உறக்கத்திலிருக்கும்
குழந்தையிடத்தில்
அலுங்காமல்
தன்னை
விடுவித்துக் கொள்ளும் தாயைப்போல
விலகுவதெனில்
நீ விலகிக் கொள்ளலாம்

மரத்தில் பழுத்த இலையொன்று
காற்றுக்குள் அசைந்து அசைந்து
மரமே
அறியா தருணமொன்றில்
சிலிர்த்து பின் உதிருமே
அப்படி
விலகுவதெனில்
நீ விலகிக் கொள்ளலாம்

வாழ்நாளை எண்ணியெண்ணி
இறுதிக் கணத்தை
கணிக்கயியலா
படுத்த படுக்கையாளன்
ஒருவன் அனிச்சையாக
உயிரை விட்டிருப்பான்
இறுதி மூச்சு எப்படி போனது
தெரியாத அளவில்
விலகுவதெனில்
நீ விலகிக் கொள்ளலாம்.

- இசைமலர்

Pin It