திடும்மென
அகல் விளக்கை
அணைத்துக் கொண்டாய்
மெஸ்மரிச புன்னகையைத்
தருவதில்லை என்பது
உன் முடிவாக இருக்கலாம்
சிரிப்புமில்லை
அழுகையுமில்லை
உன் குறுஞ்செய்தியில்
செய்தி சுருக்கம் கூட இல்லை
தூரத்து நிலவை
ஒளித்து வைக்க படும் உன் பாட்டை
நான் தெரியாமலில்லை
வந்தமரும் பறவையெல்லாம்
எழுந்து பறக்கக் கூடாது
என்பதெல்லாம்
என் தத்துவத்திலும் இல்லை
இலையுதிர் காலத்தில்
மரம் உதிர் நிழல்
அபூர்வம் தான்
சொல்லாத காதலின் வழி
அத்தியாயங்கள் அற்று
ஒற்றை இரவெனக் கிடக்கிறது
கிடக்கட்டும்
வெளிச்சமற்று என்ன செய்வான்
என யோசிக்காதே
இருள் தூதுவனுக்கு
நட்சத்திரங்களுக்கா பஞ்சம்....!

- கவிஜி

Pin It