்கிறார்கள். அதற்கான மிகக் கேவலமான எடுத்துக்காட்டுகள்தான் - திண்ணியமும் கயர்லாஞ்சியும்!

பெண்கள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள் என்பது போன்ற தோற்றம் இங்கு உருவாக்கப்படுகிறது. லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும், சரத் யாதவும் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி, பெண்கள் சட்டவரைவிற்கு எதிராகக் குரல் கொடுப்பதால் ஆணாதிக்கவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எப்படியோ தெரியாது. ஆனால் சமூகப் பிரதிநிதித்துவத்திற்காகப் போராடும் அவர்களின் குரல் வெறுமனே ஆணாதிக்கவாதிகளின் அலறலாக திரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. பெண்கள் சட்டவரைவை எதிர்ப்பதாலேயே லாலுவும், முலாயமும், சரத் யாதவும் ஆணாதிக்கவாதிகள் என்றால், அதை ஆதரிப்பதாலேயே காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பார்ப்பனக் கட்சி ஆண்கள் ஆதிக்கமற்ற நல்லோராகி விடுவார்களா? இத்தனை ஆண்டுகளும் இந்த சட்டவரைவை அறிமுகப்படுத்த விடாமல் கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்த இவர்கள், இப்போது மட்டும் முழுமூச்சாக ஆதரிப்பதன் காரணம் என்ன?

உள் ஒதுக்கீடு இல்லாத பெண்கள் சட்டவரைவால் முழுமையாகப் பயன்பெறப் போவது, அவர்கள் இனப் பெண்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டு விட்டனர். பிற சாதியினருக்கு உரிமையை விட்டுக் கொடுப்பதை விடவும், தன் சாதிப் பெண்களோடு உரிமையைப் பகிர்ந்து கொள்வதில் அவர்களுக்கு எந்தத் தடையும் இருக்காது. ஆதிக்க சாதி கட்சி ஆண்கள், தங்கள் இனப் பெண்களுக்காக ஆணாதிக்க கிரீடத்தை இறக்கி வைத்து சட்ட வரைவை ஆதரிக்கும்போது, பிற்படுத்தப்பட்ட லாலுவும் முலாயமும் அதே ஆணாதிக்கத்தைப் புறந்தள்ளி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை கோருவது எப்படித் தவறாகும்?

தற்பொழுது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பெண்கள் இடஒதுக்கீடு சட்டவரைவு, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படுமானால், அதன் பின்னர் உள் ஒதுக்கீடு கோரி தங்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக பார்ப்பனரல்லாத பெண்கள் தனியாகப் போராட்டம் நடத்த வேண்டுமா? அப்படியெனில், பெண்களுக்குள் எங்கே இருக்கிறது சமத்துவம்? இந்த சட்டவரைவை நிறைவேற்றச் சொல்லி, இத்தனை ஆண்டுகளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களைத் திரட்டிஆர்ப்பாட்டம் செய்த பார்ப்பன மற்றும் முன்னேறிய சாதி பெண்கள், இட ஒதுக்கீட்டைப் பெற்ற பின்னர் - உள் ஒதுக்கீட்டுக்காகப் பாடுபடுவார்களா என்ன?

இன்று போல அரசமைப்புச் சட்டத்தை எழுதும்போது அம்பேத்கர் நினைத்திருந்தால், இந்தளவுக்கு கூட பிற்படுத்தப்பட்டோரும், தலித், பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்களும் முன்னேறியிருப்பார்களா என்பது சந்தேகமே. அம்பேத்கரை தவிர அரசமைப்புச் சட்டத்தை யார் எழுதியிருந்தாலும், அதில் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டிருக்காது. அப்புறம் பார்த்துக் கொள்ளாமல் அதெல்லாம் தானாக வந்து சேரும் என்று காலம் கடந்திருக்குமே தவிர, ஒடுக்கப்பட்டோருக்கு சிறு துரும்பு கூட கிடைத்திருக்காது. கொடுமையான சாதிய சூழலில் வாழ்க்கை நடத்துவதே போராட்டமாக இருக்கையில், தலித் மக்கள் எங்கிருந்து போராட்டம் நடத்தி உரிமைகளை மீட்டெடுக்க? அது சாத்தியமற்ற செயல் என்பதாலேயே அம்பேத்கர் தன் கடமையை ஏற்று - பிரதிநிதித்துவமும், ஜனநாயகமும் சமத்துவமும் கொண்ட அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். சமூகப் புரிதலும் ஈடற்ற அர்ப்பணிப்பும், எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பும் இருந்ததாலேயே உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல், அவர் இந்த சமூகக் கடமையை நிறைவேற்றினார்.

ஜனநாயகமும், சமத்துவமும் நிறைந்த அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்யும் போது, புதிய சட்டங்களை வரையறுக்கும் போது - அதன் அடிப்படைத் தத்துவத்தின் நோக்கம் சிதையாமல் இருக்க வேண்டும். உள் ஒதுக்கீட்டைப் புறக்கணித்ததன் மூலம் அரசமைப்புச் சட்டம் இந்த சமூகத்துக்கு வழங்கிய நீதியை மொத்தமாக துடைத்தெறிந்து விட்டது பெண்கள் சட்டவரைவு. இந்த நிலையில் இதை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் சாதி, மதப் பாகுபாட்டிற்கு ஆதரவளிப்பவர்களாகின்றனர். ஆணாதிக்கத்தையும் பாலியல் தடையையும் கடக்கவே இவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கிறது எனில், சாதித் தடையை கடக்க பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு எத்தனை நூற்றாண்டுகளாகுமோ?

