கதிரே உலகின் கருப்பை தமிழே
முதிர்மொழிக் கெல்லாம் முதல்!

முதலாந் தமிழை மொழிக உளதோ
அதனிற் சிறந்த அமிழ்து!

அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து
தமிழினும் உண்டோ தலை!

தலையே உடலின் தலைமை தமிழே
உலகின் மொழிகட்(கு) உயிர்!

உயிராம் உயர்தமிழ் ஓம்புக அன்றேல்
உயிரை மயிர்போல் உதிர்!

உதிக்கும் அறிவும் உயர்தமிழை ஓம்ப
மதிக்கும் உலகும் மகிழ்ந்து!

மகிழப்பா மார்தட்டு மாண்தமிழ்கா இன்றேல்
இகழப்பா தீர்ப்பாய் இடர்!

இடர்வரின் வீழ்த்தும் இயபள் தமிழாம்
மடவரல் என்பேன் மளைத்து!

மளைப்பே மிகினும் மளையாதச் செய்யிற்
களைகள் களைதல் கடன்!

கடமை தமிழைக் கடைபிடி இன்றேல்
மடமை புதராம் மனம்!

மனமொன்றிப் போற்று மணித்தமிழை நாளை
இனமுன்னைப் போற்றும் இசைந்து!

இசைமகள் தேடி இணைவாய் வேண்டாம்
வசைமகள் நாடும் வழு!

வழுவமைதி இந்நாள் வரைவிலகி நின்ற(து)
எழுஅமைதி ஏனோ? இழுக்கு!

இழுக்குவரின் சாவர் இசைசான்றோர் நீயும்
பழக்குன்னைப் பைந்தமிழ்நூல் பார்த்து!

பார்த்தால் வருமோ பழிநற் குறள்கற்றுத்
தேர்ந்தால் எழுமோ திமிர்!

திமிர்வகற்றி நாலடியுந் தேர்ந்துசிலம் போதி
நிமிர்வெய்தல் வேண்டும் நிலைத்து!

நிலையா உலகில் நினையழிக்கும் நூற்கள்
மலையாக் குவியும் மலிந்து!

மலிந்த சுவடிகள் மாண்பென நாடாய்
பொலிந்தநன் னூலுட் புகு!

புகுவாய் கவிக்கம்பன் பூந்தோட்டத் தேனை
வெகுவாய்ப் பருக விரை!

விரைந்தோடி ஒளவை வியத்தகு சித்தர்
உரையறிந்து போற்றி உயர்!

அகரம் அமுதா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It