புத்தரைப் பிடித்தவர்களை
கவனித்துப் பாருங்கள்
முத்தம் விரும்புகிறவர்களாக
இருப்பார்கள்

*
ஈரத் தோகை வெளி திறக்காது
தவிப்புக்கும்
தகிப்புக்கும் இடையே
நீர்த் தாவரம் பூக்க கல்

*
சிலை அருகே நிற்கும்
உன்னிடமும்
சிற்பம் இருக்கிறது
தானாகவே தவம் ஆவது
இப்படித்தான்

*
வெயில் வெடிக்க
சுருண்டு கிடக்கும்
கூழாங்கற்கள்
கொப்புளங்கள்
தரை பிளந்த சூட்டிலும்
நீர்த்துளி நினைப்பு தான்
மேல் மினுங்குவது

*
தலைச்சும்மாடு நழுவ
சரி செய்யும் அனிச்சை
சுள்ளிக்கட்டை
வீடு சேர்த்து விட்டிருந்தது
வியர்த்து
சொட்டியவன் மேல்
பின் தொடர்ந்த நிலவொளி

- கவிஜி