விரித்த குடையை
பிரித்த மடலை
மடக்குதல் போல
நொடிக்குள்
அடக்கமுடிவதில்லை
புன்னகையை.
இதழ்கள் மட்டுமே
விரியும் புன்னகை
பழக்கமில்லாததால்
வெள்ளுடையில்
கசிந்துவிடுகிற
மாதவிலக்கின்
உதிரத்தைக் காட்டிலும்
பதற்றத்தை அதிகமாக்கி விடுகிறது
கால் வினாடி அதிகம்
கசிந்துவிடக் கூடிய
ஒரு புன்னகை.
எதிர்ப்பட்ட
எவரோ ஒருவர்
மீது சற்று
ஈசிவிட்ட
மீதமிருந்த அந்தப் புன்னகையை
தொட்டுத்தான்
எழுதப்படுகிறது
பெண்மைக்கான தீர்ப்பு.
ஏற்றப்படுகிறது
வடிவமைக்கப்பட்ட கற்பில்
ஒரு முள்கிரீடம்!
ஒற்றை தங்கமீன்
உலாவும்
கண்ணாடிக் கோப்பையை
கையாளும் கவனத்துடன்
விரியும் புன்னகையில்
கல்லெறிவோர் பொருட்டே
நெய்யபடுகிற ஞெகிழிப் புன்னகைகளும்
காதறுந்து தொங்கிடுகிற
பொழுதுகள்
நினைவில் அலைமோத
உவகையோடு
அணிந்து கொள்கிறேன்
முகக்கவசம்.
ஆம் முகக்கவசம்
பல தீநுண்மிகளில் இருந்து
நம்மைக் காக்கிறது.

- மைதிலி கஸ்தூரிரங்கன், புதுக்கோட்டை

Pin It