சரிந்த நாற்காலியில் இருந்து
நகுலனை எழுப்பி விட
கவிழ்ந்த முகத்தில் இருந்து
பிரமிளை ஏந்திப் பார்க்க
கிணற்றுக்குள்ளிருந்து பின்னோக்கி
ஆத்மநாமை தூக்கி விட
வேறெதற்கு
எழுதிக் கொண்டிருக்கிறேனாம்

*

மேலே பார்த்தார்கள்
குனிந்து கொண்டார்கள்
திரும்பிக் கொண்டார்கள்
இன்னும் நிறைய கொண்டார்கள்
ஒரு நல்ல கவிதையை
நேருக்கு நேர் சந்திக்க
கண்கள் இருந்தும்
கருணை இல்லாதவர்கள்

*
கரண்டியில் ஓரிரு
பருக்கைகள் எடுத்து
நசுக்கிப் பார்த்து
வாயில் போட்டு
அதே நேரம் அருகில் நிற்கும்
கன்னத்தில்
எட்டி முத்தமிட்டு
மீண்டும்
சமையல் தொடர்கிறது
பசி பிய்த்துக் கொண்டிருக்கிறது
பரிமாறல் எப்போதோ

*
6 மணிக்கு எழுந்திரு
8 மணிக்கு பேருந்து
9 மணிக்கு அலுவலகம்
11 மணிக்கு தேநீர்
1 மணிக்கு மதிய உணவு
4 மணிக்கு தேநீர் உடன் சமோசா
6 மணிக்கு அலுவலகம் மூடு
7 மணிக்கு பேருந்து
8 மணிக்கு வீடு
9 மணிக்கு இரவு உணவு
10 மணிக்கு தொலைக்காட்சி
11 மணிக்கு தூக்கம்
நேரத்துக்கு வந்த வாழ்வு
பாரேன்

- கவிஜி

Pin It