ஒவ்வொரு முறையும்
நோயின் கரங்கள்
கழுத்தை இறுகவே
பற்றிக் கொள்கிறது.

பிழைத்தலின்
பொருட்டு
வாழ்தலென்பது
அபத்தமெனவே படுகிறது.

கழுத்தை இறுக்கும்
விரல்களிலிருந்து
விடுபட விழைதலென்பதோ
மென்மேலும்
சோர்வடையச் செய்கிறது.

சிட்டுக்குருவியின்
சிறகுகளில் சிடுக்குகளிலிருப்பது
அவஸ்தையன்றோ?

விட்டு விலகவும் இயலாமல்
வெட்டிப் பறக்கவும் முடியாமல்
விதியின் கரங்களிலாடும்
சதியாட்டத்தை ஒருபோதும்
சகிக்க இயலவேயில்லை.

பரந்த இப்பெரும்வெளி
இப்போதெல்லாம்
பாரமென போயிற்று.
நாட்களை நகர்த்துதலே
வாடிக்கையாகிற்று.

நோய்மையின்
பிடியிலிருந்து விடுவிக்கும்
தேவதூதனுக்கென
காத்திருக்கிறேன்.

சிரம் தொட்டு
வலி தீர்க்கும் நேரம்
தாமதமாகிக் கொண்டே போனால்..

ஒரு வேளை
உன் நாசியருகே
ஒரு நறுமணம்
தென்பட்டால்
திகைக்காதே..

காற்றிலே கலந்து போன
நான் உனைக் காண வந்திருப்பேன்.

- இசைமலர்

Pin It