பயணமேற் கொள்கிறான் எனது நண்பன் – இனி
நாளைமுதல் மனைமழலை சுற்றமொடு நாட்களை
நகர்த்திடப் போகிறான் அருமை நண்பன்!
வானூர்தி நிலையத்தில் வழியனுப்ப வந்தார்க்கு
“வருகிறேன்!” என்றபடி விடைபகர்கிறான் – மனம்
தேனூறும் கற்பனையில் திளைத்தாலும், யாருக்கும்
தெரியாத சோகமொடு நடைபயில்கிறான்!
விடுமுறைநாள் வரும்!வரும்!என்(று) ஈராண்டுக் காலமாய்
வெவ்வேறு கனவுலகில் மிதந்திருந்தான் – தனை
விடும்வரையில் அரபிதரும் விதவித நெருக்கடியை
வேண்டா வெறுப்போடு சகித்திருந்தான்...
ஈரகவை ஆகிவரும் தன்னினிய பொன்மகவை
எப்போது காண்பதெனும் ஏக்கமுடனே – மன
ஈரமறு காட்டரபி தோட்டமதில் நேற்றுவரை
எடுபிடியில் இருந்தனன் வாட்டமுடனே…
சம்பளம் ஒழுங்காகப் பெறவில்லை யென்றாலும்
சாப்பாடு கிடைத்ததால் பிழைத்திருந்தான் – சில
கம்பெனியில் துப்புரவு பணிசெய்து தான்பெற்ற
காசுதனில் பிறசெலவு கழித்திருந்தான்…
பணம்அனுப்பி வைக்காத வருத்தத்தில் மனையாளின்
பாசமிகு மடலின்றித் தனித்திருந்தான் – அவள்
சினம்தணிய காசனைத்தும் விடுமுறையில் செல்கையில்
‘செக்’காய்க் கொடுத்துவிட நினைத்திருந்தான்…
ஆறேழு மாதமாய்ச் சம்பளம் பாக்கியென
அரபியிடம் நேற்றுதான் கேட்டுநின்றான் – அதற்(கு)
“யாரேனும் கடனுதவி தருவரெனில் வாங்கிப்போ!
யான்பிறகு தரலாம்!”என்(று) அரபி சொன்னான்…
“ஒருநாளில் எங்குபோய்க் கடன்வாங்க முடியும்?”என்(று)
ஊர்போக நின்றவன் அழுது நின்றான்: – “எனில்,
ஒருவாரம் கழித்துப்போ!” என்றந்தக் காட்டரபி
உரைத்தமொழி கேட்டதும் உறைந்து நின்றான்…
‘கடனாளி யாகநான் விடுமுறையில் செல்வதோ..
கடவுளே!’ என்றுமனம் கலங்குகின்றான் – ஒரு
முடமான நெஞ்சுடைய முதலாளி யிடம்என்ன
முறையிட்டும் பலனின்றிப் புலம்புகின்றான்…
வெறுங்கையாய்ச் செல்வதே விதி: இந்த விடுமுறையில்
வேறெதுவும் நடக்காதென்(று) அறிந்துகொண்டான் – இரு
வருடத்(து) அடிமைவாழ்வைக் காட்டிலும், விடுமுறையின்
வறுமை மிக மேல் என்று புரிந்துகொண்டான்!...
- தொ.சூசைமிக்கேல் (