நிலமற்ற பொழுதின் மீது பவனிவரும் காலத்தை
வேடிக்கை பார்க்க வந்தவனையே
பூனை போல்
கவ்விச் செல்கிறது அது

இறுகிய கொடிப் பின்னலுக்குள்
முகம் பிணைந்திருக்கும்
முதிய சருகு ஒன்றை
கண்முன்பே கவ்விச்செல்கிறது காற்று

வீதி வழியே போகும்போது
வீட்டுக்குள் மறந்து வீசப்படும்
அன்பான சொல்லொன்றை
அந்தரங்கமாக கவ்விப் போகிறது மனது

நட்டநடு இராத்திரியில்
ஒரு பூப்போல இரகசியமாக
உதிரும்
ஒரு அந்திம நட்சத்திரத்தை
கணத்தில் கவ்வி
கபளீகரிக்கிறது
பால் வீதி

இரவை கொஞ்சம் சபிக்கலாமென்று
சன்னல் கதவை திறந்தவளை
சலனமற்று கவ்விப் போகிறது பசி

ஒன்றை ஒன்று கவ்விப் போய்
உலகில் கபளீகரம் செய்வது ஏன்?
கடைசியில் ஏன் மட்டும் எஞ்சியிருக்க
அதையும் சுவடில்லாமல்
கவ்விப் போவதற்காக இரகசியமாக
மௌனத்தில் ஒளிந்திருக்கிறார்
மகத்தான கடவுள்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.