விரால் மீனைப் போல
பளிச் பளிச்சென
துள்ளிப் போகிறது காலம்
உள்ளங்கையில் இருந்து
அது விசையுடன்
பாய்ந்து போகும் போது
கடலின் உப்பின் பிசுபிசுப்பும்
நீரின் பச்சை நெடியும்
உள்ளங்கை ரேகையை
நிரப்பி விட்டுச் செல்கின்றன
எதன் பொருட்டு வாழ்க்கை
அர்த்தமற்றுப் போகிறது
என்பதற்கு எப்போதும்
ஒரே மாதிரியான
விடைகள் அமைவதில்லை
இந்த நிமிடம்
நெடுங்கால நேசத்தை
காலில் போட்டு மிதித்த படி
புன்னகைக்கவும்
மனதில்லாமல்
நீ நடந்து போவது
காரணமாக இருக்கலாம்
ஆனால் அது
எப்போதும் அப்படியில்லை
ஏற்கனவே துளை விழுந்த
மண்பாத்திரம் தான் மனது
இப்போது ஒரு புதிய துளை
வயிற்றுக்குச் சோறில்லாமல்
போகும் போது
உறவுகள் காரி உமிழும் போது
வேலை சரிவர அமையாமல்
கொளுத்தும் வெயிலில்
தார் சாலையில்
அலையும் போது
முதலாளி பணியாளர்களை
காயடித்து விடும் போது
தாய் தந்தையர்
பெற்றதற்காக நம்மை சபிக்கும் போது
பெற்ற பிள்ளைகள்
நம் பேச்சைக் கேளாமல்
பிடித்து கீழே தள்ளி விடும் போது
நன்றி கெட்ட இதயங்கள்
நம் முகத்தில் விழித்து
ஏளனமாக சிரிக்கும் போது
பிச்சை கேட்ட முதியவளுக்கு
ஒரு ரூபாய் கொடுக்க முடியாமல்
முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு
கடந்து வரும் போது
இந்த மண் பாத்திரத்தில்
மேலும் மேலும் துளைகள்
விழுந்து கொண்டேயிருக்கின்றன
சென்று சேரும் போது
துளி நீரும் மிஞ்சப் போவதில்லை
ஆனால் முகத்தில் வழிந்தோடுகிறது
வாழ்கிறோம் என்பதற்கு
முகத்தில் வழிந்தோடும்
நீர் சாட்சி அவ்வளவு தான்
பாத்திரங்கள்
பாறையின் இண்டு இடுக்குகளில்
குமிழ் விட்டுக் கொண்டிருக்கும்
நதி நீரைப் போல தான்
கடந்த காலமும்
மனதின் ஓரங்களில்
எப்போதும் தேங்கியிருக்கும்
பெருந் திரவம்
இந்த நினைவுகள் தான்
முகம் காண முடியாத
அத்துவானக் காட்டிலிருந்து
ஒலிக்கிறது கைபேசியில்
உனது குரல்
உயிரின் ஓசை செவி வழியே
இதயத்திற்குள் பாயும் போது
என் காலம்
கற்சிலையாக சமைந்து விடுகிறது
சகியே!
எத்தனை தேம்பல்களையும்
விசும்பல்களையும்
அந்தப் பக்கம் மறைத்துக் கொண்டு
பேசுகிறாயோ !
முகம் தெரியாத உரையாடலில்
துயரங்களால் நிரப்பப்பட்ட பாத்திரமாக
நீ நிறைந்திருக்கிறாய்,
உடைக்க முடியாது
தரையில் கவிழ்த்து விடலாம் தான்
துயரம் ஒரு வேளை
ஆறு போல ஓடலாம்
ஆனால் பாத்திரம் உடையாமல்
இருக்க வேண்டுமே
இப்போது
பார்த்துக் கொள்ளவாவது முடிகிறது
இப்படியாகத்தான் தொடர் கதையாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றன
துயரத்தை சுமக்கும் பாத்திரங்கள்
- தங்கேஸ்