பாழியாக்கப்பட்ட நிலத்தின்மிசை
ஊழிப்பேரலையில் உப்புசப்பு ஏதுமற்று
மிதந்து வந்தது ஒரு கஞ்சிக்கலயம்!
வாய் அதை மறுக்க,
பாழும் வயிறு மறுப்பை மறுக்க,
நாக்கிற்கும் மூக்கிற்கும்
ஆங்கிடமே இல்லை இல்லை.
ஆங்கொரு சுற்றத்தின் பிணவாடை!
மூக்கின் ஏக்கம் ஓரளவு தீர,
ஆங்காங்கு தளிராமல் மடிகிற
கொழுந்தின் பெருஓலம் காதையும் வந்தடைந்தது.
சட்டென மூடித்திறந்த இமைகளின் ஓரம்
தேம்பியதால் தேங்கிக் கிடந்த
உவர்நீர் வந்து நாக்கை நனைத்தது.
பத்தாதென்று,
வெடித்துக் கொண்டிருக்கும் நிலத்தில்
எழுந்த மணலைக் கடிய காற்றொன்று
அள்ளிவந்து நாக்கைக் கடந்து வாயிலே இறைத்தது.
மேகக் கூட்டத்திக்கு அன்று பஞ்சமில்லை.
அக்கினி மழையை வாரி இறைத்து
வல்லாண்மை கொண்டிற்று!
புலன்களும் பூதங்களும் மாறி மாறி
பழி தீர்த்துக் கொண்டன.
காலம் கடந்த பதின்மூன்றாம் ஊழியிலும்
கஞ்சிக்கலயம் மட்டும் இன்னும் மாற்றங்கொள்ளவில்லை.

- ஜெ.கார்த்திக், கரூர், தமிழ்நாடு

Pin It