Dry landஇப்போதெல்லாம்
மானாவாரி குறித்து
யாரும் பேசுவதே இல்லை

சுழன்றடித்த கோடை மழையின்
விடியல் பொழுதுகளில்
பொன்னேர் தீண்டலின்போது
கண்விழிப்பவை அந்நிலங்கள்

துள்ளுபுழுதியாய் ஒட்டிவிட்டு
உச்சி வெயிலின்போது
வரப்போர வேப்பமர நிழலில் தலைசாய்த்தால்
காற்றில் வாசமனுப்பி நன்றி சொல்லும்

அடிஈரம் இருக்கும்போதே
சேரப்போட்ட கடலைக் கொட்டைகள்
வெள்ளிய தண்டுவேர் விட்டு
தளிர்க்கும் பொழுதில் பார்க்கப் போனால்
கவுச்சி வாடையோட பார்க்கும்
பச்சப் புள்ள ஞாபகம் வரும்

களைவெட்டும் காலங்களில்
பண்ணக் கீரையை மடியிலேந்தி
நிறைமாசத்துக்காரிகளாய்
ஒட்டு வரப்பில் நடந்து போவது
தாவணிகளுக்கும் வாய்ப்பதுண்டு

பாலேறிய கம்மங்கதிர்களைகட
கணுபார்த்து ஒடித்து
கக்கத்தில் அடக்கியபடி

நிமிட்டித் தின்றுகொண்டு போனால்
வாயசறும்போது வீடு வரும்

மழைமூடாப்பின்போது
கொட்டகை சாணிவாசத்தினூடே
காராமணியும் மொச்சையும்
சுட்டுக் கோதாத வாய்
அது என்ன வாயோ

சருகோடிய பருவத்தில்
கடலை எடுக்கும் முன்பே
காயப் போடுவதற்காக
களம் பிடிக்க வேணும்

அம்பாரங்கள் காவல் காக்க
கூடாப்புக்கு ஓலை கட்டும் பெருசுகள்
கூட இருந்து கதை கேட்க
ராந்தல் கண்ணாடிக்குச்
சாம்பல் போட்டுத் துடைக்கும் பேத்திகள்

ஆளுயரத் துவரைகளும்
அதற்குமேல் தலைகாட்டும் சோளக்கதிர்களும்
தும்பி விளையாடத் தோட்டம் போடும்
இல்லாவிட்டால் யாருண்டு
அவற்றிற்கும்
அந்நிலத்து இளவட்டங்களுக்கும்

எல்லாம் அறுத்த பிற்பாடும்
மாடு ஆடுகளை மடக்கி மேய்க்கலாம்
ரெண்டொரு மாசத்திற்கு

அதெல்லாம் ஒரு காலம்
இப்போவெல்லாம்
அவை சுடுகாடுகள் போலாகி
வெள்ளெருக்குப் புதர்களுக்கிடையில்
மண்டையோடுகள் போல்
‘பிளாட்’ கற்கள் நிற்கின்றன

சுழன்றடிக்கும்
கோடை மழை வெள்ளம்
இப்போதும் அதனூடே போகிறது
அழுக்கு சுமந்த
ஓர் அநாதைப் பைத்தியத்தைப் போல

பச்சியப்பன்
Pin It