1. முகமில்லா காதல்
நேரில் வந்தவளுக்கு
என் முகம் தெரியவில்லை.
கனவில் வந்தவள் முகம்
எனக்குத் தெரியவில்லை.
காதலுக்கு முகமுண்டா என்ன!
---
2. வெயில் கவிதைகள்
2.1
வெயில் என்பது
வெறும் டிகிரி.
மழைக்கும் குளிருக்கும்
காதல், கவிதை, போர்வை,
தேனீர் — மற்றும் பல.
வெயிலுக்கு
வெறும் நீர்தான் போதும்.
---
2.2
தேனீர் சீக்கிரம்
ஆறிவிடுவதில்லை —
அதனால்தான்
வெயில் பிடிக்கிறது.
---
2.3
"ஆமாம், இந்த வருஷம்
வெயில் கொஞ்சம் ஜாஸ்திதான்..."
காய்ந்து கிடக்கும்
மற்ற செடிகளிடம்
ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்துக் கொண்டிருந்தது
சூர்யகாந்தி.
---
2.4
மழையில் கவிதை
பூக்கிறது.
குளிரில் காதல்
அரவணைக்கிறது.
வெயில் மட்டும்
தனித்துவிடப்படுகிறது.
அதனால் தான்
அவ்வளவு சுடுகிறது!
---
2.5
வீட்டுச் செடியும்
கொடியாளும்
மலர்ந்துக் கொண்டிருக்கும் வரை
வெயில் சுடுவதில்லை.
---
3. சுதந்திர ஜிமிக்கி
ஆடிக்கொள்ளலாம்,
பாடிக்கொள்ளலாம்,
ஓடிக்கொள்ளலாம்
இருந்த இடத்திலேயே!
அணிந்திருக்கும்
ஜிமிக்கி அளவுக்கே
அவளுக்கும்
சுதந்திரம்!
---
4. தெய்வத்தின் தெய்வம்
சிலையில் மட்டும்
திறந்திருக்கும் கண்கள்
இரண்டாயிருந்தால் என்ன,
மூன்றாயிருந்தால் என்ன!
நெற்றிக்கண்
திறக்கப்படாததால்
எதுவும் குற்றமில்லை
என்றாகிவிடுகிறது.
கடவுளையே மன்னித்துவிடும்
நாமெல்லாம்
தெய்வத்தின் தெய்வம்!
- அ.சீனிவாசன்