புடவையிலிருக்கும் புத்தர்கள்
எப்போதும் கண்களை
இறுக மூடியே இருக்கிறார்கள்
மறந்தும் மூச்சு விடாத
தவங்களை வலியச் செய்வது
இசகு பிசகான இடங்களில்
சிக்கிக் கொள்வதால் தான்
அபாயகரமான வளைவுகளில்
நெளிந்து ஒளிந்து சமாளிப்பது
பெரும்பாடு- மானக்கேடு
துக்கம் தொண்டை அழுத்த
துச்சமென காலோரங்களில்
மடங்கிக் கிடக்கும் தன்னை
தானே காப்பாற்ற இயலாதது பற்றிய
பெருங்கவலையும் உண்டு
புடவை துவைக்கப் போடுகையில்
மொத்த தவங்களையும்
வலிமையாக்கி வேண்டுவது
எப்படியாவது அழிந்து போவதற்குத் தான்
தன்னை கொத்து பரோட்டா போட்டு
புடவைக்கு வடிவமாக்கிய
புத்தி கெட்டவன்
புதிதாய் செய்தே பழக்கப்பட்டவன்
வாங்கி அணிந்தவளோ புரட்சிக்காரி
எத்தனை முயன்றும் அழியா முகத்தோடு
தலையாட்டா பொம்மையாக
மீண்டும் அயர்னில் நீட் ஆகிவிட்ட
புத்தன்களுக்கு
நாளெல்லாம் இனி சிலுக்கு ஷைனிங் தான்
துவைச்சு தொங்க விடுவது
என்பது இது தான்
எனப் புரிகையில்
தோன்றுகிறது Mr.புத்தாவுக்கு
மூடிட்டு கண்களைத் திறந்து கொண்டு
யசோதரையோடே இருந்திருக்கலாம்....!

- கவிஜி

Pin It