காலமெல்லாம்
அன்புக்கு அலைபவளிடம்
நான்
கவிதைகளைத் தருவதில்லை
கைகளைத் தருகிறேன்
*
பால்யத்தில்
சுற்றித் திரிந்து
விளையாடி வளர்ந்த
ஊருக்கு
எப்போது சென்றாலும்
முதலில் புயல் அடிக்கிறது
பிறகு அமைதி
பேரமைதி
*
ஓடிச் சென்று
கைகள் பற்றிக் கொள்ள
பரஸ்பரம் பேசி
உணர்வு பொங்க
எதுவும் இல்லையெனினும்
கண்கள் குளிரப் பார்க்க
ஏதாவது கூட்டத்தில்
நம்மூர்க்காரர்
எவராவது ஒருவர்
எனத் தெரிந்து விட்டால்
இதயத்தில் படபடவென
பூத்துக் குலுங்கும்
வெளிச்சங்களில்
கவனி
கண்ணீர்த்துளி
- கவிஜி