இதை விட. . . .
நான் எழுதிக்கொண்டிருப்பேன்
மென்மையான சருமத்தைப் பற்றி
இறுகத்தழுவலின் மெல்லிய மூச்சினைப் பற்றி
முயற்சியற்ற பட்டும்படாத இலேசானமுத்தத்தைப் பற்றி
அல்லது,
இந்தக் கடும் பனியைப் பற்றி
உச்சத்தை எட்டிய பனிக்கால ஊசல் குண்டு
பின்னோக்கித் திரும்புவது பற்றி.
வரண்ட பூமியைத் கொத்திக்கொண்டிருக்கின்றன
பறவைகள் தானிய மணிகள் தேடி
தானியக்கிடங்கின் கதவைத்
துளைத்துக் கொண்டிருக்கிறது
மரங்கொத்தி ஒன்று.
இந்த இருண்டு நீண்ட நாட்களில்
விறகு சுமந்து செல்வது எவ்வளவு
நன்மை பயக்குமென
யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.
இதைவிட,
பனிக்காலம் மெல்லமெல்ல விலகுவது பற்றியும்
கூரையிலிருந்து பாளம் பாளமாய் வெடித்து இழியும்
பனிப்படலம் பற்றியும்
தரையைத் தழுவி சீழ்க்கையடித்துச் செல்லும்
பனிப்புயல் பற்றியும்
அத்துடன் சேர்ந்தே நான் இளகுவது பற்றியும்
இறுதியாக
இப்போது நான் இங்கே இருப்பதன்
மகிழ்ச்சியைப் பற்றியும்
இவற்றுக்கெல்லாம் நான் எவ்வளவு
பரிச்சயப் பட்டிருக்கிறேன்
என்பது பற்றியும் எழுதலாம் நான்.
இதை விடுத்து
குண்டுகள், இனப்படுகொலை,
கொடியவர்களின் கூட்டு,
பேரழிவு ஆயுதங்கள், அழித்தொழிப்பு,
சுதந்திரம் போன்ற சொற்களின் பொருள் தேடி
போக்குகிறேன் பொழுது.
அழகியல் நயத்தின் ஈர்ப்பையும், குருதியையும்
ஏராளமான இடைகளையும் தொடைகளையும்
யுத்தத்தின் இரத்தவெள்ளத்தால்
பிரிக்கப்பட்ட இணைகளின் இரகசியத்தையும்
பாழ்களின் வழிபாட்டையும், துயரத்தையும்
யாருமே பாட விரும்பாதவற்றையும்
பஞ்சாமிருத அவியல் செய்து பாட விரும்பவில்லை நான்.
ஆனாலும்,
உங்களுக்குத் தெரிந்த
தெய்வீகமான காதல்கதைகளை விட
மோசமான கதைகள் இருக்கவே இருக்கின்றன.
கொலைகள், சித்திரவதைகள் பற்றிய நினைவுகளுக்கு
எதிராக உயர்த்தப்பட்ட இறுகிய முஷ்டிகள்
நொறுக்கப்பட்டிருக்கின்றன நம்மாலேயே.
இனி ஒரு ஆக்கிரமிப்பைச்
சகித்துக் கொள்ள முடியாது என்னால்.
மாண்டுபோன நம்மவரின் எலும்புக்குவியலை விடவும்
இந்த வார்த்தைகள் மூலம் நாம் வெளிச்சம் போட்டுக்காட்டும்
துண்டு துண்டான சரித்திரச் சம்பவங்களை விடவும்
அகண்டதொரு பள்ளத்தாக்கு இருக்கிறது, அமெரிக்காவில்.
ஈராக்கோ, வட கொரியாவோ, சோமாலியாவோ
இனப்படுகொலைச் சந்தையை நம்மிடமிருந்து
அபகரித்துக் கொண்டதாக எண்ணுகிறீர்களா நீங்கள் ?
அது ஒன்றுதான் பாலைவன வெப்பத்தின் கீழ்
தோலைக் கருமையாக்குகின்றதா?
கேளுங்கள் !
சிதறிக்கிடக்கும் இந்த எதிரி நாடுகளுக்குள்
இடி மின்னலைவிட அகன்றதொரு
பாழ்நிலம் பரவிக்கிடக்கிறது.
குளிர் நடுக்கும் பின்னிரவில்
போருக்கு அழைக்கிறது கிசுகிசுப்பாய்.
எந்தவொரு போரிலும்
முதலில் கொல்லப்படுவது
தத்துவவாதிகளும் கவிஞர்களும்
எனச் சொல்கின்றனர் அவர்கள்.
எங்களில் முன்னையிருந்தவர்கள்
வீழ்ந்து விட்டனர் இப்போது.
பகலை இரவு முத்தமிடுவது போல்
இறுகமூடி அறையப்பட்டன
அவர்தம் சொற்கள்.
எனவே,
சின்னஞ்சிறிய மலைப் புகலிடத்தை
புத்தம்புதிய பணிப் பொழிவைப் பின்னுமோர்
கூடலுக்கான முத்தத்தைப் பின் தள்ளி.
முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன் நான்
எழும் ஓர் அணுப்புயலுக்கு எதிராக.
அன்பு காட்டுவதற்கு
எனக்குத் தெரிந்த ஒரே வழி
இந்தப் பக்கத்தில் பதிந்திருக்கும்
எனது தாய் மொழியின் சொற்கள்தாம்!

-புதுவை ஞானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It