சிறுதும் பெரிதுமான
பந்துகள் நிரம்பிச் சரிகின்றன
ஓரிடத்தில் நில்லாமல்
எத்தனை முறை அவற்றிற்கான
இடத்தை அவை இருப்பதில்லை
எங்கிருந்தாவது திடுமென ஓடிவந்து
மோதிக்கொள்வதும்
பூனையென
காலைச்சுற்றுவதும்
இரவில் உதைபடுவதும்
படுக்கையில் நசுங்குவதுமாக
தங்களை எப்பொழுதும் வதைத்துக்கொள்கின்றன
சில நேரங்களில் பயந்த
குழந்தையாய் மிரளமிரள விழிக்கின்றன
எங்கே ஒளித்து வைத்தாலும்
வேறு பொருட்களை எடுக்கும்போது
இதோ இருக்கிறேன் என்று
ஓடி வருகின்றன
எங்கே பத்திரப்படுத்துவது
இவற்றை
என் மகள் வரைந்த
ஓவியத்தின் ஓர் அறைக்குள் வைத்து
பத்திரமாகப் பூட்டினேன்
- மாலதி மைத்ரி