கீற்றில் தேட...

உதிரும் பூக்களைப் போல
சிறகு சுருக்கி வெய்யிலை
சுவாசித்துக் கொண்டிருக்கிறது
வேப்பமரத்தில்
கரையும் கருங்காகம்

தொண்டை தண்ணீர்
வற்றிப் போன மனிதர்கள்
எதிரே வரும் வாகனங்களை
சபிக்கிறார்கள் காரணமற்று

தூக்கிட்டுத் தொங்க
மனிதர்கள் கிடைக்காமல்
தங்களையே தூக்கிட்டுத்
தொங்குகின்றன
கோடைகால மின்விசிறிகள்

காவிரி மேலாண்மை வாரியம்
நியூட்ரினோ ஸ்டெர்லைட்
இத்தனையும் தாண்டி
ஐபிஎல்லையும்
சினிக்கூத்துகளையும்
லஜ்ஜையின்றி தழுவும்
தமிழ் வளர்க்கும் ஊடகங்கள்
ஒரு புறம்

ஊரின் எல்லைகளில்
கட்டுக்கடங்காத வெள்ளம் பாயும்
டாஸ்மாக்குகள் மறுபுறம்

எங்கும் எதிலும்
கலந்து கொள்ளாத
அமர இடமில்லாத யாருக்கும்
மூன்றாவது கண்
முளைத்து விடுகிறது சட்டென்று

தொடுதிரையைச் சுரண்டிய விநாடி
எல்லையில்லா கருங்குழிக்குள்
இழுத்துப் போகிறது
ஒரு ஜீ பூம்பா பூதம்
ஒளியாண்டுகள் பயணத்தில்
திரும்ப வராத தொலைவிற்கு

- தங்கேஸ்