1.

என்னை விட்டு
எவ்வளவு தூரமானாலும்
சென்று கொள்
என்னை
அழைத்துக் கொண்டு!
எனக்கொன்றும்
வருத்தமில்லை.

2.

ஒரு முறை கூட தோற்கவில்லை
எனில்
அது என்ன விளையாட்டு.

ஒரு முறை கூட அழவில்லை
எனில்
அது என்ன வாழ்க்கை.

ஒரு முறை கூட பிரியவில்லை
எனில்
அது என்ன உறவு

ஒரு முறை கூட உனக்கு
எனை
பிடிக்காமலா போய்விடும்!!

3.

விசச் செடியை
எல்லாம் சரியாகக் கண்டுபிடித்து
சாப்பிடாமல் விட்டுவிடுகிறது.
விசமருந்து
அடித்த செடியைத்தான்
கண்டுபிடிக்க முடிவதில்லை.
தின்ற ஆடே
பாவமென்றால்
அந்த செடி
அந்த செடியின் பூ
எவ்வளவு பாவம்.

4.

அப்பா
இருந்த இடம் தெரியாமல்
இருந்தார்.
அவர் இருந்த இடத்தையும்
சேர்த்து
தேடிக் கொண்டிருக்கிறேன்.

5.

சகமனிதனால் சபிக்கப்படாதிருத்தலே
சாகாவரம்

6.

சுவாசிக்கிறாயோ
இல்லையோ
காற்று
உன்னோடே
இருக்கிறது!

நேசிக்கிறாயோ
இல்லையோ
நான்
உன்னோடே
இருக்கிறேன்!

- அ.சீனிவாசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.