வெயில் நாள் வெக்கையின்
நடுப் பொழுதில்
வேகப் பயணமாக யாவரும்
துரித கெதியில் இருந்தார்கள்.

சிலர் வேத பாராயணத்தில்
உச்சாடனம் மிக்கவர்களாகவும்,
சிலர் இறை மன்றாட்டலில்
ஜெபித்தவர்களாகவும்,
சிலர் மார்க்கப் பற்றில்
மாமூலாத்துகள்
செய்கிறவார்களாவும்,
சிலர் நித்தியத்தை
நிரூபிக்கச் சொல்லும்
பகுக்கும் அறிவில்
பண்பட்டவர்களாகவும்,
நேர்ச் சாலையின்
கூப்பிடு தூரக்
குறுக்கு வெட்டின்
கணக்கில் பயணித்தார்கள்.

சுருண்டு விழுந்து
கிடக்கும் காக்கை
நீராடாததால்
நிதானமற்றதாவெனத் தெரியாது.

நின்றுவிட்ட இரண்டு பேர்
மட்டும் தயக்கம் கடந்து
சிறுதாமதமாக
வண்டிகள் விலக்கி
வழியமைத்துச் சென்றபோது
துடித்து துடித்து
இறந்து போன காக்கையின்
உயிர் பிரிதலுக்கு ஒருவரும்
பொறுப்பேற்கப் போவதில்லைதான்
சார்புக் கொள்கையைப் படித்தாலென்ன
சத்தியக் கொள்கையைப் படித்தாலென்ன
இரக்க உள்ளத்தை
எங்கோ
தொலையக் கொடுத்துவிட்டபோது.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.