கடல் தெரியும் வீடு

குறுக்காக விழுந்துகிடக்கும் மரத்தில்
சிதைந்த கூட்டில் இரண்டொரு குஞ்சுகள்
இரை பொறுக்கப்போன தாய்
மாலை திரும்பிவந்து மரத்தைத் தேடும்
ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு
கணினியைத் திறக்கிறேன்
இன்று வந்திருக்கும் மின்னஞ்சல்களை வாசிக்கிறேன்
கவித்துவமான ஒரு வரி
மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது
தெய்வம் போலத் திடீரென மழை கொட்டுகிறது
ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு
பேருந்தின் ஜன்னல் வழியே
மலை கடந்துகொண்டிருக்கிறது
பாறை விளிம்பில் நின்று தாவி
கொழுந்தைத் தின்ற அந்த ஆடு
யார்யாருக்கோ உணவாகியிருக்கும்
ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு
யாரோ யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார்
வாகனங்கள் விரைந்து நிறுத்தப்பட்டு
மோதிக் கொள்ளும் சப்தமானது
தேனீர்க் கடையின் திரைப்படப் பாடலிலிருந்து
கவனத்தை மாற்றுகிறது
ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீடு
திருப்தியான சம்போகம் கொண்ட
உடல்களிலிருந்து பரவும் வாசனை
பக்கத்து வீட்டில் கொதிக்கும்
மீன் குழம்பின் மணம்
யார் வீட்டுத் தொலைபேசியோ
ஒலித்துக்கொண்டிருக்கிறது
ஜன்னலைத் திறந்தால்
கடல் தெரியும் வீட்டில்
கண்ணாடித் தொட்டிக்குள்
நீயும் நானும் மீன்கள்
- மாலதி மைத்ரி