விற்காது மீந்த பறவைகளை
திரைகிழிந்த அலமாரியில்
அடுக்கி வைத்திருக்கிறேன்
சமயங்களில்
தாய்மை ஊற்றெடுக்க
அவற்றின் சிறகுகளைக் கோதிவிடுவேன்
வரத்தாமதமான
மழைநாளின் இரவொன்றில்
இரத்தம் சொட்டச் சொட்ட
கீழே விழுந்துகிடந்தது ஒரு பறவை
மயிர்க்கால்களோடு பிடுங்கப்பட்ட
அதன் இறகுகள்
கழிவுக்கூடையில் சுருண்டுகிடந்தன
தூக்கத்தின் கைகளில் அகப்படாத
இரண்டு சிறுவர்கள்
பறவைகளை எரித்த நெருப்பில்
குளிர்காய்த்து கொண்டிருந்தனர்
எஞ்சியவை
இருட்டில்மிளிரும் கொடூரவிலங்கின்
கோரப்பார்வையைச் சிந்தின என்மேல்.
பறவைகள் பறவைகளாகாமலிருப்பதன்
இரகசியம் புரிந்தது எனக்கு.


சுகிர்தராணி
Pin It