தொலைத்துவிட்டேன்

காலங்களின் பயணங்களின்
மின்ரயில்களின் பேரோசையில்
வாகனங்களின் ஒலிப்பான்களில்
கேட்க மறந்துவிட்டேன்
இதுகாறும் பறவையின் இசையை
தொட்டிச் செடிகளின் சங்கீதம்
புரியாமல் போனது
இக்காலம் வரையில்
அறிந்தேனில்லை
ரயிலில் பாடி
யாசிக்கும் சின்னஞ்
சிறுமியின் குரலில்
வழியும் தேனின்ருசி.
மாநகர இரைச்சலூடே
கவனிப்பாரின்றி காற்றில் சிதறுகிறது
குழல் விற்பவனின்
மூங்கில் கானம்.
மஞ்சள்வழியும்
பெருநகர ஒளிவிளக்குகளின்
நிழல்களில் தேடுகிறேன் என் அமைதிக்கான
சிற்றகல் சுடரை.
- அன்பாதவன், மும்பை