ஒரு சகாப்தம் முடிந்தது
ஆணிவேர் அடங்கியது
ஆலமரம் சாய்ந்தது
அதெல்லாம் ஒன்றுமில்லை
அன்றைய வேலை முடியப் போகிறது
எரித்துக் கொண்டிருப்பவருக்கு
கொலப்பசி
*
சிறகு வலிக்க
கடந்த வானத்தை
சில கோடுகளில்
நிகழ்த்தி விட்ட தூரிகை
பறவைக்கு
இறகூட்டிக் கொண்டிருக்கிறது
*
ஒரே அலைதான்
திரும்பத் திரும்ப வருகிறது
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அலை என்பது
அரிதாரம்
*
எது எப்படியாகினும்
கடல் ஒரு மர்மம்
அதன் திசைகளில் தீர்வதில்லை
தூரங்களின் தூரமும்
ஆழங்களின் ஆழமும்
*
என்னைத்
தேடாதவர்களைப் பற்றி
நான்
கவலைப் படுவதில்லை
தொலைந்து போகவே
விரும்புகிறவன்
நான்
*
காஃபி குடிப்பதாக
புகைப்படம் பதிகிறாய்
கள் குடிக்கும் கோப்பை
என்றல்லவா
கவிதை வருகிறது
- கவிஜி