
எண்ணா திருப்பமோ? ஏங்கோ திருப்பமோ?
எமை உருவாக்கிய தலைவன்
கண்ணாய் இருந்தவன் உயிராய் இருந்தவன்
காலமா னான்என்று சொன்னார்...
புண்ணாகி நெஞ்சம்புலம்பா திருப்பமோ?
புரளா திருப்பமோ நெருப்பில்?
அண்ணாவை அவன் தண்ணார் தமிழ்செயும்
பொன்நாவை யாம்இழந் தோமே!
நந்தமிழ் மண்ணை அழித்தவன் வடவன்
நடுங்க எழுந்தஎந் தலைவன்!
இந்தியை ஓடஓட விரட்டி
எழிலார் தமிழ்காத்த வீரன்!
பந்தென உதைபட் டிருந்த எந்தமிழனை
பாய்புலி ஆக்கிய வேங்கை!
செந்தமிழ் நாட்டைச் செந்தமிழ்நாடாய்ச்
செய்த செந் தமிழனை இழந்தோம்!
பழுத்தவெண் தாடிவேந்தர் எம் பெரியார்
பாசறை வீரனாய்ப் பழுத்தான்!
கழுத்தினை நெரித்த ஆரியர் கண்முன்
கழகம் எனும் தீ வளர்த்தான்!
முழுத்திறன் கொண்டு தமிழ்நிலம் காத்தான்!
மொழிகாத்தான்! இனம் காத்தான்!
விழுத்த முடியாத வீரனாய் நிலைத்தான்!
வீழ்ந்தான் எனும்செய்தி பொய்யே!
கடமை கண்ணியம் கட்டுப் பாடெனும்
கட்டளை தந்தவன் அண்ணன்!
‘உடல்விழ நேரினும் உரிமை விழவிடோம்
உறுதி!’ என் றார்த்தவன் அண்ணன்!
மடமை இருள்தனை மாய்க்கும் சுடரொளி
மண்மிசை வைத்தவன் அண்ணன்!
அட! இன் றாருயிர் அண்ணனை இழந்தோம்
அறிஞனை இழந்தோம்... இழந்தோம்!
எழில்மிகு தாஜ்மகால் மண்ணிடை வீழ்ந்தால்
இன்னொரு தாஜ்மகால் செய்வோம்!
பழம்பெரும் சீனப்பெருமதில் சாய்ந்தால்
பத்துநாளில் அது படைப்போம்!
ஒளிர்பனி இமயம் வீழினும் மற்றோர்
உயர்நெடு மலை உடன் எடுப்போம்!
அழஅழ எங்கள் அண்ணா மறைந்தான்
அவனையாம் எவ்வணம் கொணர்வோம்?