குடிசை வீடும்
கோபுர வீடும்
ஆண்ட வீடும்
பேண்ட வீடும்
மருகிக் கிடந்தது
மழை வெள்ளத்தில்
தத்தளித்து
பெருங்கடலின்
சிறு எதிர்ப்பில்.

முரண்களில்
மூழ்கியவர்களுக்கு
நீர் இடங்களின்
சலன ஓலம்
நிம்மதியைத் தொலைத்தது
அதிகாரத்தில்
அபகரித்த
அவைகளின் இருப்பிடமென
அறியுமாறு.

கொட்டிய மழையின்
கொடூரம் கண்டாலும்
கூகுளைத் தேடினார்கள்
அதிகார மமதைப் பித்தில்
அடிப் பொடிகளின் துணையோடு
ஒன்றுமில்லையென
வாக்களித்த பெருமக்கள்
வருந்தி அழுமாறு.

மாற்றான் தாய்
மனோபாவம்
மறுபடியும் தெரிகிறது.
மண்டியிட்டு கெஞ்சியழும் பொழுதும்
இரங்கிடாத இதயத்திற்கு
வக்காலத்து வாங்கும்
சகோதரனின் வலிகளோடு
வடியாத தண்ணீரில்
வடிக்கின்ற கண்ணீராக.

தும்பைவிட்டு
வாலைப் பிடிக்கும்
வாழ்க்கையே வாய்த்ததனால்
விசைப் பொத்தான்களுக்கு
வேலை வரும் வேளையிலும்
வேறொரு பொத்தானை அழுத்துவார்கள்
உணர்ச்சியில் குளிர் காய்ந்து
ஓநாயாக மாறியே‌
அவர்கள் பழகியதால்.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.