கீற்றில் தேட...

நீருற்றுவது இயல்பு
பேரும் ஊற்றினாயே
தாவரத் தாய் நீ

*
அருவிக்குள் நிற்கையில்
தோன்றியது
நீர்த் துருவல் இது

*
இத்தனை பயிற்சிகளுக்குப் பிறகும்
கோப்பைகளையே தயாரிக்கிறார்கள்
தேநீர் தோல்வியாளர்கள்

*
நான் நான் என
எழும்பும் எதுவும்
நிழல்

*
கசப்பான அனுபவங்களுக்கும்
காத்திருங்கள்
இனிப்பான இதயங்களே

*
வெறும் அலையோடு
வீடு திரும்புகிறான்
கடல் பிறழ்ந்தவன்

*
முடிந்து விட்ட கடிதத்தில்
காகிதக் கவலை
கூட காதலின் திவலை

*
இளைப்பாறல்
ஒரு வருகைக்கானது
பிறகு வந்து செல்வதற்கானதும்

*
கோயிலை வரைந்த குழந்தை
பிச்சைக்காரர்களையும்
சேர்த்தே வரைந்திருந்தது

*
ஆடை தவிர்
ஓர் ஆதி சிற்பத்தை
மறைத்த பாவி ஆவாய்

*
திரும்பவும் படித்தேன்
திரும்பவும் படி தேன்
உன் பெயர்

*
வாங்க இயலாத
பொம்மையாகவே
வீடு வரைக்கும் வரும் சிறுவன்

*
காட்டுக் கவிதைகளை
சுள்ளிக்குள் மறைத்திருக்கிறாள்
ஆனைமலைக் காதலி

- கவிஜி