Womanவிடியலில் விலகாத
இருட்டின் நாட்கள்
மேகப்போர்வையில் முகம்மறைத்து
இழுத்துப் போர்த்திக்கொள்ளும்
அதிகாலைச் சூரியனைத்
தட்டி எழுப்பும்
தனிமையின் குரல்.

காதலிப்பதைத் தவிர
வேறுவேலையில்லாத
ஜோடிப்புறாக்கள்
எத்தனைமுறை விரட்டினாலும்
மீண்டும் மீண்டும்
சன்னலே கதியென்று
காத்துக்கிடந்து சல்லாபம்.
பறத்தலை விலக்கிவைக்கும்
சன்னல் கம்பிகளுக்கு நடுவில்
ரசிக்கமுடிவதில்லை
இப்போதெல்லாம்
புறாக்களின் முத்தங்களை.


************

அமைதியான இரவுகள்
தூங்கிவழியும் மாலைநேரங்கள்
நீண்டு கிடக்கிறது
பகலும் இரவும்.
காத்திருக்கிறது
கவிதைகளுக்கான
கருவறை.
நேசித்தப் புத்தகங்கள்
காற்றில் படபடக்க
வாசிக்கப்படாமலேயே
தூசிப்பட்டு
தூசிப்பட்டு
தும்மல் எடுக்கிறது.
இப்போதெல்லாம்
புத்தகவாசனையும்
புகையிலைவாசனையாகி
நினைவுக்குடலை
அரித்து புண்ணாக்கி
நாட்களை நகர்த்துகிறது.


************

புரட்டப்படாத
காலைச் செய்திதாள்கள்
மாற்றப்படாத
தொலைக்காட்சி சேனல்கள்
சண்டைப்போடவும்
சமரசமாகவும்
யாருமில்லாத
இந்த நாட்களில்
அர்த்தமிழந்துப்போகிறது
வாழ்க்கை ஒப்பந்தங்கள்.


புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.