அழைப்பைத்
தவற விடுபவர்களுக்கு
ஒரு விண்ணப்பம்
மறுமுனையிலிருப்பவர்
தயங்கித் தயங்கி
உங்கள் எண்ணை
தட்டச்சிருக்கலாம்.
தொடர்வதா? துண்டிப்பதா?
எனும் குழப்பத்தோடு
அழைத்திருக்கலாம்.
மகிழ்வின் பொருட்டு அழைத்த
அழைப்போ...
துயரைத் தோள் மாற்றிடுமென
நம்பும் அழைப்போ
இழப்பின்
கேவல்கள்
அடங்கியதோ..
கொண்டாட்டத்தின்
குதூகலப் பறைசாற்றலோ..
என
எதன் பொருட்டும்
அழைத்திருக்கலாம்.
தவிர்த்த அழைப்பு
சர்வ நிச்சயமாய்
தவித்த அழைப்பாய்
தானிருக்கக்கூடும்
முடிந்தவரை அழைப்பை
அணைக்காதீர்
அதுவொருனின்
ஆயுளைக் கூட்டிடக் கூடும்.
- இசைமலர்