உங்களைத்தேடி வரும் ஒவ்வொரு முறையும்
ஓடும் பேருந்திலிருந்து தொடர்வண்டியிலிருந்து
விமானத்திலிருந்து தள்ளிவிடுங்கள்
சாலையைக் கடக்கும்பொழுது
எட்டு சக்கர சரக்குந்தின் சக்கரத்திற்கடியில்
கால் நனைக்கச் செல்கையில்
அருகில் யாருமற்ற கடலில்
மேலும் நீரற்ற கிணற்றில்
ஆயிரம் தாமரைகள்
அல்லிகள் மலர்ந்த குளத்தில்
உயர்ந்த
உங்கள் வீட்டு மாடியிலிருந்து தள்ளிவிடுங்கள் இப்பொழுதே
வழக்கமாகப் பருகும் தேநீரில்
இனிப்பான விடமருந்து கலந்துகொடுங்கள்
வீட்டிலேயே என்னைப் பூட்டி வைத்துவிடுங்கள்
கழுத்தில் உங்கள் பாதங்களை அழுத்துங்கள்
என்மேல் எண்ணெய் ஊற்றித் தீயிடுங்கள்
தூங்கும்பொழுது மட்டும் ஏதும் செய்ய வேண்டாம்
யாரால் எப்படி கொல்லப்பட்டேனென
நினைவில்லாமல் போய்விடும்
மேலும்
என்னைவிட்டு இன்னும் தூரம் தூரம் சென்று
அல்லது அருகில் வந்து வந்து
எப்படியாவது என்னைக் கொல்லுங்கள்
ஏதும் நினைத்துக்கொள்ளமாட்டேன்
இப்பொழுதே
என்னைக் கொல்ல தொடங்குகள்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவதைவிட
பெரிதாய் என்ன வேண்டும் எனக்கு

***

கடலின் துயரம்

கடல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது
மூழ்கி மூழ்கி எழுகிறேன்
மனத்தின்
ஒரு நினைவுகளைக்கூட
அதனால் கரைக்க முடியவில்லை

புதிய விருட்சத்தில் நிலைபெறும் மனம்

மீதமிருக்கும்
என் வாழ்க்கையில்
ஒரு சிறிய வெடிகுண்டை வீசுகிறேன்
எல்லாவற்றையும் தகர்க்கிறேன்
எல்லாம் உதிர்ந்து உதிர்ந்து கீழ் வீழ்வதில்
எல்லா திசைகளும் கண்களுக்குப் புலப்படுகின்றன
உலகம் எவ்வளவு பெரிதெனத் தெரிகிறது
கடல் எவ்வளவு நீளமானது என்பதை
கண்ணால் அளக்கிறேன்
நின்ற இடத்திலிருந்து உலகைச் சுற்றிப்பார்க்கிறேன்
சில விதைகளை மட்டும் தூவுகிறேன்
நீர்த்தெளித்து வேலியிட்டு
பாதுகாத்து அருகில் சென்று அடிக்கடிப் பார்க்கிறேன்
எனக்குப் புதியதாய் முளைக்கும்
சில செடி கொடி மரம் இப்போதைக்குப்
போதுமானதாக இருக்கின்றன

***

பறத்தலுக்குப் பெயர் தேடல்

என்னை விட்டுவிடுங்கள்
யாரும் தேடி வரவேண்டாம்
எதையும் நினைவுபடுத்த வேண்டாம்
எந்த உடைகளும் தேவையில்லை
தங்கும் வீடும்
யாராவது விரும்பினால் வழியில்
உணவு மட்டும் கொடுங்கள்
இல்லாவிட்டால் இன்னும் உத்தமம்
நடந்துபோய்க்கொண்டே இருக்க வேண்டும்
சோர்வுற்றால் வழியிலேயே படுத்துக்கொள்கிறேன்
எல்லாவற்றையும் கழற்றிவிட்டுவிட்டு
எவ்வளவுதூரம் போகிறேனோ போகிறேன்

***

ஒழுக்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

28 நடந்துகொண்டிருக்கிறது
இன்றுவரை
எந்த யுவதியிடமும் சென்று
உன்னை விரும்புகிறேன்
மேலும் மேலும் விரும்புவேன்
நீ என் நிலம்
நீளும் வானம்
ஒளிரும் நட்சத்திரம்
கடல் சேர்க்கும் நதி
ஒருபோழ்தும் சொல்லியதில்லை
என்னை நேசிப்பதாகச் சொல்லியவளையும்
நேசிக்கவில்லை
என்னை நேசிக்கத் தொடங்குகையில்
உன்னைவிட்டு
வெகுதூரம் சென்றிருப்பேனென அடிக்கடி
சொல்லி வருகிறாள்
இப்பொழுது
யாரையும் நேசிக்க நேரமில்லை
வயதும்
எல்லோரும் யாரையாவது
நேசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
நான்மட்டும் ஏன் நேசிப்பதை
பேராசைகொள்வதென
அருவருப்பாகவும் குற்றமாகவும் எண்ணுகிறேன்
இப்பொழுது
வேகவேகமாய் பின்பற்றி வந்த
யாவற்றையும் தீயிட்டுக்கொளுத்துகிறேன்
கொழுந்துவிட்டு எரிகிறது என் வாழ்க்கை

***

உடைத்தலில் உருவாகும் புதியன

என்னை
இங்கேயே
இப்பொழுதே விட்டுவிடுங்கள்
இங்கேயே இருந்துவிடுகிறேன்
இந்த மரத்தின்கீழ் அமர்ந்துகொள்கிறேன்
எதுவும் கேட்காதீர்கள்
என்னால் எதுவும் பேசமுடியாது
எந்த கேள்விகளும் என்னிடம் இல்லை
பதில்களும்
நீங்கள் எங்காவது செல்லுங்கள்
ஏதாவது செய்யுங்கள்
நாம் மீண்டும் சந்திக்காமல் இருப்போம்

- இரா. இராகுலன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
புதுவைப் பல்கலைக்கழகம்
புதுச்சேரி – 605014

Pin It