peace pigeonவிழிகளின் வழி
கசிகிறது நம்பிக்கையின்மை
இதயத்திலிருந்து கசிகிறது
குருதி வேதனையால்
ஊர்ந்து வருகிறது தனிமை
அமைதியும் உடன் வருகிறது

மங்கி மறைகிறது
கடந்த காலம்
மங்கலாகத் தெரிகிறது
நிகழ்காலம்
வெடிப்புக்கள் வழியே
பார்வையை வீசிச் செல்கிறது
எதிர்காலம்

தானே விலகுகிறது மர்மம்
அனைத்து மோசடிகளையும்
உண்மை வெளிப்படுத்துகிறது
மோதல் தளர்கிறது
உடன் வருகிறது அமைதி

புயல் ஓய்கிறது
விண்ணில் வானவில் ஒளிர்கிறது
தென்றல் ஆரவாரத்தை அடக்குகிறது
உடன் வருகிறது அமைதி

கோபம் அகலுகிறது நெஞ்சிலிருந்து...
மன்னிப்புக்கான அறைகூவல்
வெளிவருகிறது
இதயம் தணிகிறது
உடன் வருகிறது அமைதி

மனம், உடல், ஆன்மா எங்கும்
வலி நிறைந்துள்ளது
சண்டையிடும் மனஉறுதி தளர்கிறது
உடன் வருகிறது அமைதி

வெறுப்பு எங்கும்
ஆட்சி செய்கிறது
பிசாசு தன் விளையாட்டைத்
தம்பட்டம் அடித்துக் கொள்கிறது
தேவதைகள் தோற்பதில்லை
தற்காலிக ஓய்வைக்
கொண்டு வருகின்றன
உடன் வருகிறது அமைதி

எனது இரத்தக்குழாய்களை
உறையச் செய்கிறது குளிர்
கரம் ஒன்று நீள்கிறது
நெருக்கமாகப்
பற்றிக் கொள்கிறது என்னை
ஆற்றுப்படுத்துகிறது
உடன் வருகிறது அமைதி

அதிகரிக்கிறது கொந்தளிப்பு
சோர்வடைகிறது எனது மனம்
பொறுமையுடன் செவிமடுக்கிறது
அக்கறை கொண்ட ஒரு குரல்
உடன் வருகிறது அமைதி

எனது இதயத்தைப் பிளக்கிறது வேதனை
இளம் செம்பழுப்பு நிற விழிகள்
வேதனையைத் தணிக்கின்றன
காயத்தை ஆற்றுகின்றன
உடன் வருகிறது அமைதி

வீணென்று தெரிகிறது வாழ்க்கை
வாழும் ஆசை அகல்கிறது
மென்குரல் ஒன்று என்னை வேண்டுகிறது
உடன் வருகிறது அமைதி

தேய்கிறது பகல்
வானிலிருந்து இறங்குகிறது இருள்
புதிய விடியல் பிறக்கிறது
உடன் வருகிறது அமைதி

எப்போதும் வருகிறது அமைதி
அது ஒருபோதும் தவறிழைப்பதோ
காட்டிக் கொடுப்பதோ இல்லை
அது ஒருபோதும்
தோற்பதும் இல்லை
கைவிடுவதும் இல்லை
அமைதி எப்போதும் வருகிறது...

- சமினா சலிம், இணைப் பேராசிரியர், மருந்தியல் மற்றும் மருந்துத் தயாரிப்பியல் அறிவியல் துறை, ஹூஸ்டன் பல்கலைக்கழகம்.

தமிழில்: நிழல்வண்னன்

நன்றி: countercurrents.org

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.