அவள் தெருவில் தனியே நடக்கும்
இந்த இரவு
அரளி மொட்டுக்குள்ளிருக்கும்
இருட்டால்
நிரப்பப்பட்டிருக்கிறது
அவளது காலடி சத்தத்தைத்
தூரத்திலிருந்து வரும் சாராய நெடி
வன்புணர்வு செய்ய நினைத்தது
அவள் தோல் மீது பாயும்
தெரு விளக்கு ஒளியின் தீண்டல்
அணை உடைக்கும் வெள்ளத்தின் தழுவலாய்...
ஓர் ஆண் கூட்டம்
அவளைக் கடந்து சென்றது
வேர்த்து விறுவிறுத்தாள்
அவள் வாடகைக்கு ஏறி அமர்ந்த மகிழுந்தின் ஓட்டுநர்
ஆண் என்பதால் வந்த அச்சம்
மண்ணோடு மக்காத நெகிழியென
நெஞ்சில் நெருடியது
வீட்டின் வாசல் வரை

வேடனின் அம்பு குறி தவறிட
பறந்த பறவையின் படபடப்பால் சூழப்பட்ட
இந்த இரவை
பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து
பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதென
நினைப்பவர்களுக்குப்
பரிசாகக் கொடுக்கலாம்!

- செ.நாகநந்தினி, பெரியகுளம்

More articles by செ.நாகநந்தினி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.