ஏனெனில், 33 சதவிகித உரிமையின் மூலம் நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவையிலும் அமரப் போவது நிச்சயம் அதற்காகப் போராடியவர்கள் அல்லர். சாதி வன்மத்தில் ஊறியவர்களும் அதில் திளைத்தவர்களுக்குமே அந்தத் தகுதி சாத்தியப்படும். உள்ளாட்சித் துறைகளில் ஆதிக்க சாதியினரிடம் தலித் பெண்கள் படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தப் பின்னணியில் பெண்கள் சட்டவரைவைப் பார்த்தோமானால், எந்தக் கட்சியும் ஒடுக்கப்பட்டோருக்கான பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் வழங்கப் போவதில்லை.

உலகின் எல்லா கொடுமைகளையும் துயரங்களையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது சாதி. சாதியை மீறியதொரு கொடூரப் பாகுபாடு இவ்வுலகில் இல்லை. சாதிக்குள்ளே நிற வேற்றுமை இருக்கிறது; வர்க்க ஏற்றத் தாழ்வுகள் புதைந்திருக்கின்றன; பாலியல் கொடுமைகளும் சுரண்டல்களும் சாதியின் முக்கிய அங்கம்; தீண்டாமையும் வன்கொடுமையும் மூடக் கருத்தியல்களும் சாதியின் கூறுகள். ஆணாதிக்கத்தை விடவும் பன்மடங்கு வலிமைமிக்க பாகுபாடு ஒன்று இந்த சமூகத்தில் நீடித்து நிலைத்திருக்கிறது என்றால், அது சாதி மட்டும்தான்.

சாதிக்கும் அதை உருவாக்கிய இந்து மதத்திற்கும் எதிராகப் போராடாதவர்களால் - ஒருபோதும் சமத்துவத்தை நிலைநிறுத்தச் செய்ய முடியாது. ‘சாதியை எதிர்ப்பவர்கள் அது வழங்கும் இடஒதுக்கீட்டை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் சட்டவரைவிலாவது அது இல்லாமல் இருக்கட்டும்' என்று சிலர் முட்டாள்தனமாக வாதிடுகின்றனர். சாதியால் காயம்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு சாதி வேரோடு அழிக்கப்படுகிற வரை, சாதி ரீதியான இடஒதுக்கீடும் உரிமைகளும் வழங்கப்பட்டாக வேண்டும்.

தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினப் பெண்களைப் பொருத்தவரை, 33 சதவிகிதம் என்பது ஒரு மோசடியே. ஏனெனில், இதில் அவர்களுக்கான பங்கு ஒன்றுமில்லை. இச்சமூகத்தில் மற்றுமொரு முறை சாதியின் இருப்பு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் எல்லோரும் ஒன்றே என்ற ஆதிக்கசாதி பெண்களின் முழக்கத்தை நம்பவோ, ஏற்கவோ வேண்டுமெனில், பெண்கள் சாதியற்றவர்களாக வேண்டும். அப்படியெனில், அவர்கள் சாதியொழிப்பை மய்யப்படுத்தி, சமத்துவத்திற்காகப் பாடுபட வேண்டும். அதுவரையிலும் இந்த ‘ஒன்றே குல' முழக்கத்தை ஏற்பதற்கில்லை.

மதத்தையும் அது உருவாக்கிய சாதி, இன இழிவுகளையும் எதிர்க்கிறவர்கள் பகுத்தறிவை எட்டுகின்றனர். பகுத்தறிவை அடைந்தவர்களால் ஆணாதிக்கத்தை மட்டுமல்ல; வேறு எந்தவிதமான ஆதிக்கத்தையும் கடந்து விடமுடியும். ஆனால், இங்கு நிலைமை தலைகீழ். வெறுமனே ஆணாதிக்கத்தை மட்டும் எதிர்ப்பதன் மூலமே - தங்களைப் பகுத்தறிவாளர்களாக முன்னிறுத்தி, இழிவுகளின் வேரான சாதியையும், மதத்தையும் இரண்டாம் பட்சமாக ஆக்கிவிட்டனர் பெண்ணியவாதிகள். இதனாலேயே ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அளவிற்கு மூர்க்கத்தோடு இவர்கள் சாதி, மத இழிவுகளை எதிர்ப்பதில்லை. அதன் விளைவுதான், நியாயமற்ற இந்த பெண்கள் சட்ட வரைவுக்கு அவர்கள் வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு. ஒடுக்கப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதி பெண்களுக்கு எதிராகப் போராடும் வலிமையை, இனியேனும் திரட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையே இது. 

இந்திய நாடாளுமன்றத்தில் சாதி வாரியாக உறுப்பினர் விவரம் : 1947 முதல் 1999 வரை

பார்ப்பனர்

28.6

21

19.3

21.02

28.3

16.7

18.2

19.9

12.4

16.3

15.5

12.4

11.3

ஓ.பி.சி.

4.39

6.22

9.43

9.67

10.1

13.3

13.74

11.1

20.9

22.6

24.8

23.6

22.2

காயஸ்தா

8.7

7.7

4.2

2.8

2.3

3.1

0.9

1.3

2.2

1.8

1.3

1.8

0.9

பனியா

10

9.1

7.5

8.3

5.5

8.4

4.9

5.3

3.1

1.8

1.8

3.6

2.7

ராஜ்புத்

10.7

13.9

15.1

13.8

13.7

13.3

11.6

15.5

15.1

14

14

13.3

10

முஸ்லிம்

5.3

4.8

3.8

4.6

4.6

5.7

11.6

9.7

5.8

4.5

3.5

5.3

5

பழங்குடி

5.8

6.2

6.6

7.8

7.3

7.1

7.6

7.5

7.6

8.1

7.5

7.6

7.3

தலித்

15.6

18.7

18.8

18

18.3

17.7

18.8

17.3

17.8

18.1

18.1

18.2

17.8

Pin It